No menu items!

அரிசிகொம்பன் எங்க யானை! – கேரளாவில் போராட்டம்

அரிசிகொம்பன் எங்க யானை! – கேரளாவில் போராட்டம்

ஒருவருக்கு நல்லவராகத் தெரியும் நபர், மற்றொருவருக்கு கெட்டவராக தெரிவது இயற்கையின் வினோதங்களில் ஒன்று. பொதுவாக மனிதர்களுக்கு பொருந்தும் இந்த விஷயம் இப்போது அரிசிக்கொம்பன் யானை விஷயத்திலும் உண்மையாகி இருக்கிறது. அரிசிக்கொம்பனை வில்லனாக நினைத்து தமிழக வனப்பகுதி மக்கள் பயப்பட, அவனை நாயகனாக போற்றும் கேரள மக்கள், அதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்த அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் திங்கட்கிழமை அதிகாலை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கும்கி யானைகள் உதவியுடன் இந்த யானை பிடிக்கப்பட்டது. அங்கு பிடிபட்ட பிறகு நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதிக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட அரிசிக் கொம்பன், அங்கிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் அப்பர் கோதையாறு முத்துக்குளி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

இதில்தான் பிரச்சினை ஆரம்பம் ஆகியிருக்கிறது. கேரளாவில் உள்ள சின்னக்கனால், ஆடுவிழுந்தான்குடி, செம்பக்கா தொழு உள்ளிட்ட 5 பகுதிகளைச் சேர்ந்த பழங்குடி மக்கள், இப்போது அரிசிக் கொம்பனை கேரளாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சூரியநெல்லி, சிங்குகாண்டம் சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கம்பத்தில் இருந்து முத்துக்குளி வரை சுமார் 12 மணிநேரம் நிற்கவைத்து இந்த அர்சிக் கொம்பனை லாரியில் கொண்டு சென்றதைக் கண்டித்தும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரிசிக் கொம்பன் என்று அழைக்கப்படும் இந்த யானையை, கேரள மக்கள் அரிங்கொம்பன் என்று அழைத்து வருகிறார்கள். “கேரளாவின் சின்னக்கனால் பகுதியில் அரிங்கொம்பன் அமைதியாக இருந்தான். இப்பகுதி மக்களுக்கு அரிங்கொம்பனை மிகவும் பிடிக்கும். சந்தர்ப்பவசத்தால் அரிங்கொம்பன் தமிழ்நாடு வனப்பகுதிக்குள் செல்ல, அன்றிலிருந்து அவனுக்கு பிரச்சினைதான். அங்குள்ள வனத்துறையினர் அரிங்கொம்பனை கொடுமைப்படுத்தி வருகிறார்கள், இப்போது தமிழக கேரள எல்லையில் இருந்தும், அரிங்கொம்பனின் பிறப்பிடத்தில் இருந்தும் நெடுந்தூரம் கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அரிங்கொம்பனை மீண்டும் எங்கள் பகுதிக்கு கொண்டுவரும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்கிறார் செம்பங்காத்தொழு பகுதியைச் சேர்ந்த சுந்தரம்.

அப்படி அரிசிக்கொம்பனை தங்கள் பகுதிக்குள் மீண்டும் கொண்டுவந்து விடாவிட்டால் அடுத்த பொதுத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் இவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சாந்தன்பாரா பஞ்சாயத்து தலைவரான லிஜு வர்கீஸ், “தமிழக மக்களுக்கு வேண்டுமானால் அரிசிக்கொம்பன் அச்சுறுத்தும் மிருகமாக இருக்கலாம். ஆனால், எங்கள் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு அவன் நண்பன். எங்களுக்கு மீண்டும் அவன் தேவை” என்கிறார். தனக்காக இரு மாநிலங்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதை அறியாமல் கோதையாறு வனப்பகுதியில் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிறான் அரிசிக்கொம்பன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...