2ம் உலகப்போர் நடந்த சமயம். சென்னையின் மீது ஜப்பான் படைகள் குண்டு வீசும் நிலையில் அதிலிருந்து தப்பிக்க சென்னை கடற்கரையிலிருந்து யோகிபாபு தனது பாட்டியுடன் கடலுக்குள் செல்கிறார். கரையில் தனது தம்பியை பிரிட்டிஷ் காவலர்கள் சிறைபிடிக்க, அவரை மீட்க முடியாமல் தவிப்புடன் கடலுக்குள் செல்கிறார்.
அதே படகில் கர்ப்பிணியான தெலுங்கு பெண் மதுமிதா எட்டு வயது மகன், புரட்சிக்காரர் எம்.எஸ்.பாஸ்கர், ஆங்கில அதிகாரி ஒருவர், சேட்டு சாம்ஸ், சாரா என்று 9 பேர் பயணிக்கிறார்கள். இவர்கள் மீண்டும் கரைக்கு வந்தார்களா படகில் செல்பவர்களின் நிலை என்ன என்பது பற்றி நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சிம்பு தேவன்.
சுதந்திர இந்தியாவுக்கு முன்பிருந்த சென்னையிலிருந்து கதை தொடங்குகிறது. யோகிபாபு சென்னை மீனவராக நடித்திருக்கிறார். புதிய கதாபாத்திரம். செம்மையாக செய்திருக்கிறார். அவரை வைத்து சென்னை மண்ணின் மைந்தர்களை நகரை விட்டு வெளியில் குடியேற்றியதை பற்றி சிம்பு தேவன் பேசியிருப்பதும், சாதிய, மதவாத, அடிமை அரசியல் குறித்து திரைக்கதையில் விளையாடியிருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர் லைப்ரரியன் என்ற பெயரில் ஏறி பயணித்து சுபாஷ் சந்திரபோஸ் படை வீரர் என்று மடிவது நெகிழ்ச்சி. சாம்ஸ் தன் வீட்டின் பத்திரத்தை வாங்க வந்த கதையை சொல்லி கலங்குகிறார். மதுமிதா அரைகுறையான தெலுங்கு பேசி இரக்கம் தேடுகிறார். இடையில் சுறா மீன் படகை தாக்க வருகிறது. அதிலிருந்து தப்பித்தால், படகில் ஓட்டை விழுந்து தண்ணீர் நுழைகிறது. அதில் பெரிய சிக்கல் வருகிறது. யாராவது 2 பேர் இறங்கினால்தான் படகில் இருக்கும் பலரும் தப்பிக்க முடியும். என்ற நிலையில் பதட்டத்தை ஏற்படுத்தி படம் முடிகிறது.
கடல் பகுதியாக காட்டப்படும் சில காட்சிகள் பிரமிப்பாக இருக்கிறது. யோகிபாபு நடிப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது. தனது சமூக கருத்தை குறியீடாக சில பாத்திரங்கள் மூலம் சிம்புதேவன் காட்டியிருப்பது சிறப்பு. சின்னி ஜெயந்த் பிராமணராக பேசும் வசனம் கவனத்துடன் கையாளப்பட்டிருக்கிறது. மாதேஷ் மணிகண்டன் ஒளிப்பதிவு அழகாக இருக்கிறது. ஜிப்ரானின் இசையில் கர்நாடக இசையில் சென்னை பாஷை பாடல் ரசிக்கலாம். தொடர்ந்து ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசிக்கொண்டேயிருப்பதால் நாடகம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.