No menu items!

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி நாளை முதல் அமல் – ட்ரம்ப்

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி நாளை முதல் அமல் – ட்ரம்ப்

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.

இந்த வரி விதிப்பு நாளை முதல் (ஆக.1) அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்தியா எங்கள் நண்பர். எனினும், பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் சிறிய அளவிலான வர்த்தகத்தையே மேற்கொண்டு வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஏனெனில், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவின் வரி விதிப்பு மிக அதிகமாக உள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இதனால்தான் அவர்களுடனான எங்களது வர்த்தகம் குறைந்த அளவில் உள்ளது. மேலும், எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு. அவர்கள் கடுமையான பணம் சாரா வர்த்தக தடைகளையும் அமல்படுத்துகின்றனர்.

உக்ரைனில் மேற்கொண்டு வரும் கொலைவெறித் தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில், அந்த நாட்டிடமிருந்து தங்களுக்கு தேவையான ராணுவ உபகரணங்களை அதிக அளவில் இந்தியா வாங்கியுள்ளது. சீனாவுடன் சேர்ந்த ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி இறக்குமதியாளராகவும் இந்தியா உள்ளது. இவை அனைத்தும் சரியான விஷயங்கள் அல்ல.

எனவே, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆக. 1-ம் தேதி (நாளை) முதல் 25 சதவீத வரியை செலுத்த வேண்டும்.

ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் கூடுதல் அபராதம் செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் உங்களது கவனத்துக்கு நன்றி. மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன் (MAGA) இவ்வாறு அந்தப் பதிவில் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே, உலக நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரிகள் 2025 ஆகஸ்ட் 1 முதல் தாமதமின்றி அமலுக்கு வரும் என்று அமெரிக்க வர்த்தகச் செயலர் ஹோவர்ட் லுட்னிக்கும் உறுதிபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது. “இலக்கு வைக்கப்பட்ட நாடுகளுக்கு ஆக.1 முதல் புதிய வரிகள் அமலுக்கு வரும். கால நீட்டிப்பு, சலுகை காலங்கள் இனி இல்லை. எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி என்பது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவை நடைமுறைக்கு வரும். சுங்கத் துறை, பணத்தை வசூலிக்கத் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகம் 129 பில்லியன் டாலரை எட்டியிருந்தது. இதில், இந்தியா சுமார் 46 பில்லியன் வர்த்தக உபரியைப் பெற்றிருந்தது.

இருதரப்பு வர்த்தகத்தால் இந்தியாவுக்கு அதிக பலன் கிடைப்பதை உணர்ந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா மீது 26 சதவீத வரியை அறிவித்தார். அப்போது. அமெரிக்காவும் பயனடையும் வகையில் இந்தியா வரிகளை குறைக்க வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

முன்னதாக, இந்த வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கான காலக்கெடு ஜூலை 9-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர், ஆகஸ்ட் 1-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.

தற்காலிகமானது… இந்நிலையில், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஐந்து சுற்று பேச்சுவார்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், ட்ரம்ப் 25 சதவீத வரியை அமல்படுத்தும்பட்சத்தில் அது தற்காலிகமானதாகவே இருக்கும் என்றும் மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “இந்தியா -அமெரிக்கா இடையிலான பேச்சுவார்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 25 சதவீத வரி விதிப்புக்கும் இந்தியா தயாராக உள்ளது. குறிப்பிட்ட பொருட்கள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஆகஸ்ட் மாதத்தில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும். எனவே, அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு தற்காலிகமானதாகவே இருக்கும்” என்றார்.

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் சில கருத்துவேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை (சோயாபீன்ஸ் மற்றும் சோளம் போன்றவை) இறக்குமதி செய்வது, உள்நாட்டு பால் சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறப்பது உள்ளிட்டவற்றில் இரு நாடுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...