இனி காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். புதிதாக காசா மீது தாக்குதல் நடத்தினால் அதனை வேடிக்கை பார்க்கமாட்டோம். இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்போம் என்று பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் அதிரடியாக அறிவித்துள்ளது. இது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், கனடா நாடுகளின் இந்த திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன? என்பது பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான மோதல் என்பது போராக வெடித்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேல் மக்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதையடுத்து காசா மீது போரை தொடங்கியது இஸ்ரேல். இந்த போர் இடைவிடாமல் 15 மாதங்கள் நடந்து வந்தது. அதன்பிறகு கடந்த பிப்ரவரியில் ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டது. இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளையும், ஹமாஸ் பணய கைதிகளையும் விடுவித்தது.
ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறியதுபோல் பணய கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவில்லை என்று மீண்டும் இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் தற்போது மீண்டும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அதோடு பல லட்சம் பேர் காசாவை காலி செய்து சென்றுள்ளனர். இன்னும் சொல்லப்போனால் தற்போது காசா நகரமே உருக்குலைந்துவிட்டது. இஸ்ரேலின் தாக்குதலில் காசா நகரம் அழிவின் விளிம்பில் உள்ளது.
இந்நிலையில் தான் காசா மீதான புதிய தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இதற்கான புதிய ஆபரேஷனை கடந்த 16 ம் தேதி இஸ்ரேல் அறிவித்தது. இதுதொடர்பாக நேற்றைய தினம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛காசாவை முழுவதுமாக இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க உள்ளது. இதற்கான புதிய ஆபரேஷன் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பு என்பது பல நாடுகளை கோபப்படுத்தி உள்ளது. குறிப்பாக காசா மீதான இஸ்ரேலின் புதிய தாக்குதல் என்பது அங்கு கடும் பஞ்சாயத்தை ஏற்படுத்தும். பொதுமக்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்காமல் போகும் வாய்ப்பை உருவாக்கும் என்று சர்வதேச எக்ஸ்பர்ட்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பொதுவாக காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் நெதன்யாகுவின் இந்த புதிய அறிவிப்பால் மேலும் சில முக்கிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பி உள்ளன.
அதன்படி பிரிட்டன், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை வார்னிங் செய்துள்ளன. காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக கைவிட வேண்டும். புதிய ஆபரேஷன்களை காசாவில் இஸ்ரேல் தொடங்க கூடாது. இஸ்ரேல் மக்களுக்கான உதவிகளை தடுக்க கூடாது. மீறினால் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்குவோம் என்று பிரிட்டன், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் திடீரென அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக பிரிட்டன் அரசுடன் இணைந்து கனடா, பிரான்ஸ் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‛‛காசா மக்களுக்கான மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்கு இஸ்ரேல் அரசு அனுமதி மறுத்துள்ளது. இது ஏற்று கொள்ளக்கூடியது அல்ல. அதோடு இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் அபாயமாக இருக்கிறது. காசாவின் மேற்கு கரையில் குடியேற்றத்தை விரிவுப்படுத்தும் முயற்சிகளை நாங்கள் எதிர்க்கிறோம்.
இதை மீறும் பட்சத்தில் நாங்கள் இலக்காக வைக்கப்பட்டுள்ள தடைகள் மட்டுமின்றி பிற நடவடிக்கைகளையும் கூட எடுக்க தயங்கமாட்டோம். பயங்கரவாதத்துக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கை, இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருக்கிறோம். ஆனால், இப்போதைய மோதல் என்பது முறையற்றதாக இருக்கிறது. இது தொடரும் பட்சத்தில் நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காசாவுக்கான மருத்துவ உதவி, உணவு, எரிபொருள் சப்ளையை கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தியது. ஹமாஸ் இன்னும் சில இஸ்ரேலியர்களை பணைய கைதிகளை விடுவிக்கவில்லை. இந்த பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருக்கு பிரஷர் போடும் வகையில் இஸ்ரேல் மனிதாபிமான உதவிகளை தடுத்து நிறுத்தி உள்ளது.