அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை தொடங்கிய பைபாஸ் அறுவை சிகிச்சை 5 மணி நேரத்துக்கு பிறகு முடிந்தது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
காவேரி மருத்துவமனையின் 7-வது தளத்தில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பின் 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலும், 7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிலும் செந்தில் பாலாஜி இருப்பார் என கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அவருடைய இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் இருந்த 4 அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல் நிலையை மருத்துவக் குழு ஒன்று தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூன் 13-ம் தேதி செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனையிட்டனர். சோதனை நடந்த அன்று இரவே செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிலையில் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் இதயத்துக்கு செல்லும் 3 ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்தனர். காவேரி மருத்துவமனையில் வைத்து இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவர் அங்கு அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முந்தைய பரிசோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.