மேகதாது அணை – முதல்வர் உறுதி
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை அனைத்து வடிவத்திலும் தடுத்து நிறுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தருவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நடுவர்மன்றத் தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராகவும் கர்நாடக அரசு மேற்கொண்டு வரக்கூடிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு அனைத்து வடிவிலும் தமிழ்நாடு அரசு எதிர்க்கும், தமிழர்களின் நலனை, அரசு நிச்சயம் பாதுகாப்பதோடு, அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்றார்.
பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம்:
ஏபிவிபி முன்னாள் தலைவர் மருத்துவர் சுப்பையாவுக்கு ஜாமீன்
நங்கநல்லூர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசிப்பவர் மருத்துவர் சுப்பையா சண்முகம் (58). இவர் புற்று நோய் நிபுணர். மேலும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)அமைப்பின் தலைவராக இருந்தவர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே குடியிருப்பில் வசித்துவரும் வயதான பெண்மணி ஒருவருடன் கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதில் அந்தப் பெண்ணில் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தார் மருத்துவர் சுப்பையா. இது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.
அது தொடர்பாக மருத்துவர் சுப்பையா மார்ச் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை மார்ச் 31ஆம் தேதி வரை சிறையிலடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று சுப்பையாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
ஆளுநர் ரவியை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக ஆளுநர் ரவியை இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
மின்சாரத்துறையின் புதிய திட்டங்களில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அண்ணாமலை கூறி வந்தார். அதை தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்து வந்தார்.
இந்த சூழலில் இன்று காலை ஆளுநரை சந்தித்திருக்கிறார். தமிழக அரசின் மின் துறை மீது புகார் அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் விமான விபத்து
சீனாவின் வுசோவ் (Wuzhou) நகருக்கு அருகில் 113 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போயிங் விமானம் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் விழுந்து நொறுங்கியதால் மலைப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்து பகுதிக்கு மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன.