97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இன்று காலை நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங் ஆகிய 5 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது அனோரா என்ற திரைப்படம்.
அதிரடி படங்களுக்கு மத்தியில் ஹாலிவுட்டில் மீண்டும் காதலை மையப்படுத்தி எடுத்த இப்படம் 5 விருதுகளை வென்றுள்ளது. ஒரு பாலியல் தொழிலாளி காதல் வசப்படும் கதையை விறுவிறுப்பாகவும், அழகியலோடும் இப்படம் சொல்லியிருக்கிறது.
ஆனி என்கிற அனோரா, ஒரு பாரில் ஸ்ட்ரிப் டான்ஸராகவும், பாலியல் தொழிலாளியாகவும் இருக்கிறார். அவள் அழகுக்கும், இளமைத் துடிப்புக்கும் பல ஆண்கள் அடிமையாகிக் கிடக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அனோராவின் வாடிக்கையாளராக வரும் வான்யா என்ற ரஷ்ய இளைஞன், அவள் மீது காதல் கொள்கிறான்.
அனோராவை ஒரு பாலியல் தொழிலாளியைப் போல் அல்லாது தன் காதலியாகவே பார்க்கிறான். தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அனோராவிடம் வான்யா கேட்கிறான். வான்யா தன் மீது செலுத்தும் அதீதமான அன்பினால் கவரப்படும் அனோராவும் அவன் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
வான்யாவின் பெற்றோருக்கு, தங்கள் மகன் ஒரு பாலியல் தொழிலாளியை திருமணம் செய்துகொண்ட்து பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த திருமணத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று உள்ளூர் பாதிரியார் டொரஸிடம் கூறுகிறார்கள். அதன்பிறகு என்ன நடந்தது? அனோராவின் காதல் ஜெயித்ததா? காதலனுடன் அவள் தொடர்ந்ததா… இல்லை பழையபடி அவள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டாளா என்பதுதான் இப்படத்தின் கதை.
அனோரா படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதை வென்ற இயக்குனர் ஷான் பேக்கர், “நான் ஆஸ்கர் விருது பெற்றதற்கு பாலியல் தொழிலாளர் சமூகத்துக்கு நன்றி சொல்ல விரும்பறேன். அவர்கள் பல ஆண்டுகளாக தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு எனது மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். இதை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்”ன்னு சொல்லி இருக்கிறார்.
இந்த விருது வழங்கும் விழாவில் குறும்பட பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ‘அனுஜா’ குறும்படத்துக்கு விருது கிடைக்கவில்லை.