மாதவன் எக்ஸ்க்ளூசிவ்!
நம்பி நாராயணனின் வாழ்க்கையை, அவரது போராட்டமயமான தருணங்களை ‘ராக்கெட்ரி’ திரைப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் மாதவன்.
‘அலைபாயுதே’ படத்தில் அறிமுகமான ‘சாக்லேட் பாய்’ மேடியா இது என ஆச்சர்யப்பட வைக்கும் வகையில், தனது சினிமா கேரியரில் பல தளங்களில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார் மாதவன்.
காதல், கலாட்டா என இளமை ததும்பும் கதாபாத்திரங்களில், நாயகனாக இளம் பெண்களின் மனம் கவர்ந்தவர், இன்று கதைகளின் நாயகனாக அனைத்து தரப்பு சினிமா ப்ரியர்களின் கவனத்தை ஈர்க்கும் நட்சத்திரமாக வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.
’விக்ரம் வேதா’, ‘இறுதிச்சுற்று’, ‘மாறா’, ’த்ரீ இடியட்ஸ்’, ’டி கம்ப்ள்ட்’ வெப் சிரீஸ் என இவரது பயணம், ஒவ்வொரு படத்திலும் புதிய பரிமாணத்தையும், அடையாளத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழ், இந்தியில் முன்னணி நட்சத்திரமாக அடையாளம் காணப்படுபவர் இன்று இயக்குநராகவும் களமிறங்கி இருக்கிறார்.
’ராக்கெட்ரி’ திரைப்படம் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் அடுத்த கட்டத்துக்கு அடியெடுத்து வைத்துள்ள மாதவனால், இன்று கூகுளில் அதிக தேடப்படும் பெயராகி இருக்கிறது ‘நம்பி நாராயணன்’ என்னும் பெயர். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரியான நம்பி நாராயணனின் வாழ்க்கையை, அவரது போராட்டமயமான தருணங்களை ‘ராக்கெட்ரி’ திரைப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் மாதவன்.
‘ராக்கெட்ரி’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பின் போது மாதவனுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அப்போது மாதவன் மனம்விட்டு பகிர்ந்து கொண்ட ‘மேடி எஃபெக்ட்’-ஐ வாவ் தமிழாவின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
“அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்று கமர்ஷியல் படங்களில் நடிப்பது எனக்கேற்றதாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. வித்தியாசமான, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதைகளை கமர்ஷியலாக சொல்லும் கதாபாத்திரங்களில் நடிப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன். அப்படி அமைந்ததுதான் என்னுடைய சமீபத்திய படங்கள் எல்லாம்.
இந்த மாதிரியான படங்களில் நடிப்பது என்பது கொஞ்சம் ரிஸ்க்கானதுதான், ஆனால் இன்று மில்லினியல் தலைமுறையினரிடமிருந்து கிடைக்கும் வரவேற்பு, விமர்சனம், தூக்கி வைத்து கொண்டாடும் ஆர்வம் ஆகியவைதான் என்னை இதுபோன்ற கதைகளை, கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு தூண்டி விடுகின்றன.
’ராக்கெட்ரி’ படம் என் மனதுக்கு மிக நெருக்கமான படமாக வந்திருக்கிறது. படத்தைப் பார்த்த பிறகு ’யார் இந்த நம்பி நாராயணான்?’ என்ற கேள்வி இந்த தலைமுறைக்கும் எழும் என்பது நிச்சயம்.
நான் துபாயில் இருக்கும்போது,, இந்தியாவில் இருக்கும் என் நெருங்கிய நண்பர்களுக்காக ப்ரிவியூ ஷோ ஏற்பாடு செய்தேன். நான் முதல் முறையாக தயாரித்து, இயக்கிய படம் என்பதால், எல்லோருக்கும் ஒரு இண்ட்ரஸ்ட் இருந்தது. சரியாக படம் ஆரம்பிக்கும் நேரம், என்னோட ஃப்ளைட் டேக் ஆஃப் ஆனது. துபாயிலிருந்து இந்தியாவுக்குப் பறந்து வந்து கொண்டிருந்தேன். ஏறக்குறைய நான் இந்தியாவில் லேண்ட் ஆகவும், படம் முடியவும் சரியாக இருந்தது. ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வரவும், மளமளவென ஃபோன் கால்கள் வந்துகொண்டே இருந்தன. படம் பார்த்த ஃப்ரெண்ட்ஸ்தான் பேசினார்கள்.
