வாழ்க்கையில் துரதிஷ்டம் துரத்திக்கொண்டே இருக்கும் ஒருவருக்கு, அதிர்ஷ்டம் டபுள் ஆக அடித்தால், அவரால் அதை தக்க வைக்க முடிகிறதா இல்லையா என்பதே ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஒன்லைன்.
தமிழ் சினிமாவில் அதிகம் பார்த்து, சலித்து போன முக்கோண காதலை சொல்லும் அதே புளித்த தோசை மாவு கதைதான். ஆனால் நடிப்பிற்கு நயன்தாரா, நடிப்புக்கும் கவர்ச்சிக்கும் சமந்தா, கூடவே படம் நெடுக காமெடி என நம்முடைய ரசிகர்களுக்கு ’அத்தியாவசியமான’ மசாலாக்களை சேர்த்து, மசால் தோசையாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
பொதுவாக வித்தியாசமான காதல் கதைகளில் ஹீரோ இரண்டு பெண்களை காதலிப்பார். ஆனால் இந்தப்படத்தில் ஹீரோவை இரண்டு பெண்கள் வெளிப்படையாகவே காதலிக்கிறார்கள்.
லிவ்விங் டுகெதர் கலாச்சாரத்தில் இருவரும் ஹீரோவுடன் சேர்ந்தே தங்குகிறார்கள் என திரைக்கதையில் 2K கிட்ஸை டார்கெட் செய்திருக்கிறார்கள்.
பிறகு இந்த இரண்டு பெண்களுக்கு இருக்கும் காதல், பொஸசிவ்னெஸ் இரண்டையும் காமெடி கலாட்டாவாக காட்டியிருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி சில படங்களில் நடிக்காமலேயே பெயரைத் தட்டிச் செல்வார். அதேபோல்தான் இந்த படத்திலும், ஸ்கோர் செய்திருக்கிறார். நயன்தாரா உணர்வுகளை அழகாய் அளவாய் வெளிக்காட்டியிருக்கிறார். ஆனால் நயன்தாராவின் நடிப்பையும் தாண்டி, அவரது சோர்ந்து போன தோற்றம் கண் முன் நிற்கிறது. சில காட்சிகளில் பரிதாபமாக இருக்கிறார். டியர் லேடி சூப்பர் ஸ்டார், இனியும் இது தொடர்ந்தால் ’லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கு போட்டி நிச்சயம். சமந்தா, கவர்ச்சி நடிப்பு இரண்டிலும் சமர்த்தா செய்திருக்கிறார். விஜய் சேதுபதி உடன் பணியாற்றுபவராக வரும் மாறனுக்கு இனி கூடுதல் வாய்ப்புகள் வரலாம்.
விவாகரத்திற்கு பிறகு இரண்டாவது ரவுண்டை தொடங்கியிருக்கும் சமந்தாவுக்கு ஃபேன் க்ளப் அதிகரித்தால் ஆச்சயர்மில்லை. பிரபு, ஜூவல்லரி விளம்பரத்தில் கொடுத்திருக்கும் அதே பெர்ஃபார்மன்ஸை இப்படத்திலும் கொடுத்திருக்கிறார்.
படத்தின் உண்மையான ஹீரோ அனிரூத். அவருக்கு இது 25-வது படம். பாடல்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். பின்னணியிலும் தூள் கிளப்பியிருக்கிறார்.
விஜய் கார்த்திக் கண்ணன், கதிரின் ஒளிப்பதிவு இரண்டு காதலையும் ஃப்ரேம்களில் அட்டகாசமாய் பதிவு செய்திருக்கிறது.
படத்தின் மிகப்பெரிய பலம். விக்னேஷ் சிவனின் வசனம். ‘ஐ லவ் யூ டு’ என்ற வார்த்தைகளுக்கு இனி காதலர்கள் மத்தியில் புது அர்த்தம் கொடுத்திருப்பது விக்னேஷ் சிவனுக்கு கிடைத்திருக்கும் வெற்றி. நயன்தாராவும், சமந்தாவும் தனியாக சந்திக்கும் காட்சியில், நயன் ‘அவன் என்னை கல்யாணம் பண்ணிட்டான்’ என்று சொல்லும் போது, சமந்தா ‘அவன் என்னை பண்ணிட்டான்’, அதான் பண்ணிட்டான்னு சொல்றேன்ல. கண்ணால பார்த்தாதான் தெரியுமா?’ என்று பதில்சொல்வதும், ‘பொண்ணுக்கு மேரேஜ்தான் முக்கியம்’ என்கிற நயனுக்கு, சமந்தா ‘பொண்ணுக்கு மேட்டர்தான் முக்கியம்’ என்று சொல்லும் காட்சியில் பாதாம் பிஸ்தா வைத்து பண்ணியிருக்கும் நகாசு காமெடிக்கு திரையரங்குகளில் கைத்தட்டல்கள் அடங்க நேரமாகிறது.
கேப் டிரைவரான விஜய் சேதுபதியை 2 மணி நேர பேக்கேஜ்ஜில் வரவழைத்து தனது ஃப்ளாட் காம்பவுண்டை சுற்றி சுற்றி வரச்சொல்லும் காட்சி ரொமான்டிக் ஹைக்கூ.
குஷி, அலைப்பாயுதே, டைட்டானிக் படங்களில் பிரபலமான காட்சி, பாடல் காட்சிகளை விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தாவை வைத்து ட்ரிபிள் எஃபெக்ட்டில் எடுத்திருப்பதும் ரசிக்க வைக்கிறது.
படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் ’ரஞ்சன்குடி அன்பரசன் முருகேசன் ஓஹோந்திரன்’ அவரது பெயரைப் போலவே படம் காத்துவாக்குல இரண்டு மணி நேரம் 39 நிமிடம் 4 விநாடிகள் நீள்கிறது. அவருடைய பெயரை RAMBO என்று சுருக்கியது போல், திரும்ப திரும்ப வரும் சில காட்சிகளைத் தவிர்த்து சுருக்கென்று எடிட் செய்திருந்தால் கொஞ்சம் சலிப்புத்தட்டாமல் இருந்திருக்கும்.
தமிழ் சினிமாவில் 90-ஸ் கிட்ஸூக்கு பழகிய முக்கோண காதல் கதையை, 2கே கிட்ஸூக்கு ஏற்ற வகையில் அழகாய், நகைச்சுவையாய் எடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அந்த வகையில் 2கே கிட்ஸ் மார்க்கெட்டை பக்காவாக டார்கெட் செய்திருக்கிறார்.
ஆக மொத்தம், காத்துவாக்குல ரெண்டு காதல் – வீக்எண்ட் வாக்குல ரெண்டரை மணி நேர என்டர்டெயின்மெண்ட்!