அப்படித்தான் அவரை அழைத்தார்கள். மேஸ்திரி, கம்பி கட்டுபவர், ஆண், பெண் சித்தாள்கள், கார்பெண்டர், எலெக்ட்ரீஷியன் எல்லோருக்குமே அவர் தாடி தாத்தாதான்.
மனைக்கு பூஜை போட்டபோதே பில்டர் முதலில் தாடி தாத்தாவை வாட்ச்மேனாக நியமித்துவிட்டார். பூஜைக்கான சாமான்கள் முழுவதையும் தன் ஓட்டை சைக்கிளில் அலைந்து திரிந்து வாங்கிவந்ததும் அவர்தான்.
தாடி தாத்தா இரண்டு காக்கி டவுசர்கள் வைத்திருந்தார். அதையேதான் துவைத்துத் துவைத்து போட்டுக்கொள்வார். விளம்பரத்துடன் பெயிண்ட் கம்பெனிக்காரன் கொடுத்த காலரில்லாத டி ஷர்ட்டும் சிமெண்ட் கம்பெனிக்காரன் கொடுத்த காலர் வைத்த டி ஷர்ட்டும் மாறி மாறி போடுவார்.
கட்டிடப் பகுதியின் ஓரத்தில் போடப்பட்ட தற்காலிக தகர ஷீட் கொட்டகைதான் இருப்பிடம். துருப்பிடித்த ஒரு இரும்பு மடக்குக் கட்டில். சமைத்து சாப்பிட நான்கைந்து பாத்திரங்கள்.
மூன்று வேளை சாப்பிட மறந்தாலும் எட்டு வேளை வெற்றிலை போடுவார். போட்டு முடித்ததும் சுகமாய் ஒரு பீடி இழுப்பார். குட்டி ரேடியோவில் கண்ணதாசனின் தத்துவப் பாடல் என்றால் மட்டும் காதருகில் வைத்து கண்மூடி ரசித்துக்கேட்பார். இணைந்தும் பாடுவார். மற்ற சமயம் அது பாட்டிற்கு விளம்பரங்களைத் துப்பிக்கொண்டே இருக்கும்.
ஜனார்த்தனனும் வந்தனாவும் காரில் வரும்போது கதவுதிறக்க ஓடிவரும் தாடி தாத்தாவை வேண்டாம் என்று மறுப்பாள் வந்தனா. கட்டிட வேலைகளைப் பார்வையிட வரும்போதெல்லாம் அவருக்கு பழம், கேக், வீட்டில் செய்த அதிரசம் என்று கொடுப்பார்கள்.
இரண்டு கைகளால் வாங்கிக்கொண்டு, “நல்லா இருப்பே தாயி” என்று வானம் பார்த்து கும்பிடுவார்.
“வேட்டி வாங்கித் தரட்டுமா?” என்று ஜனா பலமுறை கேட்டும் மறுத்துவிட்டார்.
“சைக்கிள்ல போக வர இதாங்க தம்பி வசதி.”
நல்ல ஷார்ட்ஸ் வாங்கிக்கொடுத்தும் மரியாதைக்காக வாங்கிக்கொண்டு மேஸ்திரிக்குக் கொடுத்துவிட்டார்.
“தாடி தாத்தா ஏழு டீ, அஞ்சி வடை வாங்கிட்டு வா.”
“தாடி தாத்தா… கொடையைப் பிடிச்சிட்டு நில்லேன்.”
“தாடி தாத்தா… அந்த நாயை விரட்டுய்யா.”
“தாடி தாத்தா… சும்மாதானே உக்காந்திருக்கே… என் பைக்கை கொஞ்சம் துடைச்சி வையேன்.”
என்ஜினியர், சூபர்வைசர் என்று எவரும் ஏவுவார்கள். அவரிடம் ஒரு முகச்சுளிப்போ எதிர் வார்த்தையோ இருக்காது.
அதிகாலையிலேயே எழுந்து விடும் தாத்தா மோட்டார் போட்டு பெரிய டிரம்களில் நீர் நிரப்பி, ஹோஸ் பைப் பிடித்து புதிதாக கட்டிய சுவர்களை நனைத்துவிடுவார். குவியலாகப் போடப்பட்ட சிமெண்ட் பைகளை உதறி மடித்து வைப்பார். ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் ஆணிகள், கம்பிகளை தேடித்தேடிப் பொறுக்கி ஓரமாகப் போடுவார். லாரியிலிருந்து செங்கல் இறக்கும்போது உடைந்த கற்களுக்கு சண்டை போடுவார். மணல் லாரியில் ஏறி நின்று மணலின் தரத்தை, அளவை சோதித்துப் பார்த்தபிறகுதான் கொட்டச்சொல்வார்.
