No menu items!

மிஸ் ரகசியா – முதல்வரின் கோபம்

மிஸ் ரகசியா – முதல்வரின் கோபம்

 “அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி தன் கையில் கிடைத்திருப்பதால் உற்சாகமாக இருக்கிறார் இபிஎஸ். இதே வேகத்தில் கட்சியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதில் உறுதியாக இருக்கிறார்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

 “ஏடிஎம்கே நியூஸ் நிறைய இருக்குபோல” என்றோம்.

 “ஆமாம். தன்னால் நியமிக்கப்பட்ட பொருளாளருக்கு வங்கியில் அங்கீகாரம் கிடைத்தது, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது போன்ற விஷயங்களால் உற்சாகமாக இருக்கிறார் இபிஎஸ். இதே உற்சாகத்தோடு டெல்லிக்கும் செல்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் டெல்லி செல்வதாக வெளியில் சொன்னாலும், மோடி, அமித்ஷா ஆகியோரைச் சந்திப்பது, தேர்தல் கமிஷனில் தனது தரப்பு விஷயங்களை தெளிவுபடுத்துவது ஆகியவை இந்த பயணத்தின் முக்கிய நோக்கங்களாக இருக்கும்னு அதிமுக ஆட்கள் சொல்றாங்க”

 “அதிமுககாரங்க டெல்லி போனாலே அப்பாயிண்ட்மெண்ட் வாங்குறதுதானே முதல் வேலையா இருக்கும். சரி, ஓபிஎஸ்ஸுடன் இணைந்து போங்கனு மோடியும், அமித் ஷாவும் சொன்னால் எடப்பாடி என்ன செய்வார்?”

 “ஓபிஎஸ்ஸைவிட தன்னால்தான் பாஜகவுக்கு அதிக ஆதாயம்னு மோடி, அமித்ஷாவிடம் சொல்லப்போறாராம்.  இப்ப இருக்கிற சூழல்ல அதை அவங்க ஏத்துப்பாங்கன்ற நம்பிக்கைல இருக்கார்.”

“ஏத்துக்கலனா என்ன செய்வார்?”

“பாஜக கூட்டணிக்கு குட்பை சொல்லிறலாம்னு இருக்கார். கட்சி கைல இருக்கும்போது யாரும் எதுவும் பண்ண முடியாதுன்ற நம்பிக்கை அவருக்கு இருக்கு. இதை பாஜகவுக்கு தெளிவுபடுத்தறதுக்குதான் ஜிஎஸ்டி வரியை நீக்க சொல்லி மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்டியது. வழக்கமா மத்திய அரசு திட்டங்களை குறை சொல்ல மாட்டார். இந்த முறை அதை செஞ்சிருக்கார்”

 “ஓபிஎஸ்ஸும் சும்மா இருக்க மாட்டாரே?”

 “செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக சென்னைக்கு பிரதமர் வரும்போது எப்படியாவது அவரைச் சந்தித்து தனது தரப்பு நியாயங்களை சொல்லிவிடவேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார் ஓபிஎஸ். நிறைய வழக்கு போட்டு எடப்பாடி கோஷ்டியை சிக்கல்ல வச்சிருக்கணும்னு ஓபிஎஸ் கோஷ்டி நினைக்குது.  ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டது இந்த அடிப்படையில்தான்.  தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்  தாக்கல் செய்துள்ள மனுவில் சொல்லப்பட்டிருக்கு. நீதிமன்றமும்  அந்த மனுவை ஏற்றுக்கொண்டு இபிஎஸ்ஸுக்கு  நோட்டீஸ் அனுப்பியிருக்கு. கோர்ட் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு தொல்லை கொடுப்பது தொடரும்”

 “ நீதிமன்றமே ஏடிஎம்கே ஹெட் ஆஃபிஸ் சாவியை வாங்கி எடப்பாடி தரப்புக்கு கொடுத்தப் பிறகும் தன் வழக்கும் நிக்கும்னு ஓபிஎஸ் நம்புறாரா? ஆச்சரியம்தான். சரி, ஆர்.பி.உதயகுமாருக்கு எப்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி கிடைத்ததாம்?”

