தமிழ்நாட்டில் 2023- 2024 கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதில் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 91.55% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெற்றது. இந்த தோ்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட்டது. அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மேலும், தேர்ச்சி விகிதம், பாட வாரியாக நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் வெளியிட்டார். தேர்வு முடிவுகள் tnresults.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன்களுக்கும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் (91.55% பேர்) தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.53%, மாணவர்கள் 88.58% ஆகவுள்ள நிலையில், இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முந்தியுள்ளனர்.
மாவட்ட அளவில் அரியாலூர் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் 97.31% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.02% தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடமும், 96.36% தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. மாவட்ட அளவில் கடைசி இடத்தை வேலூர் மாவட்டம் பிடித்திருக்கிறது. அங்கு 82.07 சதவீதம் மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
4,105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 87.90 சதவீதப் பள்ளிகளில் பத்தாம் வகுப்புப் பயின்ற அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதுபோல 91.77 சதவீதம் அரசு உதவிபெறும் பள்ளிகளும், சுயநிதி பள்ளிகள் 97.43 சதவீதமும், இருபாலர் பயிலும் பள்ளிகள் 91.93 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 93.80 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 83.17 சதவீதமும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
கணிதத்தில் அதிகபட்சமாக 20,691 பேர் சதமடித்துள்ளனர். அறிவியல் பாடத்தில் 5,104 மாணவர்களும் சமூக அறிவியல் பாடத்தில் 4,428 மாணவர்களும் ஆங்கிலத்தில் 415 பேரும், தமிழில் 5 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.