No menu items!

ரஷ்யா – உக்ரைன் போர்: இந்திய சமையலுக்கு சிக்கலா?

ரஷ்யா – உக்ரைன் போர்: இந்திய சமையலுக்கு சிக்கலா?

2021- 22 நிதியாண்டில் இந்தியாவில் சமையல் எண்ணெய் உற்பத்தி 10 மில்லியன் டன்னாக உள்ளது. ஆனால், இந்தியாவுக்கு தேவைப்படும் சமையல் எண்ணெய் அளவோ 23 மில்லியன் டன்னாக உள்ளது.

பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சன் பிளவர் ஆயில் என்ற சூரியகாந்தி எண்ணெய்க்கு இப்போது டிமாண்ட். காரணம் ரஷ்யா – உக்ரைன் போர். போர் நீடித்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்த எண்ணெய்க்கு தட்டுப்பாடு வருமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

‘ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ எண்ணெய்தான் வழங்கப்படும்’ என்று பெங்களூருவில் உள்ள ஒரு கடையில் அறிவிப்புப் பலகை வைக்கும் அளவுக்கு இப்போது நிலைமை இருக்கிறது.

என்ன காரணம்?

இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெயில் சுமார் 90 சதவீதம் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இப்போது போரால் அந்த இறக்குமதி பாதிக்கப்பட விலைவாசி ஜிவ்வென்று உயர்ந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெயின் விலைதான் தாறுமாறாக உயர்கிறதென்றால், பாமாயில், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றின் விலையும் அதற்கு இணையாக ஏறி மூச்சுமுட்ட வைக்கிறது.

சமையல் எண்ணெய்களின் விலை இப்படி கடுமையாக உயர்ந்து வருவதற்கு, அவற்றின் நுகர்வு அதிகரித்துள்ளதே முக்கிய காரணம் என்று தரவுகள் கூறுகின்றன.

கடந்த 2004 -05-ல் இந்தியர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக கிராமப்புறங்களில் மாதம் 370 கிராம் முதல் 480 கிராம் எண்ணெய்யையும், நகர்ப்புறங்களில் 560 கிராம் முதல் 660 கிராம் எண்ணெய்யையும் மாதந்தோறும் பயன்படுத்தியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்களின் உணவுப் பழக்கம் மாறிவருவதால் எண்ணெயின் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது.

2011-12-ல் கிராமப்பகுதிகளில் மாதம் 670 கிராம், நகரப்பகுதிகளில் 850 கிராமாக எண்ணெயின் நுகர்வு அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியென்றால், இப்போது இன்னும் எந்த அளவுக்கு தனிநபர் நுகர்வு அதிகரித்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. நிச்சயம் 1 கிலோவுக்கும் அதிகமாக தனிநபர் நுகர்வு அதிகரித்திருக்கும்.

இப்படி சமையல் எண்ணெயின் தேவை அதிகரித்து இருப்பதும், அதற்கு ஏற்ப இந்தியாவில் அதன் உற்பத்தி இல்லாமல் இருப்பதும் அதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

2021- 22 நிதியாண்டில் இந்தியாவில் சமையல் எண்ணெய்யின் உற்பத்தி 10 மில்லியன் டன்னாக உள்ளது. அதேநேரத்தில் இந்தியாவுக்கு தேவைப்படும் சமையல் எண்ணெய்யோ 23 மில்லியன் டன்னாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 13 மில்லியன் டன் சமையல் எண்ணெய் தேவைப்படுகிறது.

இந்திய விவசாயிகளைப் பொறுத்தவரை அரிசி, கோதுமை, கரும்பு, சோளம் போன்ற பொருட்களை உற்பத்தி செய்வதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தப் பொருட்களை அரசாங்கமே கொள்முதல் செய்யும் என்பது அவர்கள் இப்பொருட்களை உற்பத்தி செய்ய முக்கிய காரணமாக உள்ளது. அதே நேரத்தில் அரசு நேரடியாக கொள்முதல் செய்யாததால் எண்ணெய் வித்துகளைப் பயிரிடுவதில் இந்திய விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் சமையல் எண்ணெய்க்கான தேவையை எதிர்கொள்ள இந்திய அரசு வெளிநாட்டு இறக்குமதியை பெரிய அளவில் சார்ந்துள்ளது.

இதற்காக ஆண்டுதோறும் சுமார் 62 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடவேண்டி உள்ளது. இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளை பாமாயிலுக்காகவும், அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளை சோயாபீன் எண்ணெய்க்காகவும், உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகளை சூரியகாந்தி எண்ணெய்க்காகவும் இந்தியா பெரிதும் சார்ந்துள்ளது. அதனால் எண்ணெய் விலை உயர்வில் அந்நாடுகளின் சூழலும் பொருளாதாரக் கொள்கைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்நாடுகளில் ஏற்படும் சிறிய மாற்றங்கள்கூட இந்திய எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சமையல் எண்ணெய்யின் விலை சீராக இருக்க வேண்டுமென்றால், ‘எண்ணெய் உடலுக்கும் பர்ஸுக்கும் கேடு’ என்பதை உணர்ந்து அதன் நுகர்வை கட்டுப்படுத்த வேண்டும். அல்லது அரசாங்கம் எண்ணெய் வித்துகளை உற்பத்தி செய்ய விவசாயிகளைத் தூண்டு அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு முடிவை எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...