இந்திய சினிமாவில் சுவடே தெரியாத அளவிற்கு இருந்த சினிமா கன்னட சினிமா. காரணம் இங்கு திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள், சினிமா படங்களுக்கு இருக்கும் வியாபாரம் என எல்லாமுமே கோலிவுட், டோலிவுட், பாலிவுட் சினிமாக்களை ஒப்பிடும் போது மிக மிக குறைவு.
இதனால் ’கேஜிஎஃப்’ படம் வரும் வரை கன்னட சினிமாவை யாரும் கண்டுக்கொள்ளாமலேயே இருந்தார்கள். ஆனால் ’கேஜிஎஃப்’ படத்தின் பாகம் -1 மற்றும் பாகம் -2-ம் வந்து மிரட்ட, கன்னட சினிமா மீது எல்லோருடைய பார்வையும் திரும்பியது.
ஆனால் இந்தப்படத்தில் ஹீரோவாக அதிர வைத்த யாஷ்ஷூக்கு கூட கிடைக்காத வரவேற்பும், பாப்புலாரிட்டியும் கன்னட சினிமாவை சேர்ந்த மற்றுமொருவருக்கு அடித்திருக்கிறது.
உலகிலேயே சினிமாவுக்கு மட்டும்தான் இப்படி ஒரே இரவில் ஒருவரை
ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் சூப்பர் ஹீரோவாக்க முடியும்.
அப்படியொரு அதிர்ஷ்டம் ரிஷப் ஷெட்டிக்கு அடித்திருக்கிறது.
‘காந்தாரா’ படத்தை இயக்கி, நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டிக்கு, எதிர்பாராத அதிர்ச்சி காந்தாராவிற்கு இந்திய அளவில் கிடைத்த அங்கீகாரம்.
ஒரே படம்தான். ஆனால் ரிஷப் ஷெட்டியை ரஜினிகாந்த் வரவழைத்து வாழ்த்துகிறார். ’காந்தாரா’ படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க இருக்கிறோம் என்று சொன்னதும் இப்பொழுதே அது குறித்த பிட் செய்தி கூட ட்ரெண்டிங் ஆகிறது.
இதை காந்தாரா படத்தை தயாரித்த ஹொம்பாளே நிறுவனம் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறது. இதனால் மளமளவென காந்தாரா 2 வேலைகளை இறங்கிவிட்டது.
இரண்டாம் பாகம் சீக்குவலுக்கு பதிலாக ப்ரீக்குவல் ஆக இருக்கும். அதற்கான எழுத்து வேலைகளை ரிஷப் ஆரம்பித்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
காந்தாரா படம் ஒரளவிற்கு பேசப்படும் என்று நினைத்துதான் இப்படத்தை 15 கோடியில் எடுத்திருந்தார்கள். இதற்கு கதை எழுதி, இயக்கியதோடு நடித்ததற்காக ரிஷப் ஷெட்டிக்கு வெறும் 5 கோடி மட்டும் சம்பளமாக கொடுத்தது தயாரிப்பு நிறுவனம்.
ஆனால் இதன் வெற்றி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டிருக்கிறது. இதனால் இரண்டாம் பாகத்தின் பட்ஜெட், ரிஷப் ஷெட்டியின் சம்பளம் எல்லாமும் இப்போது வேறு எங்கோ உச்சத்தில் போய் கொண்டிருக்கிறது.
இப்போது ரிஷப் ஷெட்டிக்கு சம்பளம் 50 கோடி என்கிறார்கள். அதாவது காந்தாராவின் வெற்றிக்கு முன்பு வாங்கிய சம்பளத்தைவிட பத்து மடங்கு அதிகம். ஆனால் இந்த சம்பள சமாச்சாரம் இத்தோடு நின்றுவிடவில்லை. படம் வெளியான பின்பு கிடைக்கும் வியாபாரத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ரிஷப் ஷெட்டிக்கு கிடைக்க இருக்கிறதாம்.
பட வியாபாரம் சூடுப்பிடித்தால் இதிலிருந்தே 50 கோடி வரை கூட கிடைக்கலாம் என்கிறார்கள் சினிமா வியாபார புள்ளிகள். அப்படியானால் ரிஷப் ஷெட்டிக்கு சம்பளம் 20 மடங்காகி 100 கோடி வரை எகிறும் என்கிறார்கள்.
ரிஷப் ஷெட்டி இப்படி ஒரு கணக்கில் காந்தாரா 2 வேலைகளில் இறங்க அவரையும் வம்புக்கு இழுத்துவிட பார்க்கிறார்கள்.. காந்தாராவில் அவர் காட்டிய தெய்வத்தை வைத்து அவர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் மீது ஆர்வம் கொண்டவர். அந்த கட்சியில் சேரப் போகிறார் என்றெல்லாம் பேச்சு கிளம்பியிருக்கிறது.