பெட்ரோலில் இயங்கும் கார்களைவிட மின்சாரத்தில் இயங்கும் கார்கள் சுற்றுச்சூழலை அதிக அளவில் காக்கிறது என்பது உண்மை. அதேநேரத்தில் அவை எந்த அளவுக்கு சுற்றுச்சூழலைக் காக்கிறது என்பது நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. உதாரணமாக ஐரோப்பிய நாடுகளில் மின்சாரத்தில் இயங்கும் கார்களை பயன்படுத்துவதால் கரியமில வாயு வெளியேற்றப்படுவது 69 சதவீதம் குறைகிறது. ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மின்சாரத்தில் இயங்கும் கார்களைப் பயன்படுத்தும்போது கரியமில வாயு வெளியேற்றப்படுவது 34 சதவீதம் மட்டுமே குறைகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் மின்சாரம் உற்பத்தியாகும் விதத்தைப் பொறுத்து கரியமில வாயுவின் வெளியேற்றம் மாறுபடுகிறது. மேற்கத்திய நாடுகளில் சுற்றுச்சூழலுக்கு அதிக அளவில் மாசு இல்லாத படிம எரிபொருளில் (fossil fuels) இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, அங்கு மின்சாரத்தால் இயங்கும் கார்கள் அதிக அளவில் சுற்றுச்சூழலை காக்க உதவுகின்றன. அதே நேரத்தில் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நிலக்கரியை பயன்படுத்தி அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்படி மின்சாரத்தை தயாரிக்கும்போது அவை அதிக அளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துகின்றன. அதனால், அங்கு மின்சாரத்தால் இயங்கும் கார்கள் குறைந்த அளவிலேயே சுற்றுச்சூழலை காக்கின்றன.