 “எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார் என்ற கேள்வி வந்தபோது நத்தம் விஸ்வநாதன்,  ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய மூவரின் பெயர்கள்தான் பரிசீலனையில் இருந்தது. ஆனால் திடீரென்று ஆர்.பி.உதயகுமார் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு 2 காரணங்களைச் சொல்கிறார்கள். முதல் காரணம் வேலுமணி, தங்கமணி இருவரின் சிபாரிசு.  இரண்டாவது காரணமாக கட்சிக்காரர்கள் இன்னொரு விஷயத்தைச் சொல்கிறார்கள். ஆர்.பி. உதயகுமார் எடப்பாடியை தனியாக சந்தித்து, ‘தென்மாவட்ட கட்சி செலவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்னை  எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமியுங்கள் என்று கோரிக்கை வைத்தாராம். இந்த டீல் எடப்பாடிக்கு பிடித்துப் போனதால் அவருக்கு பதவி கொடுத்ததாகச் சொல்கிறார்கள். ஒரு காலத்தில் பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த ஆர்.பி.உதயகுமாரும் இப்போது எனக்கு எடப்பாடிதான் எல்லாம் என்று சொல்லி வருகிறார்.”

“குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ரமணா முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது குட்கா ஊழல் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய  அனுமதி கேட்டு தலைமைச் செயலாளருக்கு சிபிஐ  கடிதம் அனுப்பி இருக்கிறதே?”

 “ஆமாம்.  அதேசமயம் திமுக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஷயத்தில் இப்போதைக்கு அமலாக்கத்துறை மென்மையாக இருக்கிறது.   எடப்பாடியிடம் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இதை சுட்டிக்காட்டியபோது, ‘நம்மைப் பணியவைக்க பாரதிய ஜனதா செய்யும் வேலை இது அவர்கள் இரட்டை இலையை முடக்கினால் கூட ஆச்சரியம் இல்லை. அவர்கள் தாராளமாக செய்யட்டும் நான் ஏற்கனவே சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவன் ஜெயலலிதா அம்மையாருக்கு இரட்டை இலையை விட சேவல் சின்னம் தான் விருப்பம் அதிகம்.தனி அணியாக போட்டியிட்டு வெற்றி பெற்று உண்மையான  அதிமுக நான்தான் என்று நிரூபிப்பேன்’ என்று சொல்லியிருக்கிரார் எடப்பாடி பழனிசாமி.”

 “கொரோனாவில் இருந்து மீண்டுவந்த முதல்வர் எப்படி இருக்கிறார்?”

 “ஒருபக்கம் கோபம், மறுபக்கம் உற்சாகம் என்று கலந்த மனநிலையில் இருக்கிறார் முதல்வர்.”

 “முதல்வரை கோபப்படுத்திய விஷயங்களை முதலில் சொல்”

 “கள்ளக்குறிச்சி கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து முதல்வர் இன்னும் மீளவில்லை. இந்த விவகாரத்தில் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளே பணம் வாங்கியதாக ஒரு புகார் முதல்வருக்கு சென்றிருக்கிறது. அது உண்மையா என்று விசாரிக்க சொல்லியிருக்கிறாராம். கூடிய விரைவில் கட்சிக்குள் நடவடிக்கைகள் இருக்கும் என்று அறிவாலயத்தினர் கூறுகிறார்கள்”

 “உளவுத் துறை மீதும் முதல்வர் அதிருப்தியில் இருக்கிறாராமே. உளவுத் துறை ஐஜி ஆசியம்மாளை மாற்றியிருக்கிறார்களே?”

  “ ஆமா. உளவுத் துறை மீதும் அதிருப்திதான். ஆனால் அதிலிருக்கும் அரசியலையும் அவர் கவனிக்கிறார். அதனால் உடனடி முடிவு வேண்டாம் என்று நினைக்கிறாராம் முதல்வர்”

“என்ன அரசியல்”

“உளவுத் துறை டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மீது குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. டேவிட்சனை மாற்றிவிட வேண்டும் என்று பாஜக தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பது முதல்வரை உறுத்துகிறது. அவர் இருப்பது ஏன் பாஜகவுக்கு பிடிக்கவில்லை என்ற விதத்தில் முதல்வர் யோசிக்கிறார். ஆனால் உளவுத் துறை மீது முதல்வர் கவனம் செலுத்தவில்லை என்ற எண்ணமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஐஜி ஆசியம்மாளை மாற்றியிருக்கிறார்கள். உளவுத் துறையில் பாஜக ஆதரவு ஆட்கள் இருக்கிறார்களா என்ற விசாரணையும் நடக்கிறது”

”ஆனால் கலவரத்தை தடுத்திருக்க வேண்டியது காவல்துறையின் கடமை அல்லவா? உளவுத் துறை முன்கூட்டியே தகவல் அளித்திருந்தால் கலவரம் தடுக்கப்பட்டிருக்குமே?”