அதெல்லாம் அவர் செய்யவேண்டிய வேலையே இல்லை. “உன் வேலைய மட்டும் பாரேன்” என்று யாராவது சொன்னால் கோபம் வந்துவிடும்.
“பாவம் பேங்குல லோன் போட்டு ஆசை ஆசையா கட்டுதுங்க. யார் வீடோன்னு என்னால நினைக்க முடியாது. போங்கடா.”
செய்யும் வேலையை நேசிக்கும் அவரை வந்தனாவுக்கு பிடிக்கும். பள்ளம் பறித்தல், பில்லருக்கு கம்பி கட்டுதல், போர் போடுதல் என்று ஒவ்வொரு கட்டிட வளர்ச்சி நிலைகளையும் அவள் படம் எடுக்கும்போது ஓரமாக கை கட்டி நிற்கும் அவரையும் ஃபிரேமில் சேர்த்து எடுப்பாள்.
தாடி தாத்தாவுக்கு காது கொஞ்சம் மந்தம்! கத்திதான் உத்தரவிடுவார்கள்.கையை வைத்து காதை அணைத்து உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டாலும் தப்பாக குளறுபடி செய்து அடிக்கடி திட்டு வாங்குவார்.
“உங்கிட்ட சொல்றதுக்கு ஒரு எருமை மாட்டுக்கிட்ட சொல்லலாம்.”
“பில்டர் இரக்கப்பட்டு உன்னை வேலைக்கு வெச்சிருக்காரே ஒழிய… நீ எதுக்குமே லாயக்கில்லய்யா பெருசு!”
சகட்டுமேனிக்கு திட்டுவதற்கு பதில் சொல்லமாட்டார். வெற்றிலை போட்டுச் சிவந்த உதடுகள் புதர் மாதிரி மண்டிய தாடிக்குள் புன்னகைக்கும்.
“ஏங்க பில்டர்ட்ட சொல்லுங்களேன்… அவர் வயசுக்கு எல்லாரும் மரியாதை இல்லாம திட்றாங்க. ஒரு நிமிஷம் உக்காரவிடாம வேலை வாங்கறாங்க… பாவமா இல்ல?” என்பாள் வந்தனா அடிக்கடி.
பல நிலங்களை வாங்கி லே அவுட் போட்டு மனைகளை விற்று, விற்ற மனைகளில் வீடு கட்டிக்கொடுக்கும் பில்டரிடம் சொன்னபோது, “அதெல்லாம் அவரே தப்பா எடுத்துக்கமாட்டாரு சார். கண்டிச்சா பிரச்சனையாயிடும்” என்று சாதாரணமாக சொல்லிவிட்டார்.
கட்டிடத்தின் அருகில் வேப்ப மர நிழலில் காரை நிறுத்தியிருந்த சமயம் வந்தனாவுக்கு சைக்கிளில் பாக்கெட் மோர் வாங்கி வந்தார் தாடி தாத்தா.
“உங்களுக்கொரு பாக்கெட் வாங்கிக்கச் சொன்னனே.”
“அந்தக் காசுக்கு வெத்தல, சீவல் வாங்கிக்கிட்டேன்” என்று நகர்ந்த அவரை, “ஒரு நிமிஷம்” என்று தடுத்து நிறுத்தினாள்.
“என்னம்மா?”
“கொஞ்சம் பேசணும்.”
“எங்கிட்டயா?”
“ஆமாம்… உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கணும். உங்களுக்குன்னு யாரும் இல்லையா?”
“ஒருத்தரும் இல்ல!”
“சரி… பெத்தவங்க பத்தி சொல்லுங்களேன் தாடி தாத்தா.”
“ஆமாம் நான் பெரிய காந்தி தாத்தா பாரு… வரலாறு சொல்றதுக்கு… ஏதோ பொறந்தேன், வளர்ந்தேன்… பூமிக்குப் பாரமா நடமாடிட்டு இருக்கேன்… ஆளை விடும்மா.”
சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தாடி தாத்தா போய்விட்டார்.
தாடி தாத்தாவின் கதையை அறிய வந்தனாவுக்கு உந்துதல் ஏற்பட்டதற்கு மூன்று காரணங்கள்.
- அவரின் தகரக் கொட்டகையில் ஒரு பக்கம் இரும்புக் தகடால் கீறப்பட்டிருந்த ஒரு பெயரை அவள் கவனித்தது. அது: சரோஜினி.
