தமன்னா, சினிமாவில் நடிக்க வந்து ஏறக்குறைய 20 வருடங்களாகிவிட்டன. ஆனால் இதுவரையில் அவர் எந்த சர்ச்சையிலும் சிக்கியது இல்லை.
ஆனால் இப்போது அவருக்கு மகாராஷ்ட்ரா சைபர் செல் சம்மன் அனுப்பி இருக்கிறது. நீங்கள் எங்கே இருந்தாலும், வருகிற ஏப்ரல் 29-ம் தேதி நேரில் வந்து ஆஜராக வேண்டுமென மகராஷ்ட்ரா சைபர் செல் கூறியிருக்கிறது.
தமன்னா அப்படி என்ன செய்துவிட்டார்?
இந்தியாவில் அதிகம் கொண்டாடப்படும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை ஃபேர்ப்ளே என்னும் பெட்டிங் செயலியில் சட்டவிரோதமாக ஒளிப்பரப்பினார்கள். இது நடந்தது 2023-ல். இந்த ஃபேர்ப்ளே செயலியானது மஹாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை நிறுவன செயலி ஆகும். இப்படி ஐபிஎல் போட்டிகளை ஃபேர்ப்ளே செயலியில் சட்டவிரோதமாக ஒளிப்பரப்பியதால், ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றிருக்கும் வியாகாம் நிறுவனத்திற்கு எக்கச்சக்கமான இழப்பு என்பதால், அந்நிறுவனம் புகார் செய்திருக்கிறது.
பெட்டிங் செயலியில் ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்பியதால், அந்த செயலியின் விளம்பரங்களில் நடித்த தமன்னா, சஞ்சய் தத் ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது மகாராஷ்ட்ரா சைபர் செல். இப்படி ஃபேர்ப்ளே செயலியில்
வருகிற ஏப்ரல் 29-ம் தேதி தமன்னா விசாரணைக்கு வந்தப்பிறகு தான் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும். தற்போது வெளிநாட்டில் இருப்பதால் தன்னால் உடனடியாக விசாரணைக்கு வரமுடியாது என்று சஞ்சய் தத் கால அவகாசம் கேட்டிருக்கிறார்.
பணத்திற்காக விளம்பரங்களில் நடிப்பது என்பது வழக்கம்தான். ஆனால் இப்போது சட்டவிரோதமான செயல்களில் விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள் இறங்குவதால், விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்க விரும்பும் பிரபலங்கள் அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மையைத் தெரிந்து கொண்ட பின்பே நடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழ ஆரம்பித்திருக்கிறது.
தலையில் அடி வாங்கிய விஜய்
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘க்ரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெற்றது. இங்கு ஆக்ஷன் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். இந்த ஷுட்டிங்கை முடித்துவிட்டுதான் விஜய் இங்க தேர்தலில் வாக்களிக்க வந்தார். தேர்தலுக்குப் பிறகு இப்போது சென்னை ஷூட்டிங் நடந்து வருகிறது.
விஜய் வாக்களிக்க வந்த போது அவர் நடந்த விதமும், தோற்றமும் சமூக ஊடகங்களில் விவாத பொருளாகின.
இதற்கு பின்னணியில் ஒரு பெரும் விபத்து இருப்பதாக கூறுகிறார்கள்.
ரஷ்யாவில் ஆக்ஷன் தொடர்பான காட்சிகளை எடுக்கும் போது, டூப் போட்டு எடுக்கலாம் என வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். ஆனால் விஜய் அந்த யோசனையை மறுத்துவிட்டாராம். டூப் போடாமால் நானே நடிக்கிறேன் என விஜய் அடம்பிடிக்க, வேறுவழியில்லாமல் விஜயை வைத்தே சண்டைக்காட்சிகளை ஷூட் செய்திருக்கிறார்கள்.
அப்போது நடந்த சிறு விபத்தில் விஜய்க்கு அடிப்பட்டு இருக்கிறது. தலையில் அடிப்பட்டதோடு, கை, கால்களிலும் சின்ன சின்ன சிராய்ப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. இதனால் பதறிப்போன கோட் குழு விஜயை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள். அங்கு தேவையான முதலுதவியை எடுத்து கொண்டு விஜய் சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார் என்கிறார்கள்.
இதனால்தான் வலியின் காரணமாக தனது தலையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் வாக்களிக்க விஜய் வந்தார் என கூறுகிறார்கள்.