திருநெல்வேலி புளியங்குளம் கிராமத்தில் வஞ்சகமற்று வளரும் பள்ளி சிறுவன் சிவனைந்தன். அவனது அம்மா, அக்கா ஆகியோருடன் வசித்து வருகிறான். அங்குள்ள மக்களின் வாழ்வாதரமாக இருப்பது வாழை இறக்கும் தொழில்தான். வாழைத்தார் வெட்டி அதை லாரியில் ஏற்றி அனுப்புவதில் கிடைக்கும் பணத்தில்தான் வாழ்க்கையே நடத்துகிறார்கள்.
வாழைத்தார் தலையில் வைத்து சுமந்து லாரி ஏற்றுவது என்பது கடுமையான வேலையாக இருக்கிறது. வறுமையின் காரணமாக அதை பள்ளி விடுமுறை நாட்களில் சிவனைந்தனும் தனது நண்பன் சேகருடன் செய்து வருகிறான், அவனுக்கு சுமை கொடுக்கும் வலியால் வேதனை தாங்க முடியவில்லை. இதனால் சிறிய வயதில் கிடைக்கும் விளையாட்டு அனுபவம் கிடைக்காமல் போகிறது. சனி ஞாயிறும் பள்ளி இருந்தால் சுமை தூக்க போகாமல் இருக்கலாம் என்று நினைக்கிறான். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி அம்மா தரகரிடம் முன் பணம் வாங்கியிருப்பதால் கட்டாயம் சுமை தூக்க போக வேண்டிய நிலை.
இதில் வேலைக்கு ஆள் எடுக்கும் லாரி முதலாளியை எதிர்த்து கூலி உயர்வுக்காக குரல் கொடுக்கிறான் கலை. சிவனைந்தனுக்கு கலை என்றால் பிடிக்கும். அப்பா பயன்படுத்திய கம்யூனிஸ்ட் பேட்ஜை கலைக்குக் கொடுக்கிறான். அக்காவுக்கும் கலைக்கும் காதல் தூது போகிறான்.
இந்த நிலையில் கூலி உயர்வு கேட்டவர்களுக்கு ஒரு ரூபாய் உயர்த்திக் கொடுக்க சம்மதிக்கிறார் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த அந்த முதலாளி. ஆனால் அதை ஈடுகட்டும் விதமாக வாழைத்தார் ஏற்றி வரும் லாரியில்தான் உட்கார்ந்து போக வேண்டும் என்று உத்தரவிடுகிறார். இப்படி போகும் வாழ்க்கையில் புயல் சூழ்கிறது அது என்ன என்பதை தனது கலங்க வைக்கும் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் மாரி.செல்வராஜ்.
தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அழகான திரைக்கதையாக்கி நம் கண் முன் வைத்து விருந்து படைத்திருக்கிறார். சிறுவர்கள் பொன்வேல்,ராகுல் ஆகியோரின் வாழ்க்கையில் நடக்கும் பள்ளிப்பருவ சேட்டைகளை சுவாரஸ்யமான பகுதியாக்கி முதல்பாதி முழுக்க கலகலப்பாக கொண்டு போகிறார். இரண்டாம் பாதியில் உணர்ச்சிப்பூர்வமான கதையில் நம்மை கண்ணீர் குளத்தில் கரைக்கிறார்.
படத்தில் நடித்திருந்த அனைவரும் அதே கிராமத்தில் வாழும் மனிதர்களாகவே இருப்பதால் இன்னும் பலமாக அமைந்திருந்துகிறது. கூடவே நிஜ கலஞர்களான கலையரசன், திவ்யா துரைசாமி, ஜானகி, நிகிலா விமல் ஆகியோர் மாரி.செல்வராஜின் கற்பனைக்கு உயிர் கொடுக்க உதவியிருக்கிறார்கள்.
ரஜினி – கமல் காமெடி, டீச்சர் கர்ச்சீப், மருதாணி என்று படத்தில் ரிலாக்ஸ் செய்ய நிறைய இடங்கள் உண்டு. அழுத்தமான கதைக்கு இது அவசியம். அதேசமயம் நெஞ்சை உறைய வைக்கும் க்ளைமேக்ஸ் காட்சி நம்மை நிலையகுலைய வைக்கிறது. ஒரு விபத்துக்கு பின்னால் இருக்கும் வேதனை எத்தனை கொடுமையானது என்பதை இயக்குனராக மாரி.செல்வராஜ் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
அவருக்கு தோள் கொடுத்திருப்பது தேனி ஈஸ்வர் கேமரா. சந்தோஷ் நாராயணன் இசை. கிராமத்து மனிதர்களின் இன்னொரு பக்கத்தையும், அவர்களின் வேதனையையும் காட்டியிருக்கும் வாழை மரியாதைக்குரிய படைப்பு.