- ஒரு சித்தாள் இன்னொருத்தியிடம் குரலைக் குறைத்துப் பேசியது வந்தனாவின் காதில் விழுந்தது. அது: ‘எப்படி இருக்க வேண்டிய மனுஷன், பாவம் இப்படிக் கெடந்து அல்லாடறாரே…’
- கொஞ்சம் விலாவாரியாக சொல்ல வேண்டிய சம்பவம் அது. அன்று, முதல் தளம் கான்கிரீட் போட்ட இடத்தில் பாத்தி கட்டி நிறுத்தியிருந்த தண்ணிரீல் சில்லென்று கால்களை நனைத்தபடி வந்தனா நின்றிருந்தபோது கீழே ஒரேக் கூச்சல்!
கைப்பிடி சுவர் இல்லாததால் எச்சரிக்கையாக நின்று எட்டிப் பார்த்தாள்.
குவியலாக கொட்டியிருந்த மணல் குன்றின் மேல் லேசான தள்ளாட்டத்துடன் நின்ற அந்த இளைஞன் பெரிய குரலில் கத்தினான்.
“இன்னிக்கு ஒரு பதில் தெரியாம இங்கேர்ந்து போ மாட்டேன்! டேய்… கிழவா… வாடா! வந்து பதில் சொல்லுடா!” போதையில் அவன் வார்த்தைகள் குழறின.
அருகில் நின்ற ஒரு சித்தாளிடம் கேட்டாள், “யாரும்மா அது?”
“தாடி தாத்தாவோட புள்ளை!”
“புள்ளையா? எனக்கு யாருமே இல்லன்னாரு…”
இதற்குள் தாடி தாத்தா ஒரு பெரிய இரும்பு ராடை எடுத்துக்கொண்டு குடிகாரனை நோக்கி ஓடிவந்தார்.
“இங்க இன்னும் ஒரு நிமிஷம் நின்னே…மண்டையிலயே போட்டு சாவடிச்சிடுவேன்! போடா! போறியா இல்லையா?”
விழிகளை உருட்டி அடி வயிற்றிலிருந்து கத்திய தாத்தாவின் கோப முகத்தை அன்றுதான் முதல் முறையாகப் பார்த்தாள்.
“நீயும் வாழ மாட்டே! என்னையும் வாழ விடமாட்டே! நீயே சாவடிச்சிரு! இல்ல… ரோட்ல லாரில விழுந்து செத்துடறேன்.”
“சொல்றே! செய்ய மாட்டேன்றியேடா கம்னாட்டி! உன்னோட ஒரு உறவும் கிடையாதுன்னு சொல்லிட்டேன்! என்ன மயித்துக்கு இங்க வர்ற?”
தாடி தாத்தா ஓங்கிய இரும்பு ராடுடன் அவன் மீது நிஜமாகவே பாய… பலர் ஓடிவந்து அவரை இழுத்துப் பிடித்தார்கள். இன்னும் சிலர் குடிகாரனை தரதரவென்று தெருமுனை வரைக்கும் இழுத்துச் சென்றார்கள்.
“என்ன பிரச்சனை?” என்றாள் வந்தனா சித்தாளிடம்.
“சரியா தெரியலம்மா. யார் மேலயோ கேஸ் போடணும்னு அந்தப் பய கத்துவான். இவரு துரத்தித் துரத்தி விட்ருவாரு!”
யார் அந்த சரோஜினி? அம்மாவா? மனைவியா? சகோதரியா? இல்லை…முறிந்து போன காதலின் நாயகியா? எப்படி இருக்க வேண்டிய மனுஷன் என்கிறார்களே… அதென்ன? ஏன் இப்படி இருக்கிறார்? மகன், யார் மீது வழக்கு போடச் சொல்கிறான்? இவர் ஏன் அவன் மீது கோபப்படுகிறார்?
மர்ம நாவலில் கிடைத்த தடயங்களைத் தொடர்புப்படுத்த துப்பறிவாளன் மூளையைக் கசக்குவதுபோல வந்தனா யோசித்தாள்.
யாரைக் கேட்டாலும் எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரிந்தது. தாடி தாத்தா யாரிடமும் மனம் திறந்து பேசினதில்லையாம். யார் என்ன கேட்டாலும் மழுப்பலாக ஏதாவது பேசிவிட்டு ஓடிவிடுவாராம்.
