கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் இரவு நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 89 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் வயநாடு மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களும், பழங்குடி மக்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்யும்போதெல்லாம் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கமாக நடந்து வருகிறது.
300 மில்லிமீட்டர் மழை
வயநாடு பகுதிகளில் நேற்று (29-ம் தேதி) மிக கனத்த மழை பெய்தது. மழையின் அளவு 300 மில்லிமீட்டரைத் தாண்டியதால் இன்று அதிகாலை 1 மணியளவில் முண்டக்காய் பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இருந்து மக்கள் சுதாரிப்பதற்குள் அடுத்ததாக காலை 4 மணிக்கு சூரமலா என்ற பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடம் அருகே இரண்டாவதாக மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மேலும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
வயநாட்டில் உள்ள அட்டமலா – முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலமும் நிலச்சரிவில் சேதமடைந்ததால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே மீட்புப் பணிகளை தொடரும் நிலை உள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து இதுவரை 89 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கானவர்களை காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் போலீஸாரும் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவைத் தொடர்ந்து கேரள மாநில அரசு மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. வெலிங்டனில் இருந்து ராணுவப் படைகள் மீட்புப் பணிகளுக்காக விரைந்துள்ளது. இன்று மதியம் முதல் மீட்பு பணிகள் முழு வேகத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வருடன் பிரதமர் பேச்சு
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். நிவாரணப் பணிகளில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக அப்போது பிரதமர் உறுதி அளித்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
வயநாடு சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “வயநாடு நிலச்சரிவு குறித்து அறிந்து துயரடைந்தேன். தங்களின் அன்புக்குரியவர்கள் இழந்து வாடுவோருக்கு ஆறுதலை உரித்தாக்குகிறேன். காயம்டைந்தோர் விரைவில் குணம் பெற பிரார்த்தனைகள். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறன. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பேசினேன். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, “வயநாடு மாவட்டம் மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவு செய்தியறிந்து வேதனையடைந்தேன். கேரள முதல்வருடனும், வயநாடு மாவட்ட ஆட்சியருடனும் பேசியுள்ளேன். அனைத்து அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிடுமாறு வேண்டியுள்ளேன். மத்திய அமைச்சர்களுடன் பேசி வயநாடுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வலியுறுத்துவேன். ஐக்கிய ஜனநாயக முன்னணி தொண்டர்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுகிறேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆதரவுக் கரம் நீட்டிய முதல்வர் ஸ்டாலின்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிலச்சரிவில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக அறிகிறேன். முழு வீச்சில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் உதவிகளை கேரளாவிற்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது” எனக் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி வழங்கிடவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.