”உண்மைதான். கள்ளக்குறிச்சியில் கலவரம் நடக்க வாய்ப்புள்ளது என்று உள்ளூர் உளவுத்துறை போலீஸாரால் சென்னை தலைமையகத்துக்கு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால்  அவரை நேரில் சந்திக்க முடியாத டேவிட்சன் ஆசிர்வாதம்  முதல்வர் செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரியிடம் சொல்லியிருக்கிறார்.  அவர் அதை முதல்வரிடம் சொல்வதற்கு பதில் டிஜிபியிடம் கூறியிருக்கிறார். டிஜிபி, இதை தான் கவனித்துக்கொள்வதாக கூறி சும்மா இருந்துவிட்டார் என்றும் ஒரு கருத்து காவல்துறையில் உலா வருகிறது.  இதுவும் முதல்வர் காதுகளுக்கு சென்றிருக்கிறது. இதற்கெல்லாம் இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டாலும் கள்ளக்குறிச்சி பிரச்சினை அடங்கியதும் நடவடிக்கை உண்டு என்கிறார்கள்”

 “ஓஹோ?

 “முதல்வரின் அடுத்த கோபம் கூட்டணி கட்சிகளின் மீது. பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நீட் விலக்கு மசோதா பற்றி கேட்க, ‘இதற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி ஒரு மாதம் ஆகிறது’ என்று அங்கு தெரிவிக்கப்பட்ட பதில் திமுகவை சங்கடப்படுத்தி உள்ளது. வேறுவழியில்லாமல் ‘ஆமாம் கடிதம் வந்திருக்கிறது விரைவில் பதில் தருவோம்’ என்று அமைச்சர் விளக்கம் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது. இதேபோல் கள்ளக்குறிச்சி விவரத்தில் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்  ‘கூட்டணி கட்சி என்பதால் வாயை மூடிக்கொண்டு என்னால் இருக்க முடியாது. இதுபோன்ற சம்பவம் நடந்தால் முதல்வர் உடனே நிவாரண தொகை அறிவிப்பார். ஆனால் இந்த மாணவியின் மரணத்தில் முதல்வர்  எந்தக் கருத்தும் சொல்லாதது ஏன் என்று கேட்டுள்ளது முதல்வருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் ஈஸ்வரனும் கடுமையாக விமர்சனம் செய்து வருவதும் அவரது கோபத்தை அதிகரித்துள்ளது.”

”திமுகவின் மீதும் முதல்வர் மீதும் பாசமாக இருந்த வேல்முருகன் திடீரென்று அரசு மீது அதிரடியாக விமர்சனங்களை வைக்கிறாரே. என்ன காரணம்?”

 “அவர் வாரியத் தலைவர் பதவி கேட்டதற்கு முதல்வர் மறுத்ததால் இப்படி எதிர்க்குரல் எழுப்புவதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதுமட்டுமின்றி பாமகவுடன் கூட்டணி சேர திமுக திட்டமிடுகிறதோ என்ற சந்தேகமும் வேல்முருகனுக்கு இருக்கிறதாம் எதிர்ப்புக்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.”

“முதல்வர் உற்சாகமாகவும் இருப்பதாகச் சொன்னாயே?”

 “அதற்கு காரணம் செஸ் ஒலிம்பியாட். செஸ் ஒலிம்பியாட் விழாவை பிரமாதமாக நடத்தி  தன்னையும் தமிழகத்தையும் இந்திய அளவில் முன்னிலைப் படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்காக இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு எல்லா  மாநில முதல்வர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். விழா ஏற்பாடுகளைப் பற்றி அடிக்கடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.” 

 “கமல்கூட கட்சி நிர்வாகிகளை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்கிறாரே?”

 “ஆமாம். இந்த கூட்டத்தின்போது அதிமுகவில் இருந்து 300 பேர் கமல் முன்னிலையில் மய்யத்தில் இணைந்துள்ளனர். இது தவிர 100 பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் மக்கள் நீதி மையத்தில் இணைந்தனர் அப்போது சில நிர்வாகிகள் வேறு சில கட்சியின் நிர்வாகிகள் நம் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள் என்று சொன்னபோது நிர்வாகிகள் எல்லாம் வேண்டாம் அவர்கள் எல்லாம் ஊழல் செய்திருப்பார்கள்.  தொண்டர்களை கூப்பிடுங்கள் அவர்களை மட்டும் சேருங்கள் என்று யோசனை சொல்லி இருக்கிறார் கமல்ஹாசன் கூடவே விக்ரம் வசூல் அதிகமாக இருந்ததால் கட்சி நிதியாக ஒன்றரை கோடி தந்து சூசகமாக நீங்களும் தாருங்கள் என்று உணர்த்தி இருக்கிறார் கமல்ஹாசன்.”  

“வேறு என்ன செய்திகள் இருக்கு?”

“போதும், நான் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைச்சதை கொண்டாடிட்டு வரேன்” என்று கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...