அன்றிரவு வீட்டில் கால்குலேட்டர் தட்டி கணக்கு போட்டுக் கொண்டிருந்த ஜனாவிடம் வந்தாள்.
“மண்டை காயுதுங்க. தாடி தாத்தா பத்தி முழுசா தெரிஞ்சுக்க முடியல!”
“ரொம்ப முக்கியம்! எனக்கு பில்டிங் பட்ஜெட் பாத்தா மண்டை காயுது வந்தனா”
“பேங்க் லோன்தான் சேங்ஷனாயிடுச்சே…”
“பில்டர் புதுசா ரிவைஸ்ட் கொட்டேஷன் அனுப்பிருக்கார்.”
“அவர் என்ன பண்ணுவாரு? கம்பி, சிமெண்ட், மணல் எல்லாமே மாசா மாசம் ஏறுதே!”
“ஆனா லேண்ட் வித்ததுலயே பெரிய லாபம் பார்த்துட்டாரே. முப்பது வருஷம் முன்னாடி செண்ட் ஆயிரம், இரண்டாயிரம்னு இவரு அப்பா ஏக்கர் கணக்குல வாங்கிப்போட்ட நிலம்! நமக்கு கிரவுண்டு கணக்குல எத்தனை லட்சத்துக்கு வித்தாரு! எழுபது லட்சம்!”
“இன்னிக்கு அங்க மார்க்கெட் வேல்யூ என்னன்னு நல்லா விசாரிச்சிட்டுதானே வாங்கினோம். அவர் ஒண்ணும் எமாத்தலையேங்க…இத விடுங்க! தாடி தாத்தா பத்தி தெரிஞ்சிக்க ஒரு வழி சொல்லுங்க.”
“குடிக்காம நிதானத்துல இருந்தான்னா அவரு பையன்ட்ட பேசிப்பாரு.”
கட்டிடத்திற்கு சென்றபோது தாடி தாத்தாவைக் காணவில்லை. விசாரித்ததில் பக்கத்திலிருக்கும் கோயிலில் இருப்பதாகச் சொன்னார்கள்.
வந்தனா சென்றபோது அம்மன் சிலையையே பார்த்தபடி சரிந்து அமர்ந்திருந்த தாடி தாத்தாவின் கண்களிலிருந்து கண்ணீர் விழுந்தது. பார்த்ததும் அவசரமாக துடைத்துக்கொண்டு எழுந்தார்.
“பரவால்ல… உக்காருங்க. என்னாச்சு தாத்தா?”
“ஒண்ணுமில்லம்மா..”
“எதுக்கு அழறிங்க?”
“மகமாயிட்ட கொஞ்சம் சண்டை போட்டேன். அதான்.”
“எதுக்கு சண்டை?”
“என்ன இருந்தாலும் என் ரத்தம் இல்லையாம்மா? ஒரு ஆத்திரத்துல சொன்னா இப்படியா செய்வான்? இவ காப்பாத்தாம விட்டுட்டாளே…”
“புரியல தாத்தா”
“பூச்சி மருந்து குடிச்சி செத்துப்போய்ட்டான்மா.”
“அய்யோ!”
“யாருக்கும் சொல்லல. உங்ககிட்ட சொல்லணும்னு தோணிச்சு.”
“கடவுளே! அவனுக்கு கல்யாணம்?”
“குணவதியா பாத்துதான் பண்ணி வெச்சேன்… இவனோட அடி, உதை தாங்காம ஓடிப் போய்ட்டா! நல்ல வேளையா எதையும் பெத்துப் போடல. இல்ல… அநாதையா ரோட்ல நிக்கும்!”
“கஷ்டமா இருக்கு தாத்தா. சரோஜினி யாரு?”
“எம் பொண்டாட்டிம்மா. அவ நிம்மதியா போய்ச் சேர்ந்துட்டா.”
“எப்படி?”
“வயத்து வலின்னு துடிச்சா. ஏதோ வியாதி பேரு சொன்னாங்க! புரியல.லட்சக் கணக்குல செலவாகும்னாங்க. நான் எங்க போவேன்… போய்ட்டா.”
“ஒரேப் பையனா?”
