இந்திய அரசியல் கட்சிகளின் 2023-24-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தங்கள் இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டிருக்கு. இதில் கடந்த நிதியாண்டில் அதிக நிதி பெற்ற கட்சியாக பாஜக இருக்கு.
2023 – 2024 நிதியாண்டுல பாஜக 4,340 கோடி ரூபாய் நிதி வாங்கியிருக்கு. கடந்த 2022 – 2023-ல இது 2,360 கோடியா இருந்துச்சு. கடந்த ஆண்டு கிடைச்ச நிதியில 1,685.6 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலமா பாஜக வசூல் செஞ்சிருக்கு. இதன்மூலம் தேர்தல் பத்திரம் மூலமா மிக அதிக நன்கொடையை வசூலிச்ச கட்சியா பாஜக இருக்கு.
இதைத்தவிர வட்டி மூலம் ரூ.37.92 லட்சம், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி மூலம் ரூ.368.65 கோடி, பிற வருவாய் மூலம் ரூ.1.57 கோடி அந்த கட்சிக்கு கிடைச்சிருக்கு. கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்த சூழல்ல, பாஜகவுக்கு அதிக அளவு நிதி சேர்ந்தது இந்த அறிக்கை மூலமா தெரியவந்திருக்கு.
பாஜகவின் செலவுகளைப் பொறுத்தவரை பணியாளர்களுக்கான ஊதியமா ரூ.73.52 கோடி, நிர்வாகச் செலவு ரூ.349.71 கோடி, நிதிச் செலவு ரூ.56.38 லட்சம், தேர்தல் செலவு ரூ.1,754 கோடியாகவும், இதர செலவு ரூ.3.21 கோடின்னு கடந்த நிதியாண்டுல மொத்தம் 2,211 கோடி ரூபாயை செலவிட்டிருக்கு. இதில் தேர்தல் செலவுகளில் விளம்பரத்துக்காக மட்டும் 591.39 கோடி ரூபாயை செலவிட்டிருக்கு.
பாஜகவுக்கு அடுத்தபடியா காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டு அதிக நன்கொடைகளை வாங்கி இருக்கு. 2023-2024-ஆம் ஆண்டில் அந்தக் கட்சி 1,129.66 கோடி ரூபாயை நன்கொடையைா வாங்கி இருக்கு. அதற்கு முநதைய நிதியாண்டைக் காட்டிலும் இது 320 சதவிகிதம் அதிகம். இந்த நன்கொடைகளில் 73 சதவீதம் தேர்தல் பத்திரம் மூலமா கிடைக்கப் பெற்றிருக்கு. அந்தக் கட்சியோட கடந்த ஆண்டுச் செலவு 619.67 கோடி ரூபாய்.