நாயகன் ஆர்யன் ஷாம் இயக்குனராகும் முயற்சியில் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி விட்டு படத்தை இயக்க காத்திருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் ஓகே. சொன்ன கதையை டெவலப் செய்ய தனது குழுவினருடன் இரண்டு பெண்கள் உள்ளிட்ட குழுவுடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஞ்சமி பங்களா என்ற இடத்திற்கு செல்கிறார். இரவு நேரத்தில் அந்த இடத்தில் மர்மான சில சம்பவங்கள் நடக்க, அச்சத்தில் அங்கிருந்து அனைவரும் வெளியேற முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாமல் போவதோடு, அவர்களை முகமூடி மனிதர் ஒருவர் கொடூர ஆயுதத்துடன் விரட்டுகிறார். அவர் யார்? அந்த நடத்தில் நடக்கும் மர்மங்களின் பின்னணி என்ன?, அந்த வீட்டில் சிக்கிக்கொண்ட ஆர்யன் ஷாம் மற்றும் அவருடன் சென்றவர்கள் தப்பித்தார்களா? இல்லையா?, என்பதை திணறடிக்கும் திகிலோடு சொல்வது தான் ‘அந்த நாள்’.
ஆர்யன் ஷாம் ஏவி.எம். குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார். ஹீரோவுக்கான அனைத்து தகுதியும் அவரது தோற்றத்தில் தெரிகிறது. இன்னும் சில நடிப்பு பயிற்சிகளுடன் வந்தால் நாயகனாக போட்டி போடலாம்.
முதல் படமே நரபலி என்ற சர்ச்சைக்குரிய கருத்தை எடுத்து வந்திருப்பது உறுத்தலாக இருந்தாலும் திகில் கிளப்பும் அதன் பின்னணியும் ரத்த வெறியாட்டமும் படப்பிடிப்பு நடத்திய விதமும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது.
கதைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை திரைக்கதைக்கு கொடுத்து இன்னும் உழைத்திருந்தால் படம் இன்னும் வேகம் எடுத்திருக்கும். வீ வீ கதிரேசன் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும்.
நாயகியாக நடித்திருக்கும் ஆத்யா பிரசாத், ஆர்யன் ஷாமின் உதவியாளர்களாக நடித்திருக்கும் லிமா பாபு, கிஷோர் ராஜ்குமார், ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு சரியான முறையில் பயன்பட்டிருக்கிறார்கள்.
திகில் காட்சிகளை காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் சதிஷ் கதிர்வேல், இரவு நேர காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் என்.எஸ்.ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் ஜே.எஸ்.காஸ்ட்ரோ இயக்குநர் சொல்ல வருவதை பார்வையாளர்களுக்கு புரிய வைப்பதில் சற்று தடுமாறியிருந்தாலும், இறுதியில் சுதாரித்துக் கொண்டு பணியாற்றியிருக்கிறார்.
ஏவி.எம்.என்ற ஆலமரத்தின் கீழ் எத்தனையோ திரைப்படங்கள் கலைஞர்கள் வேறூன்றியிருக்கிறார்கள். காலமாற்றம் ஏற்பட்ட பிறகு இன்று அவர்கள் குடும்பத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் அந்த நாள் சஸ்பென்ஸ் திரில்லர் மட்டமல்ல. ஒரு சக்சஸ் படைப்பாகவும் மாறியிருக்கிறது.
நரபலி என்ற விஷயத்தை மட்டும் தவிர்த்து விட்டிருக்கலாம்.