கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த ‘அமரன்’ படம், கடந்த ஆண்டு வெளியாகி, பெரிய வெற்றி பெற்றது.
தமிழ், தெலுங்கில் 400 கோடி வரை வசூலித்து, கடந்த ஆண்டில் வெளியான படங்களில் நல்ல லாபத்தை கொடுத்த படமாகவும் அமைந்தது. இந்தியிலும் படத்துக்கு வரவேற்பு, இந்திய ராணுவமும், ராணுவ அதிகாரிகளும் படத்தை பாராட்டின.
அமரன் படம் வெளியான போது, கமல்ஹாசன் சென்னையில் இல்லை. ஏ.ஐ படிக்க, அமெரிக்கா சென்றுவிட்டார். பிப்ரவரியில்தான் நாடு திரும்பினார். அமரன் குறித்து கமல்ஹாசன் கருத்து என்ன? தயாரிப்பாளராக அவர் எப்படி பீல் பண்ணினார் என்பதை படக்குழுவும், தமிழ்சினிமாவும் அறிய விரும்பின.
ஆனால், அமரன் குறித்து கமல்ஹாசன் இதுவரை வெளிப்படையாக பேசவில்லை. இந்நிலையில், அமரன் படக்குழுவை பாராட்டும் வகையில், அவர்களை நேரில் சந்திக்கும் வகையில் சென்னையில் 100வது நாள் விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்தார் கமல்ஹாசன்.
அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை அமரன் படத்தின் 100வது நாள் விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் கமல்ஹாசன் கலந்துகொண்டு ஹீரோ சிவகார்த்திகேயன், ஹீரோயின் சாய்பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவுக்கு ஷீல்டு வழங்கி பாராட்டியுள்ளார். மேலும் படத்தில் பங்கேற்ற நடிகர்கள்,தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு பாராட்டி தெரிவித்து, ஷீல்டு வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட காலத்துக்குபின் ஒரு படத்தின் 100 வது நாள் விழா நடப்பது, தமிழ் திரையுலகிற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமரன் பட வெற்றிக்குபின் சிவகார்த்திகேயன் மார்க்கெட், சம்பளம் உயர்ந்துள்ளது. அமரனின் சிறப்பாக நடித்த சாய்பல்லவிக்கு, படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறப்படுகிறது. காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கைதான் இந்த படம் என்றாலும், இன்னமும் இந்த படத்தை பிரதமர் உள்ளிட்டவர் பார்க்கவில்லை. எந்த பாராட்டும் தெரிவிக்கவில்லை. கமல்ஹாசன் அரசியல்ரீதியாக எதிரணியில் இ ருப்பதால் அமரன் படத்தை, பாஜ தலைவர்கள் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. படத்தை வெளியிட்டது ரெட் ஜெயன்ட் நிறுவனம்.
பொதுவாக, இது போன்ற 100வது நாள் விழா, பொது அரங்கில் மீடியா முன்னிலையில் நடத்தப்படும். ஆனால், அமரன் விழாவுக்கு செல்ல மீடியாவுக்கு அழைப்பு இல்லை. காரணம், விழாவை ஒரு தனியார் டிவிக்கு மொத்தமாக விற்று, அதிலும் சில கோடி வருமானம் பார்த்துள்ளார் கமல்ஹாசன்.