நீங்க கடைசியாக பார்த்து ரசித்த அனுஷ்கா படம் எது? கொஞ்சம் யோசித்து பாருங்கள். சட்டென நினைவுக்கு வராது.
ஆம்… பாகுபலிக்கு பின் அதிக படங்களில் அனுஷ்கா நடிக்கவில்லை. உடல் எடை, தனிப்பட்ட விஷயங்கள், திருமண ஏக்கம், சினிமா மீதான ஈர்ப்பு குறைவு போன்ற காரணங்களால் அவர் நடிக்காமல் இருந்தார். பல தயாரிப்பாளர், பல இயக்குனர்கள், பல ஹீரோக்கள் அணுகியபோதும் அவர்களுக்கு அனுஷ்கா கால்ஷீட் கொடுக்கவில்லை.
பாகுபலி 2-வுக்கு பின் நிசப்தம் என்ற படத்தில் அனுஷ்கா நடித்தார். அந்த படம் தியேட்டரில் வெளியாகவில்லை. அடுத்து மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலிஷெட்டி என்ற காமெடி படத்தில் நடித்தார். 2023-ல் வெளியான அந்த படம் விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும், பெரிதாக ஹிட்டாகவில்லை. இந்நிலையில், அனுஷ்கா நடித்த காதி என்ற படம் ஏப்ரல் 18-ல் வெளியாக உள்ளது.
இது தெலுங்கு படம் என்றாலும், அனுஷ்காவின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு தமிழ், இந்தி, கன்னடம், மலையாளத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. கிரிஷ் இயக்கி உள்ளார். விக்ரம்பிரபுக்கு முக்கியமான வேடம். தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த வானம் படத்தை இயக்கியவர் கிரிஷ்.
காதி படம், ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதை. ‘குயின்’ அனுஷ்கா நடிக்கும் என்றுதான் படக்குழு படத்தை விளம்பரப்படுத்துகிறது. படத்தின் டீசரை பார்த்தால் அவர் ஆக்ஷன் கேரக்டரில் நடிப்பதாக தெரிகிறது. இதற்குமுன்பு வெளியான பட பர்ஸ்ட்லுக்கில் கையில் சுருட்டு, முகத்தில் ரத்தக்கறையுடன் அனுஷ்கா காட்சி அளித்தார். லேட்டஸ்ட்டாக வெளியான கிளிம்ஸ் வீடியோவில் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான காட்டுப் பகுதிகள் வழியாக விக்ரம் காவல்துறையால் துரத்தப்படுகிற காட்சி அதைத்தொடர்ந்து அவர் வில்லன்களை எதிர்கொள்ளும் அதிரடி ஆக்சன் காட்சி காட்டப்படுகிறது.