பண்ணை வீட்டின் கதவுகளை 17, 18 மற்றும் 19 ஆகிய 3 நாட்களிலும் திறந்துவைக்க தோனி உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழகத்துக்கு தீபாவளி எப்படியோ, அப்படித்தான் வட மாநிலங்களில் ஹோலி… ஹோலி பண்டிகைக்குக்கு ஒரு புராண வரலாறு இருக்கிறது. நம் ஊரில் சொல்லப்படும் பக்த பிரகலாதனின் கதைக்கும் ஹோலிக்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது.
கடவுளுக்கு இணையாக தன்னை கருதிக்கொண்ட மன்னர் ஹிரண்யகசிபு, தன் நாட்டு மக்கள் யாரும் கடவுளைக் கும்பிடக் கூடாது என்றும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் உத்தர்சிட்டிருந்தார். மீறி கடவுளை வணங்கியவர்களை கடுமையாக தண்டித்து வந்தார்.
ஹிரண்யகசிபுவின் மகன் பக்த பிரகலாதன் அவருக்கு நேர் எதிராக இருந்தார். பக்திமானான அவர், விஷ்ணுவை வழிபட்டார். இது ஹிரண்ய கசிபுவுக்கு பிடிக்கவில்லை. கடவுளை வணங்குவதைக் கைவிடுமாறு பிரகலாதனுக்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால் பிரகலாதன் கேட்கவில்லை.
இதனால் கோபமடைந்த ஹிரண்யகசிபு, பிரகலாதாவுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினார். தொடர்ச்சியாக 8 நாட்கள் பிரகலாதனை ஹிரண்யகசிபு கடுமையாக துன்புறுத்தினார். இதற்கெல்லாம் உச்சகட்டமாக பிரஹலாதனையும், தனது சகோதரி ஹோலிகாவையும் எரியும் நெருப்பின் நடுவில் அமரச் செய்தார். ஹோலிகா நெருப்பில் எரியமாட்டார் என்ற வரத்தையும் ஹிரண்யகசிபு அளித்தார்.
ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலாக, பக்த பிரகலாதன் எந்த காயமும் இல்லாமல் தப்பி வெளியே வந்தார். இதன்மூலம் இறைசக்தியே எப்போதும் வெற்றிபெறும் என்ற கருத்து நிலைநிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில்தான் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
சரி இப்போது தோனியின் கதைக்கு வருவோம். ஹோலி பண்டிகையை ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடுவது தோனியின் வழக்கம். ஹோலி பண்டிகையின்போது ஊரில் இருந்தால் பண்ணை வீட்டில் ரசிகர்களை சந்திப்பார். இதற்காக 43 ஏக்கர் பரப்பளவு கொண்ட அவரது பண்ணை வீடு பொதுமக்களுக்காக திறந்து விடப்படும். அந்தப் பண்ணையில் விளையும் காய்கறிகளையும் பழங்களையும் மக்களுக்கு மிகக் குறைந்த விலைக்கு தோனி வழங்குவார். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி முகாமுக்கு தோனி சென்றுள்ளார். இந்த பயிற்சி முகாம் சூரத் நகரில் நடந்து வருகிறது.
தான் ஊரில் இல்லாவிட்டாலும், பண்ணை வீட்டின் கதவுகளை 17, 18 மற்றும் 19 ஆகிய 3 நாட்களிலும் திறந்துவைக்க அவர் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் தோனியின் பண்ணை வீடு பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த மூன்று நாளில் தோனியின் பண்ணை வீட்டில் விளைந்த ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, கொய்யா, கோதுமை உள்ளிட்ட விளைபொருட்களும் பழங்களும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பண்ணை வீட்டில் வளர்க்கப்படும் மீன்களும் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் தோனியின் பண்ணை வீட்டை பார்ப்பதற்காகவும், அவரது பண்ணையில் இருந்து குறைந்த விலையில் விளைபொருட்களை வாங்குவதற்காகவும் ஏராளமான மக்கள் அங்கு சென்று வருகின்றனர்.
அதே நேரத்தில் சூரத் பயிற்சி முகாமில் உள்ள தோனி, சிஎஸ்கே வீரர்களுடன் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.