ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை – ஓ. பன்னீர்செல்வம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்று இரண்டாவது நாளாக ஆஜரானார். நேற்று நடந்த விசாரணையின்போது, “ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ சதிதிட்டம் எதுவும் தீட்டவில்லை. ஜெயலலிதா மரணத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை ” என்று தெரிவித்தார்.
அதிக மாசடைந்த தலைநகரங்கள் – முதல் இடத்தில் டெல்லி
உலகின் அதிக மாசடைந்த தலைநகரங்களுக்கான பட்டியலில் இரண்டாவது ஆண்டாக டெல்லி முதல் இடத்தில் இருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 6,475 நகரங்களில் மாசு தரவுகளின் கணக்கெடுப்பை சுவிஸ் மாசு தொழில்நுட்ப நிறுவனம் நடத்தியது. அதன்படி உலகில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள தலைநகரங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் இருக்கிறது. இதேபோல் உலகின் அதிக காற்று மாசுபாட்டை உடைய நாடாக வங்காளதேசம் உள்ளது. இரண்டாவது ஆண்டாக அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் டெல்லி உள்ளது.
தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மார்ச் 24 முதல் 26 ஆம் தேதி வரை புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பி.எஃப் வட்டி: மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி வலியுறுத்தல்
வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ரவீந்திரநாத் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள பெரும்பகுதி ஊழியர்களின் இந்த உண்மையான அக்கறையை நிவர்த்தி செய்வது அரசாங்கத்தின் கடமை என்று நான் உண்மையாக நம்புகிறேன். எனவே, வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தை இனியும் குறைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, தற்போதுள்ள 8.5 சதவிகிதத்தில் தக்க வைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.