பொங்கலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. இந்த ஆண்டு பொங்கலுக்கு தமிழில் எத்தனை படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அவற்றின் நட்சத்திரங்கள் யார் என்பதைப் பார்ப்போம்…
விடாமுயற்சி
லைகா தயாரிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா நடித்த படம் ‘விடாமுயற்சி.’
வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் அஜித் மனைவியான திரிஷா கடத்தப்பட, அவரை தேடி அலைகிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் மகிழ் திருமேனி. அஜர்பைஜான் நாட்டில் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்துள்ளது. அர்ஜூன், பிக்பாஸ் ஆரவ் வில்லனாக நடிப்பதாக தகவல். அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் படங்களில் பெரிய ஸ்டார் வேல்யூவில் வெளியாக உள்ள ஒரே படம் இதுதான்.
கேம் சேஞ்சர்
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘கேம்சேஞ்சர்’ தில் ஜூ தயாரித்துள்ளார். சில ஆண்டுகளாக, மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. வழக்கம்போல் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே ஷங்கர் பல கோடியை செலவு செய்து இருப்பதாக தகவல்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையைத்தான் கேம்சேஞ்சர் என்ற பெயரில் இயக்கி உள்ளார் ஷங்கர். ஒரு இளம், அதிரடி ஐஏஎஸ் அதிகாரியாக ராம்சரண் வருகிறார்.சமூக பிரச்னை, ஊழல், பழிவாங்குவதால் ஆகியவற்றை கமர்ஷியலாக கலந்து கொடுத்து இருக்கிறார் ஷங்கர். ஹீரோவுக்கு இரட்டை வேடம் என்பதால், இன்னொரு வேடம் அப்பாவாக நடிக்கலாம் என்று தகவல். எஸ். ஜே.சூர்யா வில்லனாக வர, தமன் இசையமைத்து இருக்கிறார்.
இது தெலுங்கு படம் என்றாலும், தமிழிலும் வருகிறது. பொங்கல் படங்களில் இந்த படத்துக்கும்தான் மவுசு அதிகம்.
வணங்கான்
பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷிணி பிரகாஷ் நடித்த ‘வணங்கான்’ படமும் பொங்கலுக்கு வருகிறது. சூர்யா நடித்து, அவர் விலகிய நிலையில், வணங்கானில் அருண்விஜய் நடித்துள்ளார். தென்மாவட்ட கடல்புற பின்னணியில், பாலா ஸ்டைலில் இந்த படம் உருவாகி உள்ளது. சுரேஷ்காமாட்சி தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரிசையாக தோல்வி படம் கொடுத்து வரும் பாலா, இந்த படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்.
தருணம்
அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கிஷன்தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடித்த ‘தருணம்’ படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. தர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். முதலும் நீ முடிவும் நீ படத்தின் மூலம் பேசப்பட்டவர் கிஷன்தாஸ். இதில் சிஆர்பிஎப் அதிகாரியாக வருகிறார். இது, ஆக்ஷன் திரில்லர் பாணியில் நகரும் கதை. தமிழில் நாலு படங்களும், தெலுங்கில் பாலகிருஷ்ணா, பாபிதியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த தாகு மகாராஜ் படமும் பொங்கலுக்கு வருகிறது.