பிரான்ஸில் நடந்து வரும் 78 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் ஃபேஷன் உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார் ஐஸ்வர்யா ராய் .
சொல்லபோனால் ஐஸ்வர்யா ராயின் அழகை பார்க்க பெரும்பாலானோர் காத்திருந்த நிலையில் இந்திய பாரம்பரிய உடையான பனாரசி புடவையில் ரூபி நகைகள் அணிந்து, நெற்றி வகிட்டில் குங்கும பொட்டுடன் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தங்க பதுமையாக ஜொலித்தார்.
அப்படி என்ன விசேஷம் இந்த பனாரசி புடவையில் என்பதை பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த தந்த நிற அதாவது பழுப்பு நிற வெள்ளை கலந்த இந்த பனாரஸ் புடவை அதிக வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இடது பக்கத்தில் நீளமான முந்தியும், வலது பக்கத்தில் லேஸ் வேலைப்பாடு கொண்ட தொங்கும் பகுதியும் இருந்தது. இது புடவைக்கு ஒரு புதுமையான தோற்றத்தைக் கொடுத்தது. பார்க்கவே கண்களை கவரும் வகையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த புடவையை வடிவமைத்தவர் புகழ்பெற்ற வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா. நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய பாரம்பரியமான இந்த புடவையை அணிந்து அற்புதமான அழகை வெளிப்படுத்தியதோடு இந்தியாவின் பாரம்பரிய நெசவு கலையையும் உலகறிய பறைசாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஐஸ்வர்யா ராயின் கழுத்துக்கு அழகு சேர்த்த ரூபி நகைகள் குறித்து மணீஷ் மல்ஹோத்ரா ஹை ஜூவல்லரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் 18 காரட் தங்கத்தில் 500 காரட் மொசாம்பிக் ரூபி கற்கள் மற்றும் வெட்டப்படாத வைரங்கள் பதித்த நகைகளை ஐஸ்வர்யா அணிந்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளது. எவ்வளவு விலை உயர்ந்த நகைகள் என்று ஆச்சரியப்பட்டாலும் அந்த அழகுப்பதுமைக்கு அவை ஏற்றதே என்றே சொல்லலாம். அதிலும் வெள்ளை நிற புடவையில் சிவப்பு நிற ரூபிக்கற்கள் மின்ன சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த ஐஸ்வர்யா ராய் பச்சன் அந்த ஒரு நிமிடத்தில் அனைவரது பார்வையையும் பறித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்திய பாரம்பரியத்தில் திருமணமான பெண்களின் அடையாளம் நெற்றிபொட்டில் வைக்கும் குங்குமம்.கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய பெண் என்னும் அடையாளத்தோடு தனது நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்திருந்தார். அழகான ஆனால் வலிமையான தோற்றத்தை இது எடுத்துகாட்டியது.