தூத்துக்குடி அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. அவரின் மகன் கிட்டான். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு கபடி என்றால் உயிர். ஆனால் ஜாதியால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார். அந்த கிராமத்தில் பாண்டியராஜா, கந்தசாமி என இரண்டு கோஷ்டி இருக்கிறது. அவர்களின் ஆதரவாளர்களுக்கு பழிவாங்குவது என்றால் கொலை தான்.
இப்படியொரு கிராமத்தை சேர்ந்த கிட்டானுக்கு இந்தியாவுக்காக கபடி விளையாட வேண்டும் என்கிற ஆசை. ஊர் பிரச்சனையில் தலையை கொடுக்காமல் ஒதுங்கி வாழ விரும்பும் கிட்டானுக்கு இந்திய அணியில் எளிதில் இடம் கிடைத்துவிடவில்லை. 1994ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிட்டானுக்கு கிடைக்கிறது. ஆனால் ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பல மேட்ச்சுகளில் கிட்டானை விளையாடவிடாமல் வேடிக்கை மட்டும் பார்க்க வைப்பதுடன் படம் துவங்கியிருக்கிறது. கிட்டானுக்கு விளையாட வாய்ப்புக் கிடைத்ததா ? கிட்டான் சந்தித்த சமூக பழி வாங்கல் என்ன என்பதை மீண்டும் அதிரும்படி சொல்லியிருக்கிறார் இயக்குனர் மாரி. செல்ச்வராஜ்.
துருவ் விக்ரம் கிட்டான் என்ற கதாபாத்திரத்தின் உள்ளே தன்னை ஒடுக்கிக் கொண்டு, படம் முழுவதும் திமிறிக்கொண்டு நிற்கிறார் ஒரு ஜல்லிக்கட்டு காளையைப் போல. பள்ளி மாண்வனாக வகுப்பறைக்குள் தொடங்கி கபடி களம் வரைக்கும் அப்பாவி இளைஞனாக அவர் காட்டிய முகபாவம் படம் முடிந்த பின்னும் நம் மனதில் ஒட்டிக்கொண்டு விடுகிறது.
நான் எங்கப்பா போக இது நம்ம வீடுதானே என்று கேட்கும் போது நமக்கும் பரிதாபம் வருவதை தவிக்க முடியவில்லை. கபடி களத்தில் புழுதி பறக்க விடும் அவரை வயல் வெளியில் வைத்து கையை உடைக்கும் ஆதிக்க மூர்க்கர்களின் அரசியல் வெட்கப்பட வைக்கிறது.
ஜப்பானில் விளையாட விடாமல் உடக்காவைக்கும் காட்சியில்ருந்து படத்தை தொடங்கியிருப்பது மாரி செல்வராஜின் அசாத்திய திறமை.
வேலுச்சாமியாக பசுபதி மனம் கவர்கிறார். சாமியாட்டமும். பேசுந்தில் நடக்கும் கலவரமும், தான் சந்தித்து வந்த ஜாதிய சிக்கலுக்குள் தன் மகனும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்கிற பதட்டத்தையும் காட்டியிருக்கும் இடங்கள் அருமை.
இணையான கதாபாத்திரம் கந்தசாமியாக லால் அசத்தியிருக்கிறார். பாண்டியராஜனாக அமீர் மிரட்டியிருக்கிறார். இயக்குனர் யாரை நினைத்து அவர் பாத்திரத்தை வடிவமைத்தாரோ அவரை, கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். அப்படியொரு அட்டகாசம். அவரை சூழந்திருக்கும் சூழச்சி அறியாமல் மாட்டிக்கொள்ளும் இடம் அதிரடியாக இருக்கிறது.
ரஜிஷா விஜயன் அனுபமா பரமேஷ்வரன் இன்னும் சில கதாபாத்திரங்கள் மனதைத் தொடுகிறது. அழகான கவிதையாக அதே சமயம் ரத்தவரிகளில் எழுதியிருக்கும் மாரி செல்வராஜுக்கு விருது நிச்சயம். கிராமத்தின் காணாமல் போன கலாச்சார விழுமியங்களை மீண்டும் திரையில் பார்க்க வைத்திருக்கிறார்.
நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை படத்திற்கு இன்னொரு பலமாக இருக்கிறது. எழில் அரசின் ஒளிப்பதிவு பாராட்டும்படி இருக்கிறது.
நல்ல படைப்பிற்கு தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரிக்கும். காள மாடனுக்கும் சிவப்பு கம்பளம் காத்திருக்கிறது.