அவர்களுடைய ஃபோன் கால்ஸை ஆர்வத்துடன்தான் பேச ஆரம்பித்தேன். சொல்லி வைத்த மாதிரி யாரும் என்னுடைய டைரக்ஷனை பத்தியோ அல்லது என்னுடைய நடிப்பைப் பத்தியோ யாரும் பேசவே இல்லை.
‘யாருடா இந்த நம்பி நாராயணன்?’,
‘நீ படத்துல சொன்னதெல்லாம் உண்மையா?’
‘உண்மையிலேயே அவங்க மனைவி அந்தளவுக்கு பாதிக்கப்பட்டாங்களா?”
இப்படிதான் கேள்வி கேட்டாங்களே தவிர, ஒருத்தர் கூட ’எப்படிடா டைரக்ஷன் பண்ணின, கெட்டப் சேஞ்ச் ஈஸியா இருந்துச்சா’ என கேட்கவே இல்லை.
’நீ நல்லா நடிச்சிருக்க’ என்று எந்த ஃப்ரெண்ட்ஸூம் பாராட்டவில்லை.
பரபரப்பாக ஃப்ளைட்டில் பறந்து வந்த எனக்கு செம கோபம். ‘அடேய் நண்பன்களா ஒருத்தன் கூட, என்னைக் கண்டுக்கொள்ளவில்லையே’ என்ற ஆதங்கம்.
கொஞ்சம் ரிலாக்ஸாக யோசித்த போதுதான் புரிந்தது. நம்பி நாராயணன் எந்தளவுக்கு அவர்களுக்குள் ஒரு தாக்கத்தை உருவாக்கி இருக்கிறார் என்பது. நம்பி நாராயணன் நமக்கு கிடைத்த ஒரு வரம் என்பதை இந்தப்படம் பார்க்கும் போது ஒவ்வொருவரும் நிச்சயம் ஃபீல் பண்ணுவோம்.
இந்தப் படத்தில் நம்பி நாராயணனாக நடிப்பது எனக்கு ரொம்ப சவாலாகதான் இருந்தது. சின்ன வயது நம்பியாக நடிக்க எடையைக் குறைக்க வேண்டியிருந்தது. அப்புறம் அடுத்த கட்டங்களில் எடையைக் கூட்ட வேண்டிய கட்டாயம். வயது அதிகமாகி கொண்ட வரும் போது அதற்கேற்றால் போல் எடை, பாடி லாங்வேஜ் என அதிகம் மெனக்கெட வேண்டியிருந்தது.
‘ராக்கெட்ரி’ நான் ரொம்பவே இன்வால்வ் ஆகி நடித்திருக்கும் படம். இந்தப் படத்தைப் பார்த்தால், ’சாக்லேட் பாய்’ ஆக அறிமுகமான மாதவனா என்று எல்லோரும் சந்தேகப்படுவார்கள்.
என்னைப் பொறுத்தவரை, நாம் கொண்டாட வேண்டியவர்களை அவர்கள் வாழ் நாளிலேயே தூக்கி வைத்து கொண்டாட வேண்டும், அவர்களின் மறைவுக்குப் பின் மரியாதை கொடுத்து, புகழ்ந்து பேசுவது என்பது வீண்.
அந்த வகையில் ’ராக்கெட்ரி’ படம், என்னால் முடிந்த ஒரு சிறிய முயற்சி’’ என்று பிஎஸ்எல்வி-யின் லேட்டஸ்ட் வெர்ஷனின் வேகத்தில் பேசி முடித்தார் மாதவன்.
ஃபோன் உரையாடலின் முடிவில் க்ரையொஜெனிக் தொழில்நுட்பத்தினால் குளிரூட்டப்பட்டது போல மனம் குளிர்ந்திருந்தது.
நம்பி எஃபெக்ட்டான ’ராக்கெட்ரி’யில் ’மேடி எஃபெக்ட்’. மேஜிக் செய்யும் என எதிர்பார்க்கலாம்.