சினிமா இயக்குனர் ஆகும் கனவடன் அலையும் அதர்வா, விரக்தியான மனதோடு போதையின் பிடியில் இருக்கிறார். பள்ளி ஆசிரியரான ரஹ்மான் தனது மகள் அம்மு அபிராமியை காணவில்லை என்று போலீஸ் அதிகாரியான சரத்குமாரிடம் புகார் கொடுக்கிறார். அவர் ஊழலும், வக்கிரபுத்தியோடும் நடந்து கொள்கிறார். துஷ்யந்த் அம்மு அபிராமியை காதலித்து அவரை தேடி அலைகிறார். இவர்களின் தனித்தனி கதை இறுதியில் ஒன்றாக சேர்வதே நிறங்கள் மூன்று படம்.
வித்தியாசமான திரில்லர் ஜானரில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். அதர்வா தனக்கான பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அதீத போதை வஸ்துகளை பயன்படுத்துவது போல் காட்டியிருப்பது குறை. கதை திருட்டையும் அது குறித்த விபரங்களையும் அதர்வா பாத்திரத்தின் மூலம் காட்டியது தன் சொந்த வாழ்க்கை சம்பவங்களா என்பதை கார்த்திக் நரேந்தான் சொல்ல வேண்டும். சரத்குமாருக்கும், ரஹ்மானுக்கும் எதிர்பாராத சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் கிடைத்திருக்கின்றன. அதை அவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்கள். வாழ்க்கையில் எதார்த்தமான சூழலை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் வடிவமைத்திருப்பது படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறது.
இப்படியான கதையினை புதிய வடிவிலான திரைக்கதை உத்தியில் சொல்வதால் மட்டுமே படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்ல முடியும். அதனை அழகாக செய்திருக்கிறார் கார்த்திக் நரேன்.
சில இடங்களில் கதையை தாண்டிய முரண்பாடுகள் இருப்பது இது மாதிரியான திரைப்படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அது நடந்திருக்கிறது. இந்தக் குறைகளை நீக்கியிருந்தால் படம் பாராட்டப்பை பெற்றிருக்கும். துருவங்கள் பதினாறு போல் இது இல்லை. மூன்று வெவ்வேறு பாத்திரங்கள் க்ளைமேக்ஸ் காட்சியில் இணைய வேண்டும் என்பதை மட்டுமே கவனம் செலுத்தியதால் வந்த சிக்கல் படத்தில் தெரிகிறது.