No menu items!

அண்ணாமலை ஆடியோ மர்மம் – மிஸ் ரகசியா!

அண்ணாமலை ஆடியோ மர்மம் – மிஸ் ரகசியா!

உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பப்பட, அதை யூடியூபில் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“நான் முருகரைபோல் ஊரெல்லாம் சுற்றி செய்திகளோடு வருகிறேன். ஆனால் நீங்கள் பிள்ளையாரைப் போல் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே செய்திகளை சேகரிக்கிறீர்கள் போல…” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் ரகசியா.

“பிள்ளையார் சதுர்த்தி மூடுக்கு வந்துட்ட போல. தேர்தல் பிரச்சாரத்தின்போது இலவசங்களை வெளியிடுவது பற்றிய வழக்கில் இன்று தீர்ப்பு வரலாம் என்பதால் பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குள் நீ வந்துவிட்டாய். என்னதான் நேரலைகள் வந்தாலும் நீ தரும் செய்திகளை விஞ்ச முடியுமா?” என்றபடி பிளாஸ்கில் இருந்த காபியை கோப்பையில் ஊற்றி நீட்டினோம்.

“தலைமைச் செயலாளர் இப்போதெல்லாம் அடிக்கடி துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் கடிதம் எழுதுகிறார். முதலமைச்சர் சொல்லி இந்த கடிதங்களை எழுதுகிறாரா எல்லது அவராகவே இந்த கடிதங்களை எழுதுகிறாரா என்று குழப்பத்தில் இருக்கிறார்களாம் உடன்பிறப்புகள்.”

“தொண்டர் குழம்பும் அளவுக்கு அப்படி என்ன கடிதம் எழுதியிருக்கிறார் தலைமைச் செயலர்?”

“அரசு அதிகாரிகளின் பதவி உயர்வு சட்டப்படி இருக்க வேண்டும். அதில் எந்த விதிமீறலும் இருக்கக்கூடாது என்று துறைச் செயலாளர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார் தலைமைச் செயலர்.”

”நல்ல விஷயம்தானே?”

”ஆமாம். நல்ல விஷயம்தான். இதனால் பதவி உயர்வு விஷயத்தில் அமைச்சர்களின் சிபாரிசை துறைச் செயலாளர்கள் கண்டுகொள்வதில்லை. அவர்கள் ஏதாவது சிபாரிசுடன் சென்றால் தலைமைச் செயலாளரின் கடிதத்தைக் காட்டுகிறார்கள். இதேபோல் ஊராட்சிகளின் தலித் தலைவர்களுக்கு, மற்ற ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கும் அதே வசதி அதே மரியாதை வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து அறிக்கை அனுப்பச் சொல்லி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் தலைமைச் செயலாளர். ஏற்கெனவே ஆகஸ்ட் 15-ம் தேதி தலித் ஊராட்சி தலைவர்கள் தேசியக் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதி இருந்தார். இதையெல்லாம் திமுக அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் பெரிதாக ரசிக்கவில்லை. ஆளுநரின் ரூட்டில் தலைமைச் செயலாளரும் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்துவிட்டாரோ என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்கள்.”

“முதல்வர் சொல்லாமல் தலைமைச் செயலர் முடிவெடுப்பதற்கு வாய்ப்பில்லை. அவர் என்ன டெல்லிலருந்து நியமிக்கப்பட்ட கவர்னரா?”

“கவர்னர் என்றதும் ஞாபகம் வருகிறது. திருக்குறள் விஷயத்தில் ஆளுநர் ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளாரே?”

“ஆமாம். டெல்லிக்குப் போன தமிழக ஆளுநர், அங்கு தமிழ் கல்விக் கழக மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, “ஜி.யு.போப்பின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவமாக இருக்கிறது .ஜி.யு.போப் ஆதிபகவான் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நீக்கப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதற்காக கூடிய சீக்கிரம் தமிழ் அமைப்புகளின் கண்டனத்துக்கு அவர் ஆளாகலாம் என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணி கட்சிகளும் இதுதான் சமயமென்று அவர் மீது பாய்வதற்கு வாய்ப்பு அதிகம்.”

“முதல்வரின் கோவை விசிட்டைப் பற்றி ஏதும் தகவல்கள் இருக்கிறதா?”

“முதல்வரின் கோவை விசிட்டுக்கு தேவையான ஏற்பாடுகளையெல்லாம் செய்தவர் செந்தில் பாலாஜிதான். கோவை மாவட்டத்துக்கு ஐந்து மாவட்ட பொறுப்பாளர்கள் இருந்தாலும், திமுகவைப் பொறுத்தவரை செந்தில்பாலாஜியின் முடிவுதான் இறுதியானது. அதை யாரும் விமர்சனம் செய்வதைக்கூட அவர் விரும்புவதில்லை. முதல்வரின் கோவை மாவட்ட விசிட்டுக்கான ஏற்பாடுகளுக்குக்கூட கரூரில் இருந்து தொண்டர்களை இறக்கி செய்துள்ளார் செந்தில்பாலாஜி. அவரது அதிருப்தியாளர்கள் சிலர் இதுபற்றி தலைமை நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.”

“அவர்களின் ரியாக்‌ஷன் என்ன?”

