உத்தரப் பிரதேச தேர்தலில் ரிமோட் கண்ட்ரோலராக இருந்து தங்கள் கட்சியை இயக்கும் தலைவர்களைத் தெரிந்துகொள்வோம்
நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஒட்டுமொத்த இந்தியாவே உற்று நோக்குவது உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் சட்டப் பேரவைத் தேர்தலைத்தான். நாடாளுமன்றத்துக்கு 80 எம்பிக்களை அனுப்பும் சக்திவாய்ந்த மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருப்பதே இதற்கு காரணம். 403 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ரிமோட் கண்ட்ரோலராக இருந்து தங்கள் கட்சியை இயக்கும் தலைவர்களைத் தெரிந்துகொள்வோம் –
யோகி ஆதித்யநாத் (பாஜக)
உத்தரப் பிரதேசத்தில் இந்த தேர்தலில் பாஜகவின் ஸ்டியரிங்கைப் பிடித்திருப்பவர் யோகி ஆதித்யநாத். இந்திய அளவிலேயே பாஜகவின் ‘பவர்’ ஸ்டியரிங் இவர் வசம் செல்ல வாய்ப்புள்ளதாக பாஜக பட்சிகள் சொல்கின்றன. பாஜகவின் அடிப்படை அமைப்பான ஆர்எஸ்எஸில் இவருக்கு எக்கச்சக்க ஆதரவு.
இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் அஜய் சிங் பிஷ்ட். உத்தரப் பிரதேசத்தின் முக்கிய பாஜக பிரமுகராக இருந்த மகந்த் ஆவித்யநாத்தின் மகனான யோகி, தந்தையின் நிழலில் அரசியலில் அடியெடுத்து வைத்தார். 1998-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வென்று எம்பி ஆனபோது யோகியின் வயது 26. இந்த தேர்தலில் வென்ற இளம் வயது எம்பி இவர்தான்.
பாஜகவுக்கு உள்ளேயே ‘இந்து யுவ வாஹினி’ என்ற அமைப்பைத் தொடங்கி இளைஞர்களை ஈர்த்த யோகி, கோரக்கநாதர் கோயிலின் தலைமை துறவியாகவும் இருந்தார். இதனால் இந்துத்துவவாதிகளின் ஆதரவும் அவருக்கு கிடைத்தது.
ஒரு பக்கம் இந்துத்துவவாதிகளின் ஆதரவு, மறுபக்கம் இளைஞர்களின் ஆதரவு, இதுவும் போதாதென்று தலித்துகளுக்கு ஆதரவான சில நிலைபாடுகளால் அவர்களின் ஆதரவும் கிடைத்தது. இந்த மூன்று தரப்புகளின் ஆதரவால் கடந்த தேர்தலில் பாஜக வென்றதும், மூத்த தலைவர்களை முறியடித்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.
உத்தரப் பிரதேசத்தின் முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யாதது, தீவிர இந்துத்துவவாதியாக இருப்பது என்று யோகிக்கு எதிராக பல விஷயங்கள் உள்ளன. இருப்பினும் ராமர் கோயில் கட்டும் பணிகளை துரிதப்படுத்தியது, எதிர்ப்பு ஓட்டுகள் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என பிரிந்து கிடப்பது ஆகியவை யோகிக்கு இன்றும் சாதகமாக உள்ளன.
அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி)
‘சிவப்பு குல்லாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அது உத்தரப் பிரதேசத்துக்கான சிவப்பு எச்சரிக்கை’ என்று உத்தரப் பிரதேசத்தில் தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில் அம்மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் பிரதமர் மோடி. சிவப்பு குல்லாவை தன் அடையாளங்களில் ஒன்றாக வைத்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவைப் பற்றித்தான் இப்படிக் குறிப்பிட்டார் மோடி. உத்தரப் பிரதேசத்துக்கு சிவப்பு எச்சரிக்கையோ இல்லையோ, அம்மாநிலத்தில் பாஜகவுக்கு சிவப்பு எச்சரிக்கையாக இருக்கிறார் அகிலேஷ் யாதவ்.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலினை கலைஞர் வளர்த்தெடுத்ததுபோல், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவால் வளர்க்கப்பட்டவர் அவரது மகன் அகிலேஷ். கலைஞரைப் போலன்றி, தான் உயிரோடு இருக்கும்போதே 2012-ம் ஆண்டில் மகன் அகிலேஷை முதல்வராக்கி அழகுபார்த்தார் முலாயம் சிங் யாதவ். இதன்மூலம் இளம் வயதிலேயே (38 வயது) ஆட்சிப் பொறுப்பேற்ற இளம் முதல்வர் என பெயர்பெற்றார். அகிலேஷுக்கு பொறுப்பு வழங்கியது முலாயமின் சகோதரர் சிவபால் சிங் யாதவுக்கு பிடிக்காமல் போக, கட்சிக்குள் பனிப்போர் மூண்டது. பிற்காலத்தில் சித்தப்பாவை மட்டுமின்றி அப்பாவையே ஓரங்கட்டி கட்சியைக் கைப்பற்றினார் அகிலேஷ். முலாயம் சிங் யாதவ் உயிரோடு இருந்தாலும், இப்போதைக்கு சமாஜ்வாதி கட்சியின் முகவரி அகிலேஷ் யாதவ்தான்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும், ராஜஸ்தானில் உள்ள தால்பூரில்தான் அகிலேஷ் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் மைசூருவில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்தவர், 1999-ம் ஆண்டில் மனைவி டிம்பிளைக் கரம்பிடித்தார். 2000-ம் ஆண்டில் கன்னோஜ் மக்களவை தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் அரசியலில் காலடி எடுத்துவைத்தார்.
