எங்கும் எதிலும் தலைக்காட்டுவது இல்லை. தேவையில்லாத பேச்சு பேசுவது இல்லை. அப்படி இப்படி என்று பில்டப் கொடுக்கும் பேட்டி கொடுப்பதும் இல்லை. முடிந்தவரை ஊடகங்கள் பக்கம் தலைக்காட்டுவது இல்லை. இப்படி பல இல்லை இருப்பதால், அஜித்திற்கு தமிழ் சினிமாவின் ஜென்டில்மேன் என்ற இமேஜ் இருக்கிறது.
அப்பேர்பட்ட அஜித்தும் இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதற்கு காரணம் அவரது அடுத்தப்பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். சமூக பொறுப்போடு இருக்க வேண்டுமென தேர்தலில் முதல் ஆளாக போய் வாக்களித்துவீட்டு ஓட்டு போட்ட ஆள்காட்டி விரலைக் காட்டும் அஜித்தை, ’குட் பேட் அக்லி’ பட அறிவிப்பு போஸ்டருக்காக நடுவிரலைக் காட்ட செய்து சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார் ஆதிக்.
அஜித் எப்படி இப்படி ஒரு போஸ் கொடுக்க ஒப்புக்கொண்டார் என இணையத்தில் காரசாரமான பேச்சு ஓடிக்கொண்டிருக்கின்றன.
இதற்கு, ‘அஜித்தின் பர்சனல் வாழ்க்கையையும், சினிமா கேரியரையும் ஒன்றாக பார்க்காதீர்கள். அஜித் கதாபாத்திரம் இப்படிபட்ட கதாபாத்திரம் என்று சொல்ல, இப்படிதான் போஸ்டரை வடிவமைக்க முடியும். அதற்காக அஜித்தை தனிப்பட்ட முறையில் குறை சொல்லாதீர்கள்’ என்று ஆதிக் தரப்பில் கூறப்பட்டிருக்கிறதாம்.
இது ஒரு புறமிருக்க, ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்கை விட்டுவிட்டு அஜித் இப்போது ‘குட் பேட் அக்லி’ ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். ’விடாமுயற்சி’ படம் ட்ராப் ஆகிவிட்டதா, அஜித் இப்படி செய்ய மாட்டாரே… என்ன நடக்கிறது என்ற கேள்வி இப்போது கோலிவுட்டில் அதிகரித்து இருக்கிறது.
’விடாமுயற்சி’ ஷூட்டிங் திட்டமிட்டப்படி நடக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஒன்று லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அடுத்தடுத்து வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளுமளவிற்கு வசூலிக்கவில்லை. இதனால் தயாரிப்பில் இருக்கும் படங்களை கூட தொடர முடியாத நிலைக்கு லைகா தள்ளப்ட்டிருக்கிறது என்ற பேச்சு நிலவுகிறது. அடுத்து அஸர்பைஜான் நாட்டில் பார்த்து வைத்த லோகேஷன்களில் இப்போது ஷூட் செய்ய முடியாத நிலை.
பருவநிலை மாற்றங்களினால் ஷூட் செய்ய முடியாத நிலை. இப்படி கூறப்பட்ட இரண்டு காரணங்களும் கூட உண்மையாக இருக்கலாம். அதனால்தான் அஜித் ‘குட் பேட் அக்லி’ ஷூட்டிங்கிற்கு விடாமுயற்சி படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டை மாற்றி கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
அதாவது இப்போது நடக்கும் ‘குட் பேட் அக்லி’ பட ஷூட்டிங்கில் சண்டைக்காட்சிகளைதான் முதலில் எடுத்து வருகிறார்களாம். சுப்ரீம் சுந்தர் சண்டைக்காட்சிகளை ஷூட் செய்து வருகிறார். உண்மையில் இந்த தேதிகளில் சுப்ரீம் சுந்தர் ‘விடாமுயற்சி’ பட சண்டைக்காட்சிகளைதான் எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் திட்டமிட்டபடி ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் ஆரம்பிக்கவில்லை என்பதால், அதே தேதிகளை நாம் வீணடிக்க வேண்டாம். அதே தேதிகளில் ‘குட் பேட் அக்லி’ பட சண்டை காட்சிகளை எடுத்துவிடலாம் என அஜித் ஒரு யோசனையைக் கூறியிருக்கிறார்.
இந்த யோசனையை ’குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனமும் உடனடியாக ஏற்றுகொண்டது. இது முடிவான ஒரு வாரத்திற்குள் சுமார் 700 பேரை வைத்து ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான செட்டை போட்டுவிட்டது தயாரிப்பு நிறுவனம்.
இதனால் ஷூட்டிங்கையும் உடனே தொடங்கிவிட்டார்கள். வழக்கமாக ஏதாவது செண்டிமெண்ட் காட்சிகளை எடுப்பார்கள். ஆனால் இந்த முறை முதலில் சண்டைக்காட்சிகளை எடுக்கிறார்கள். ஜூன் முதல் வாரம் வரை இந்த ஷூட்டிங் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
’குட் பேட் அக்லி’ பட ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூல் ஜூன் முதல் வாரம் முடிந்ததும், ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்கை மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறார்களாம்.
’விடாமுயற்சி’ ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தரையே ’குட் பேட் அக்லி’ படத்திற்கு கமிட் செய்ய வைத்து, ’விடாமுயற்சி’ பட ஆக்ஷன் காட்சிகளுக்கு கொடுத்த கால்ஷீட்டை வீணடிக்காமல் ’குட் பேட் அக்லி’ ஷூட்டிங்கை வைத்துவிட்ட அஜித்தின் சாமர்த்தியத்தைப் பாராட்டும் வகையில் கோலிவுட்டில் பேச்சுகள் அடிப்படுகின்றன.