தனுஷும், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இல்லறத்தில் இணைந்தவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்களும் இருக்கிறார்கள்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், தனுஷூம் ஐஸ்வர்யாவும் வாழ்க்கையில் தங்களது பாதைகளில் தனித்தனியாக பயணிக்க போவதாக கூற தமிழ் சினிமா கொஞ்சம் அதிர்ந்தது. இவர்கள் இருவருக்கும் இடையில் சமரசம் செய்ய பல முயற்சிகள் நடந்தன. ஆனால் எந்த முயற்சியும் எடுப்படவில்லை.
தனுஷ், தனது கனவு இல்லத்தை ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் பகுதியிலேயே கட்டிவிட்டு செட்டிலாகி இருக்கிறார். இந்த வீடுதான் இவர்கள் இருவருக்குமான பிரச்சினைக்கான ஆரம்ப புள்ளி என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் முணுமுணுக்கிறார்கள்.
இருவரும் தனித்தனியே வசித்தாலும், தங்களது மகன்களின் பள்ளி விழாக்களில் கலந்து கொண்டனர். இப்படியொரு சந்தர்ப்பத்தால் இவர்கள் இருவரும் இணைவார்களா என்று எதிர்நோக்கிய நிலையில், இருவரும் நேருக்கு நேர் மோதுமளவிற்கு சூழல் மாறியிருக்கிறது.
யாரும் எதிர்பாராத வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், நடித்திருக்கும் ‘கேப்டன் மில்லர்’ டிசம்பர் 15-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருகிற பொங்கலுக்கு திரைப்பட வெளியாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனால் மற்றப்படங்களின் வெளியீடு பின்னாளில் முடிவு செய்யப்பட்டு வருகின்றன,
இப்போது ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் ’லால் சலாம்’ படமும் பொங்கல் வெளியீடு என்பதால், தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படத்திற்கு போட்டியாக களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மற்றப்படங்கள் தனுஷ் படத்துடன் போட்டியிட விரும்பாமல் வெளியீட்டை தள்ளிப் போட, ’லால் சலாம்’ வெளியீட்டு விஷயத்தில் பின்வாங்கவில்லை. கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் தனது அப்பாவை நம்பி களத்தில் இறங்குகிறாரா ஐஸ்வர்யா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஆனால் ஐஸ்வர்யா தனுஷூடன் நேரடியாக மோதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறதாம். ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் வருகிறார் என்றதும் எல்லோரும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வருவார் என்று யூகித்திருப்போம். ஆனால் ரஜினிக்கு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாம். சுமார் 30 நிமிடங்கள் வரை ரஜினி நடித்திருக்கும் காட்சிகள் ‘லால் சலாம்’ படத்தில் இடம்பெறுகிறதாம்.
அதுவும் படம் நெடுக வரும்படியான காட்சிகளாக இருப்பதாக கூறுகிறார்கள்.
இதனால் மிகத்தைரியமாக ‘கேப்டன் மில்லர்’ உடன் மோத ஐஸ்வர்யாவும் தயாராகி இருப்பதாகவும் கூறுகிறார்கள். கணவருக்கும், மனைவிக்கும் இடையேயான பாக்ஸ் ஆபீஸ் போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது கோலிவுட்.
விக்னேஷ் சிவனை கழற்றிவிட்ட கமல்!
ஜெயம் ரவியை வைத்து ‘கோமாளி’ படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், அடுத்து ‘லவ் டுடே’ படத்தில் நாயகனாக நடித்தும்விட்டார். படமும் வெற்றிப் பெற்றதால், இனி நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். விருப்பப்பட்டால் படம் இயக்குவேன் என்று உரக்க சொன்னார் பிரதீப் ரங்கநாதன்.
இதனால் அவரை வளைத்துப் போட்டது கமலின் ராஜ் கமல் ஃப்லிம் இண்டர்நேஷனல். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
படத்திற்கான வேலைகள் மளமளவென நடைபெற ஆரம்பிக்க, இப்போது பொசுக்கென்று போய்விட்டதாம்.
கமல் தயாரிப்பு என்றால் எல்லா வேலைகளும் ஒரு ஒழுங்குமுறையுடன் நடக்கும். ஆனால் விக்னேஷ் சிவன் இதற்கெல்லாம் உடன்படவில்லையாம். இதனால் நீங்கள் பெரிய இயக்குநராக இருக்கலாம், பெரிய நடிகையின் கணவராக இருக்கலாம். அதற்காக பொறுத்து கொள்ள முடியாது. நீங்கள் கிளம்பலாம் என்று விக்னேஷ் சிவனிடம் மறைமுகமாக கூறப்பட்டதாம்.
இதனால் விக்னேஷ் சிவன், அப்படத்திலிருந்து விலகிய வேகத்திலேயே, தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் சார்பில் அந்தப் படத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுக்கப் போகிறேன் என்று கெத்து காட்டினார்.
இதற்கான வேலைகளை விக்னேஷ் சிவன் ஆரம்பித்த நிலையில், ’லியோ’ படத்தை தயாரித்த செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோவின் லலித் குமார் தயாரிக்க முன்வந்திருக்கிறதாம். கமல் கைவிட்டால் என்ன, ஏற்கனவே எங்களுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கியவர் நீங்கள் மீண்டும் வாருங்கள் நாம் இணையலாம் என்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறாராம்.
இதன் மூலம் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா மூவரும் இணைவது உறுதியாகிவிட்டது.
விரக்தியில் அனு இமானுவேல்!
’துப்பறிவாளன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் இந்த அனு இமானுவேல். அடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் நடித்தார்.
ஒரு ஹிட் கொடுத்தும் இங்கே தமிழில் வாய்ப்புகள் வராததால் தெலுங்கு சினிமா பக்கம் போனார்.
தெலுங்கில் இவரை வைத்து படம் இயக்க களத்தில் இறங்கினார் பிரம்மாண்டமான தயாரிப்பாளராக வலம்வந்த ஏ.எம். ரத்னத்தின் மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா.
ஏற்கனவே தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து வாழும் ஜோதி கிருஷ்ணாவுக்கும், அனு இமானுவேலுக்கும் இடையே நெருங்கிய நட்பு உருவானதாம். இந்த நட்பினால் அனுவுக்கு வாய்ப்புகள் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாதவைப் போல் ஆகிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.
இதனால் ஜோதி கிருஷ்ணாவை விட்டு விலக திட்டமிட்டு அனு இமானுவேல் வேறுப் படங்களில் நடிக்க முயற்சித்தார். கிடைத்த படமும் ஓடவில்லை என்பதால் ரொம்பவே மன அழுத்தத்தில் இருந்தாராம்.
இந்நிலையில்தான் கார்த்திக்கு ஜோடியாக ‘ஜப்பான்’ படத்தில் நடிக்கு வாய்ப்பு வந்தது. ரொம்பவே எதிர்பார்த்து இருந்த அனுவுக்கு, ’ஜப்பான்’ காலை வாரி விட்டிருக்கிறது. எதிர்பார்த்த அளவிற்கு காட்சிகளும் இல்லை. ரொம்ப குறைந்த நேரமே அவருக்கான காட்சிகள் இருந்தது. அவர் ஆடிய பாடலுக்கும் கத்திரி போட்டிருக்கிறார்கள். இதனால் ஜப்பானில் ஏன் நடித்தோம் என அனு இமானுவேல் விரக்தியில் இருக்கிறாராம்.
இனியும் நடிக்கலாமா அல்லது அமெரிக்காவுக்கு போய்விடலாமா என அனு இமானுவேல் தீவிர யோசனையில் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.