“கோவையில் செந்தில்பாலாஜி செய்த ஏற்பாடுகள் முதல்வரை உச்சிகுளிர வைத்துள்ளது. அதனால் இப்போதைக்கு செந்தில்பாலாஜி பற்றிய புகாரை முதல்வர் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார். நீங்கள் செந்தில்பாலாஜியிடம் சுமுகமாக போய் விடுங்கள் என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்கள்.”

“அந்த அளவுக்கு முதல்வரிடம் செந்தில்பாலாஜி நெருங்க என்ன காரணம்?”

“முதல்வரின் கோவை பயணத்துக்கு 3 நாட்களுக்கு முன்பு, இந்த பயணத்தின்போது மாற்று கட்சிகளைச் சேர்ந்த 55 ஆயிரம் பேர் திமுகவில் இணைய உள்ளனர் என்று செந்தில்பாலாஜி கூறியிருக்கிறார். அதற்கு முதல்வர், ‘55 ஆயிரம் பேரா’ என்று சந்தேகத்துடன் கேட்டுள்ளார். உடனே, 55 ஆயிரம் பேரின் விவரங்களையும் அவர்கள் மாற்றுக் கட்சியில் வகிக்கும் பொறுப்புகளின் விவரத்தையும் ஆதாரங்களுடன் அளித்துள்ளார் செய்தில்பாலாஜி. ஒரு புத்தகமாக அவர் இந்த விவரங்களை கொடுக்க, அவரது செயல் வேகத்தைப் பார்த்து முதல்வர் அசந்து போயுள்ளார். முதல்வரிடம் செந்தில்பாலாஜி நெருக்கமாக இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். இதுபற்றி அதிருப்தியாளர்களிடம் அறிவாலய பிரமுகர்கள் சொல்ல, செந்தில்பாலாஜியிடம் சரணடைந்து விடலாமா அல்லது பாஜகவிலோ, அதிமுகவிலோ அடைக்கலமாகி விடலாமா என்று அவர்கள் யோசித்து வருகிறார்களாம்.”

“திமுக உள்கட்சித் தேர்தல்கள் எந்த நிலையில் இருக்கிறது?”

“இறுதிக்கட்டமாக மாவட்ட செயலாளர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதன் நடுவே இப்போது இருக்கும் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு பற்றி தனியார் அமைப்பு மூலம் விசாரித்து அறிக்கை தயாரித்து முதல்வரிடம் வழங்கியிருக்கிறார் அவரது மருமகன். அந்த அறிக்கையில் 15 மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு மிகவும் மோசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தொடர்ந்து பதவியில் இருந்தால், நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வாய்ப்புகளை அது பாதிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.”

“போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறதே?”

“ஆரம்பத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் போடப்பட்டு வந்தது. பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றி அமைக்கப்பட்டது. அப்போதே இதை சிஐடியு கண்டித்தது. அதன்பிறகு கருணாநிதி முதல்வர் ஆனதும் சிஐடியு அவரது கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டுசென்றது. அவர் அதை மீண்டும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றினார் இப்போது கருணாநிதி போட்ட உத்தரவை அவரது மகனே மாற்றியமைத்ததில் சிஐடியு வருத்தத்தில் இருக்கிறது. ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவும் அவர்கள் மறுத்துள்ளனர்.”

”அண்ணாமலை ஆடியோ என்று ஒன்று சுற்றி கொண்டிருக்கிறதே கேட்டியா? அந்த ஆடியோவில் ‘சம்பவம் நடக்கும் இடத்துக்கு 1000 பேரை அழைத்து வர வேண்டும். ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை மாஸாக செய்யவேண்டும். அங்கு கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லாத நிலையில், அங்கு வேண்டும் என்றே சென்று அதன் மூலம் அரசியல் செய்ய வேண்டும்’ என அண்ணாமலை பேசியது மாதிரி இருக்கே?”

“ஆமாம் கேட்டேன். மதுரை செருப்பு சம்பவத்தை அண்ணாமலை பிளான் செய்தது போல் அந்த ஆடியோவில் பேசப்படுகிறது. ஆனால் அந்தக் குரல் அண்ணாமலையுடையது இல்லை என்று பாஜகவினர் கூறுகிறார்கள். காவல்துறையிலும் புகார் கொடுத்திருக்காங்க”

“அவங்க அப்படிதான் சொல்லுவாங்க. உன் சோர்ஸ் என்ன சொல்றாங்க?”

“அந்த ஆடியோ முழுசா இல்லனு சொல்றாங்க. பாஜக மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனுடன் பேசியிருக்கிறார்னு சொல்றாங்க. ஆனால் சுசீந்திரன் அதை மறுத்திருக்கிறார். இந்த ஆடியோவை வெளியிட்டது சமீபத்துல பாஜகவுலருந்து விலகிய மதுரைக்காரர்னு பாஜகவில் சொல்றாங்க.”

“அண்ணாமலை என்ன சொல்றார்?”

“அண்ணாமலை அமைதியா கடந்து போங்க, நமக்கு டைம் வரும் அப்போ பாத்துக்கலாம்னு கட்சிக்காரங்ககிட்ட சொல்லியிருக்காராம். அதைப் பத்தி அதிகம் பேசி அந்த ஆடியோவை பிரபலமாக்க வேண்டாம்னு சொன்னதாகவும் தகவல் இருக்கு. பாஜகனாலே ஆடியோ வீடியோ கட்சினு மாறிடுச்சு.” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...