கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி – வைகோ குற்றச்சாட்டு
மதிமுக பொதுக்குழு சென்னையில் இன்று கூடியது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்தியவர்கள்தான் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் சிவகங்கை மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. திமுகவுடன் நல்ல புரிதலில் இணக்கமாக உள்ள நிலையில், சிலர் குழப்பம் விளைவிக்கின்றனர். கட்சி நிர்வாகிகளிடம் பேசியே இதுவரை முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன்” என்றார்
ஓபிஎஸ் மூலம் உண்மை தெரியவந்துள்ளது: சசிகலா
ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மை ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு தெரியவந்துள்ளது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “ஜெயலலிதா மரணத்தில் கடவுளுக்கு தெரிந்த உண்மை ஓபிஎஸ் மூலம் மக்களுக்கு தெரியவந்துள்ளது. என் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை இருப்பதாக உண்மையைதான் ஓபிஎஸ் கூறியுள்ளார். அதிமுக தரப்பிடமிருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. அழைப்பு வராதது குறித்து எந்த வருத்தமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
உத்தராகண்ட் முதல்வர் பதவியேற்பு
உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.
உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்ரி பெற்றதையடுத்து, அம்மாநிலத்தின் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அவருடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
பாஜக வென்றால் அரசியலை விட்டு வெளியேறுவோம் – கேஜ்ரிவால்
டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நாங்கள் அரசியலை விட்டு வெளியேறுகிறோம் என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லி மாநகராட்சி தேர்தலை மத்திய அரசு தொடர்ந்து தள்ளிவைக்கிறது. இத்தேர்தலை சரியான நேரத்தில் நடத்தி, அதில் பாஜக வெற்றி பெற்றால் நாங்கள் அரசியலை விட்டு வெளியேறுவோம்” என்றார்.