உத்தரப் பிரதேச அரசியலில் சாணக்கியனாக திகழ்ந்த, தன்னை உருவாக்கிய முலாயம் சிங்கையே ஓரம்கட்டி வைத்தவர் என்பதை வைத்தே இவரது திறமையை அறிந்துகொள்ளலாம்.
தேர்தல் பிரச்சாரத்தில் அகிலேஷ் செல்லும் இடங்களெல்லாம் கூட்டத்தால் நிரம்பி வருகிறது. இது பாஜக மற்றும், பகுஜன் சமாஜ் கட்சியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ஆனால், தனக்காக கூடும் கூட்டத்தை அகிலேஷால் வாக்குகளாக மாற்ற முடியுமா என்பதுதான் இப்போதுள்ள ஒரே கேள்வி.
மாயாவதி (பகுஜன் சமாஜ்)
யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் ஆகிய 2 குதிரைகளுக்கு இடையே உத்தரப் பிரதேச தேர்தலில் ஓடும் கருப்புக் குதிரை மாயாவதி. ‘பெஹன்ஜி’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர். உத்தரப் பிரதேச அரசியலில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கன்ஷி ராமின் நம்பிக்கையைப் பெற்ற மாயாவதி, 1995-ம் ஆண்டில் முதல் முறையாக உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்,
ஒடுக்கப்பட்ட சமூகத்தில், ஏழ்மை நிறைந்த சூழலில் பிறந்து வளர்ந்தவரான மாயாவதி, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதல்வரானதை, ‘ஜனநாயகத்தின் மந்திர சக்தி’ என்று வர்ணித்தார் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்.
ஆரம்ப காலகட்டத்தில் கன்ஷி ராமின் நிழலில்தான் தனது அரசியல் வாழ்க்கையை நடத்தினார் மாயாவதி. 2001-ம் ஆண்டில் தனது அரசியல் வாரிசு என்று மாயாவதியை கன்ஷி ராம் அறிவிக்க, அரது அரசியல் கிராஃப் ஏறத் தொடங்கியது. உத்தரப் பிரதேச முதல்வராக 4 முறை பொறுப்பு வகித்துள்ள மாயாவதிக்கு, கடந்த 2012-ம் ஆண்டு முதல் முதல்வர் பதவி எட்டாக்கனியாக இருக்கிறது. இக்கனியை இம்முறை எப்படியும் பறித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் மாயாவதி.
பிரியங்கா காந்தி (காங்கிரஸ்)
பாஜகவுக்கு சிம்ம சொப்பனமோ இல்லையோ, அகிலேஷ் யாதவுக்கு தடைக்கல்லாக இருக்கிறார் பிரியங்கா காந்தி. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக இவர் உருவெடுத்த பிறகு அங்கு காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்களின் வாக்கை இவர் கவர வாய்ப்புகள் அதிகம். அப்படி இவர் சிறுபான்மை இன வாக்குகளைப் பிரித்தால், அது அகிலேஷின் வாய்ப்புகளை பாதிக்கும். அந்த வகையில் பாஜகவை விட அகிலேஷின் சமாஜ்வாதி கட்சிதான் பிரியங்காவை நினைத்து அதிக அச்சத்தில் இருக்கிறது.
தோற்றத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை நினவுபடுத்தும் பிரியங்கா காந்தி, துணிச்சலிலும் தன் பாட்டியைப் போலத்தான். கடந்த 5 ஆண்டுகளில் பல கட்டங்களில் மாநில அரசின் கட்டுப்பாடுகளை மீறி போராட்டங்களை நடத்தியுள்ளார். ராகுல் காந்தியைவிட 2 வயது இளையவரான பிரியங்கா காந்தி, டெல்லி பல்கலைக்கழகத்தில் சைக்காலஜி படித்தவர். அதனால்தானோ என்னவோ ராகுலைவிட மக்களின் சைக்காலஜியை அதிகம் புரிந்துகொண்டவராக பிரியங்கா இருக்கிறார். அது காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் கைகொடுக்கிறது.