ஜெயலலிதா மரணம் – விசாரணை ஆணையத்தில் முதல் முறையாக ஓபிஎஸ்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் இன்று ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி விசாரணை ஆணையத்தின் முன் இருவரும் இன்று நேரில் ஆஜராகினர். ஓபிஎஸ் ஆஜராவா என்று சந்தேகம் இருந்த நிலையில் இன்று ஓபிஎஸ் ஆஜராகியிருக்கிறார். ஓபிஎஸ் ஆஜராவது இதுதான் முதல் முறை. இதற்கு முன் அவருக்கு ஒன்பது முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் முதன்முறையாக ஆஜராகியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அதிமுகவை இணைக்கவும், இபிஎஸ்ஸுடன் இணையவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விதித்த கெடுவைத் தொடர்ந்து இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆணையத்தின் விசாரணையில் 154 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். ஆனால் பின்னர் அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு, ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய சாட்சிகள் விசாரணைக்கு வராதது உள்ளிட்ட காரணங்களால் விசாரணை சற்று சுணங்கியது.
இந்நிலையில் இந்த ஆணையத்தின் விசாரணை இப்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது.
சட்டப் பேரவையில் மேகாதாது அணை எதிர்ப்பு தீர்மானம்
கர்நாடகம் காவிரியில் மேகதாது அணை கட்டும் முயற்சியில் ஈடுபடுவதை எதிர்த்து தமிழக சட்டப் பேரவையில் இன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக, பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலி, ‘தமிழக உரிமைகள் எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்கப்படாது. தமிழக உரிமைகளில் ஒன்றுபட்டு நிற்போம், வெற்றி பெறுவோம்’ என்று குறிப்பிட்டார்.
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் ‘குமாரசாமி, எடியூரப்பா என எல்லோரும் ஒரே அணியில் இருக்கிறார்கள். அது காங்கிரஸாக இருந்தாலும் சரி, பா.ஜனதாவாக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் ஒரே நிலையில் இருக்கிறார்கள். தமிழக சட்டசபையில் எல்லா கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளோம்’ என்று கூறினார்.
திசைமாறிய அசானி புயல் – தமிழ் நாட்டுக்கு மழை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டது.
அசானி புயல் 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், வடக்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த புயல், அங்கிருந்து மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறது.
இதன்காரணமாக அந்தமான் தீவுகளில் போர்ட் பிளேருக்கு கிழக்கு, தென்கிழக்கு பகுதியில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் இது அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரித்துள்ளது.
அசானி புயல் அதிதீவிரமாக மாறியதை தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்றும், கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
எம்.பியாகும் ஹர்பஜன் சிங்
கிரிக்கெட் விளையாட்டில் இருந்து சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், இப்போது அரசியலில் நுழைந்துள்ளார். பஞ்சாப்பில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில் தங்கள் கட்சியின் வேட்பாளராக ஹர்பஜன் சிங்கை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் நவஜோத் சிங் சித்துவை ஹர்பஜன் சிங் சந்தித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று பேசப்பட்டது. ஆனால் அப்போது அவர் இதை மறுத்தார். இந்தச் சூழலில் ஆம் ஆத்மி கட்சி அவருக்கு எம்.பி பதவியை வழங்கவுள்ளது.