தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நெடுந்தொடர்களுக்கு பெரும் வரவேற்பு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நெடுந்தொடர்களால்தான் தொலைக்காட்சிகள் டிஆர்பி ரேட்டிங்கில் சொல்லுமளவிற்கு ரேட்டிங்கை பெற்று வருகின்றன.
இந்த தொடர்கள் தவிர்த்து ஒரு சில ரியாலிட்டி ஷோக்களுக்கும் மக்களிடையே வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் இடம்பெறும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பிரபலமாக, அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலும் ஒரு காரணம்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள், நிகழ்ச்சியில் பாதியில் கிளம்பினாலும், முழுமையாக போராடி டைட்டில் வாங்கினாலும் அவர்களுக்கு ஒரு பெரும் வாழ்க்கை வெளியே காத்திருக்கிறது என்று அடிக்கடி கமல் பில்டப் கொடுப்பது உண்டு. அவர்கள் மக்கள் மத்தியில் தவிர்க்கவே முடியாத பிரபலங்கள் ஆகிவிடுவார்கள் என்கிற ரீதியில் கமல் சொல்லும் வார்த்தைகள் இதுவரையில் பலித்ததாக தெரியவில்லை.
7 ஆண்டுகால பிக்பாஸ் போட்டிகளில் கலந்து கொண்ட ஒரு சிலர் மட்டுமே இப்போது திரைத்துறையில் தலையெடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஹரீஷ் கல்யாண், கவின் இவர்கள் இருவர் மட்டுமே சொல்லிக்கொள்ளுமளவிற்கு படங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், சமீபத்தில் முடிந்த 7-வது பிக்பாஸ் சீசனில் ஜெயித்தவர் சின்னத்திரையில் நடிப்பவரும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கும் அர்ச்சனா. இவர் ஜெயித்ததே உள்ளடி வேலைப் பார்த்துதான் என்று ஒரு பேச்சு இன்றும் அடிப்படுகிறது.
மக்கள் போடும் ஓட்டுகளின் அடிப்படையில்தான் வெற்றி பெறுவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அந்த தொலைக்காட்சி சார்பில் கூறப்படுகிறது. இந்த ஓட்டு விஷயத்தில்தான் அர்ச்சனா தன்னுடைய பப்ளிக் ரிலேஷன் குழுவை வைத்து ஒட்டுகளை வாங்கிவிட்டார் என்று ஒரு கிசுகிசு நிலவுகிறது.
பிக்பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனாவை கதாநாயகி ஆக்கும் வேலையை இப்பொழுதே ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்படி அர்ச்சனாவை ஹீரோயினாக்கும் ஆசையில் இருந்தவர்களுக்கு அர்ச்சனாவின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறதாம்.
கதை சொல்ல ஆர்வத்தோடு இருப்பவர்கள் செய்யும் முதல் வேலை, அர்ச்சனாவின் போனுக்கு ஒரு செய்தி அனுப்புவதுதான். இயக்குநர் யார், தயாரிப்பு நிறுவனம் பெயர் உட்பட பல தகவல்களை அனுப்பினாலும், அர்ச்சனாவிடமிருந்து உடனடியாக பதில் வருவது இல்லை.
ஒரு நாள் கழித்து, அர்ச்சனாவின் மொபைலில் இருந்து ப்ளீஸ் காண்டாக்ட் என்று அவருடைய கால்ஷீட்டை கவனித்து கொள்பவரின் எண் கொடுக்கப்படுகிறதாம்.
அதாவது நீங்கள் யாராக இருந்தாலும் அர்ச்சனா போனில் பேசமாட்டார். அதன்பிறகு அவர் அனுப்பும் எண் யாருடையது? அவர் யார்? அவர் ஆணா பெண்ணா? என ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்வது இல்லையாம்.
இதைத் தாண்டியும், சிலர் அந்த கால்ஷீட் மேனேஜருக்கு போன் செய்தால், ஒரு பெண் பேசுகிறாராம். அவர் காஸ்டிங் மேனேஜர் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறாராம்.
’அடுத்து, நான் இன்னொரு படத்திற்கு காஸ்டிங் மேனேஜர் ஆக வொர்க் பண்ணிட்டு இருக்கேன். அந்தப் படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்குது. அப்புறம் ஒரு மாசம் நான் பிஸி. அதனால டைரக்டரை பேச சொல்லுங்க. நேரம் அதிகம் இல்லாததால அவர் ஒன் லைனை மட்டும் சொன்னா போதும். அப்புறம் மத்ததைப் பத்தி பேசிக்கலாம்.’ என்று சொல்கிறாராம்.