சமீபத்தில் பரபரப்பை கிளப்பிய காகம் – பருந்து பஞ்சாயத்தில் ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த அஜித் ரசிகர்களையும் கொந்தளிக்க வைத்தது சிரஞ்சீவியை வைத்து ‘போலா ஷங்கர்’ என்ற படத்தை இயக்கியிருக்கும் மெஹர் ரமேஷின் கமெண்ட்.
‘போலா ஷங்கர்’ தமிழில் அஜித் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்.
“‘வேதாளம்’ படத்தைப் பார்த்த உடனேயே அதில் காட்டப்பட்ட அண்ணன் தங்கை பாசம் ரொம்பவே பிடித்திருந்தது. அதனால்தான் சிரஞ்சீவியை வைத்து ரீமேக் செய்ய விரும்பினேன்.
ஆனால் தமிழில் வந்த வேதாளம் 10 மடங்கு க்ரிஞ்ச் ஆக இருந்தது. அதனால் கதையின் கருவை மட்டும் எடுத்து கொண்டு 60 முதல் 70 சதவீதம் வரை திரைக்கதையை மாற்றியமைத்து இருக்கிறோம்” என்று மெஹர் ரமேஷ் கூறியதுதான் இங்கே அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்பை கிளப்பியது.
இந்நிலையில் ‘போலா ஷங்கர்’ படம் ஆகஸ்ட் 11-ம் தேதி அதாவது இன்று வெளியாகிவிட்டது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவியும், லட்சுமி மேனன் நடித்த தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷூம், அட்வகேட் கதாபாத்திரத்தில் தமன்னாவும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப்பட த்தை பார்த்த ரசிகர்கள் இப்போது ஒரு ஹிட் படத்தை ரீமேக் செய்யும் போது இவ்வளவு மோசமாக எடுக்கமுடியுமா என்று கிண்டலடித்து வருகிறார்கள்.
60 முதல் 70 சதவீதம் திரைக்கதையை மாற்றியிருப்பதாக மெஹர் கூறினாலும், படம் ரொம்பவே பின்னோக்கி இருக்கிறது. இன்றைய சூழலுக்கான களமாக இல்லை. வென்னிலா கிஷோர், அன்னி மாஸ்டர் பண்ணும் காமெடி எல்லாமே ட்ராஜெடியாக இருக்கிறது. ரசிக்க முடியவில்லை.
திரையில் சிரஞ்சீவியின் ஆதிக்கமும், இரண்டாம் பாதியில் இடம்பெறும் ப்ளாஷ்பேக் காட்சிகளும் மட்டுமே படத்திற்கு ப்ளஸ். அதரபழசான கதை, மோசமான டைக்ரக்ஷன், சுவாரஸ்யமில்லாத கதை சொல்லும் விதம் என படம் தேறவில்லை என்று விமர்சனங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.
இதனால் இப்பொழுது இணையத்தில் மெஹர் ரமேஷை ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்.
சன்னி லியோனின் காஸ்ட்லி கண்ணீர்!!
சன்னி லியோனை தெரியாத அழகை ஆராதிக்கும் ப்ரியர்கள் இருக்கமாட்டார்கள். அப்பட்டமான அழகில் கிறங்கடிக்கும் சன்னி லியோன், தமிழ், தெலுங்கு சினிமாவிலும் அவ்வப்போது ஒரு ரவுண்ட் அடிக்கிறார்.
மும்பையில் கொட்டித்தீர்த்த ஒரு அடை மழை, சன்னி லியோனின் கண்களில் கண்ணீரை தளும்ப வைத்திருக்கிறது.
மும்பையில்தான் நான் செட்டிலானேன். கடற்கரைக்கு பக்கத்திலேயே என்னோட வீடு. ஆனால் அந்த காத்து, வெயில் எல்லாம் இதமா இருந்துச்சு. அதை நான் ரொம்பவே என்ஜாய் பண்ணினேன்.
எனக்கு மழை ரொம்ப பிடிக்கும். எனக்கு வெளியே போகிற அளவுக்கு வேலை எதுவும் இல்லைன்னா மழை பெய்யுறது ரொம்ப பிடிக்கும்.
அப்போ இங்கே மழை வானத்துல இருந்து இப்படி கொட்டும்னு எனக்குத் தெரியாது. என்னோட வீட்டு சுவர்கள்ல நீர் கோர்த்து கொண்டு வர ஆரம்பிச்சிடுச்சு. அந்தளவுக்கு ஈரப்பதம் இருந்துச்சு.
வெளுத்து வாங்குன மழையால் என்னோட காஸ்ட்லியான மூணு கார்கள் நாசமா போச்சு. ஒரே நாளுல ரெண்டு கார்கள் மழைத்தண்ணியில வீணா போச்சு. இந்தியாவுல் வெளிநாட்டு காரை இறக்குமதி செய்யணும்னா நீங்க எக்கசக்கமா வரி கட்டணும். மழையில் வீணா போன கார்கள்ல என்னோட எட்டு சீட்டர் மெர்சிடிஸ் பென்ஸ் ட்ரக்கும் ஒண்ணு. இங்கே இருக்குற சூழல் தெரியாம காஸ்ட்லியான காரை வாங்கிட்டேன். அதனால எனக்கு ரொம்ப நஷ்டம்’’ என்று தளும்பும் சன்னியின் கண்ணீர் கொஞ்சம் காஸ்ட்லிதான்.
வில்லன் ஆனார் கமல்!!
நான்காண்டுகளாக சினிமாவில் நடிக்காமலேயே இருந்த கமல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் சில பல கோடிகளை வாங்கிக்கொண்டு கேமராவுக்கு முன் வந்து நின்றார்.
இதனால் கமலுக்கு மார்க்கெட் இருக்கிறதா இல்லையா என்ற குசும்புத்தனமான அரட்டைகளும் அவ்வப்போது அரங்கேறின.
அந்த சமயத்தில்தான் பட்டென்று ‘விக்ரம்’ படத்தில் நடித்தார். கமல் தனது சினிமா கேரியரில் இதுவரை பார்த்திராத வசூலை அள்ளிக்கொடுத்தது. கமலின் மார்க்கெட் நிலவரம் கெத்து காட்டியது.
நீண்ட நாட்களாகவே கிடப்பில் கிடந்த ‘இந்தியன் 2‘ படத்தின் வேலைகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டது. இப்பொழுது ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது இருக்கும் மார்க்கெட் நிலவரத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார் கமல். இதனால்தான் பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898ஏடி [Kalki 2898AD] படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அமிதாப் பச்சன், திபீகா படுகோன், திஷா பதானி என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக பிரம்மாண்டமான செட் போடப்பட்டிருக்கும் ரமோஜி ராவ் ப்லிம் சிட்டியில் அடுத்த வாரம் ஷூட்டிங் தொடங்குவதால், கமல் அடுத்த சில நாட்கள் ஹைதராபாத்வாசியாக மாறவிருக்கிறார்.
இந்தப்படத்தில் பிரபாஸூக்கும், கமலுக்கும் இடையே இருக்கும் மோதல் காட்சிகளில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அதிகமிருக்கிறது. இதனால் இதற்கு மட்டுமே பெரும் பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
இந்தியன் – 2 வெளிவந்த சில வாரங்களிலேயே இந்த படமும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.