ஷங்கரின் நேரடி தெலுங்குப்படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் ராம் சரண், கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கிறார்கள். ஷங்கர் இந்தப் பட ஷூட்டிங்கை இழுத்துக் கொண்டே போனதால் தயாரிப்பாளர் மற்றும் ராம் சரண் இருவருக்கும் ஷங்கரின் மீது மனஸ்தாபம்.
இந்நிலையில் படத்தை வேகமாக முடியுங்கள் என்று அழுத்தம் கொடுத்தப்பிறகு இப்போது கடைசிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ரமோஜி ராவ் ஸ்டூடியோவில் ஆக்ஷன் காட்சிகளை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.
ராம் சரணுக்கு இதில் ஐஏஎஸ் கதாபாத்திரம். 2019-ல் ஆந்திராவில் இவர் தேர்தல் அதிகாரியாக பணியாற்றுகிறார். அதேபோல் ஒரு நேர்மையான அரசியல்வாதி இருக்கிறார். இது ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று சொல்லப்பட்டாலும், ஜனசேனா கட்சித்தலைவராக இருக்கும் பவர் ஸ்டார் பவன் கல்யாணை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார்கள்.
தேர்தலில் எந்த ஒளிவும் மறையுவும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதே தேர்தல் அதிகாரியின் நோக்கம். இதில் ராம் சரண் தேர்தல் அதிகாரியாக பேசும் வசனங்கள் இன்றைக்குள்ள தேர்தல் தில்லாலங்கடிகளை தோலுரிக்கும் வகையில் அமைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு எதிர்பார்பு எகிறியிருக்கிறது. ஆனால் படம் எப்போது வருமென்பதுதான் தெரியவில்லை.
நிலாவுக்கு டும் டும் டும்
‘நியூ’ என்று ஒரு படம் வெளியானது. இன்றைக்கு பரபரப்பான நடிகராகி இருக்கும், இந்த தலைமுறைக்கு ஒரு நடிகராகவே மட்டும் தெரிந்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் அது.
அந்தப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் மீரா சோப்ரா. இப்படி சோப்ரா என்று பெயர் இருந்தால், வேலைக்கு ஆகாது என அவருக்கு நிலா என்று பெயர் சூட்டினார் எஸ்.ஜே.சூர்யா. இதனால் மீனா சோப்ரா, நிலா என்றே சினிமாவில் அறிமுகமானார்.
’நியூ’ படம் ஹிட்டடித்தது. ஆனால் நிலாவுக்கு மளமளவென படங்கள் குவியவில்லை. அப்போது ஒன்று, கொஞ்சம் கழித்து மற்றொன்று என நடித்தார். வாய்ப்புகள் வரக்காரணம் நிலாவின் தாராளமயமாக்கல். தமிழ் சுத்தமாக தெரியவில்லை என்றாலும் கூட, இவரது கவர்ச்சியே இவரை இங்கு நடிகையாக தொடர வைத்தது. நியூ படத்திற்கு அடுத்து இவருக்கு கிடைத்த ஹிட் படம் ‘மருதமலை’.
தமிழில் இருந்து தெலுங்கு சினிமாவுக்கு போனார். அங்கேயும் இதே கதைதான். கவர்ச்சி மட்டுமே கைக்கொடுத்தது.
இதனால் மீண்டும் மும்பைக்குக் கிளப்பிவிட்டார். மும்பையில் சீரியல் ஒன்றில் நடித்தார். இரண்டு மூன்று ஹிந்திப் படங்களில் நடித்தார். அங்கேயும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் சமீபத்தில்தான், வெட்கத்தைவிட்டு, வாய்ப்பு கொடுங்கள் என்று வெளிப்படையாகவே கேட்டுவிட்டார். தனது சமூக ஊடக பக்கத்தில், ‘எனக்கு நடிக்கணும்னு ஆசையா இருக்கு. ஏதாவது வாய்ப்பு இருந்தால் கொடுங்களேன்’ என்று பதிவிட்டார். ஆனாலும் யாரும் கொஞ்சம் கூட கருணைக்காட்டவில்லை. காரணம் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்ட நிலாவுக்கு வயது கடந்திருந்தது.
இப்போது சினிமாவை நம்பி பிரயோஜனம் இல்லை என்று தெரிந்துவிட, வேறு வழியில்லாமல் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையிலாவது செட்டிலாகிவிடலாம் என நினைக்கிறாராம்.
ஒரு நடிகைக்கு கணவராக ஒரு தொழிலதிபர் கிடைப்பதுதான் இங்கு காலம் காலமாக இருந்துவரும் சம்பிரதாயம். நிலாவுக்கும் அப்படிதான். காதலரும் பிஸினெஸ் மேன்.
வருகிற மார்ச் மாதம் 11-ம் தேதி நிலாவுக்கு திருமணம். மாப்பிள்ளை வீட்டார் ஜெய்ப்பூரில் வைத்து திருமணத்தை நடத்த திட்டமிட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி திருமணத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் யாரும் போனதாக தெரியவில்லை. நிலாவுக்காக எஸ்.ஜே. சூர்யா மட்டுமாவது போவாரா என்பது மார்ச் மாதம் புரியும்,