“இவனுக்கு மூத்தவ அருணா, டாக்டருக்குப் படிக்கணும்னா. அம்புட்டு பணத்துக்கு என்ன செய்வேன்? படிப்பை நிறுத்திட்டு கட்டிக்கொடுத்தேன். ஒரே மாசத்துல அழுதுட்டு வந்துநின்னா. மாப்பிள்ளைக்கு உத்தியோகம் இருக்கு, வீடு இருக்குன்னு சொன்னதெல்லாமே பொய்யி… ஏமாந்துட்டேன்.தொழில் அரம்பிக்க அஞ்சு லட்சம் குடுத்தா வாழறேன்னு சொன்னான் மாப்ளை. கொள்ளைதான் அடிக்கணும். கெரசினை ஊத்திப் பத்தவெச்சிக்கிட்டு கரிக்கட்டையா விழுந்துட்டா அவ! இப்ப இவனும் போய்ட்டான்!”
“தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு என்ன பிரச்சனை தாத்தா?”
“நாலு லட்சம் ஏஜண்டுக்கு கட்டி வெளிநாட்டுக்கு வேலைக்குப் போவணுமாம். புத்தி கெட்டுப் போச்சி. எலெக்ட்ரிக் வேலைக்கு போயிட்டு ஒழுங்காதான் இருந்தான். குடிப் பழக்கம் குணத்தையே மாத்திடுச்சி. காசு, பணம் கிடக்குது… நாணயம் வேணும்ல… நமக்கு உரிமை இல்லாத விஷயத்துக்கு ஆசைப்படலாமா? கேசைப் போடு, கேசைப் போடுன்னு நச்சரிச்சிட்டே இருந்தான்…”
“உங்க மாப்பிள்ளை மேலயா?”
“அதில்லம்மா… எங்கப்பன் எனக்கு சொத்து வைச்சிட்டுப் போகல. கடனை வெச்சிட்டுப் போயிட்டான். அவன் கை நாட்டு வெச்சி வாங்குன கடனை வசூல் பண்ணாம விடுவாங்களா? அவங்ககிட்ட போயி மல்லுக்கு நிக்கிறது சரியா சொல்லும்மா.”
“சரியில்லதான்.”
“எங்கப்பா வாங்குன கடன் என்னைக் கட்டுப்படுத்தாதுன்னு நான் கேஸ்போட்டு எங்கப்பன் அடமானம் வெச்ச நிலத்தை மீட்கணுமாம்! ஒரு நியாயம் வேணாம்?”
தாடி தாத்தாவுக்கு சமாதானமாக ரொம்ப நேரம் ஆறுதல் சொல்லிவிட்டு திரும்பிய வந்தனாவுக்கு உறவின் துக்கம்போல தொண்டை அடைத்தது.
பணமிருந்தால் தாடி தாத்தாவின் மனைவி உயிர் பிழைத்திருப்பாள். பணமிருந்தால் மாப்பிள்ளை தொழில் ஆரம்பித்து மகள் சந்தோஷமாக வாழ்ந்திருப்பாள். மகனுக்கும் பணம்தான் தேவை.
கட்டிட வேலைகள் முடிந்து, பெயிண்டிங் பணிகள் முடிந்து, ஹோமம் வளர்த்து கிரஹப் பிரவேசம் செய்தபோது தாடி தாத்தாதான் அதிகாலையில் தனக்குத் தெரிந்தவரின் பசு மாட்டையும் கன்றையும் கூட்டிவந்தார்.
எல்லோருக்கும் துணிமணியும் பணமும் கொடுத்து மரியாதை செய்தபோது வந்தனா மற்றவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக அவருக்கு மட்டும் கூடுதலாக ஆயிரம் ரூபாய் கொடுத்தபோது மறுத்தார்.
“உங்க ரேடியோ பழசாயிடுச்சி. புதுசா வாங்கிக்கங்க. மறுக்கக் கூடாது” என்று வற்புறுத்தி கையில் திணித்தாள்.
இரவு வந்தனாவும் ஜனாவும் பால் காய்ச்சிய புது வீட்டில் தங்கவேண்டும் என்கிற சம்பிரதாயம் காரணமாக அங்கேயே இருந்தார்கள்.
எல்லா ஜன்னலையும் மூடிவிட்டு, காம்பவுண்டில் இருக்கும் லைட்டைப் போடச்சென்ற வந்தனா அரை இருட்டில் வேப்ப மரத்தடியில் உட்கார்ந்திருந்தது தாடி தாத்தாதான் என்று தெரிந்ததால் அருகில் சென்றாள்.
அவளைக் கவனிக்காத தாடி தாத்தா புதிய வீட்டில் திருஷ்டிக்கு கட்டிய கோர முகம் வரைந்த பூசணியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்ன தாத்தா?” என்றாள்.
“பத்து மாசமா இங்கயே இருந்துட்டனா… அடுத்ததா எந்தக் கட்டடத்துக்குப் போகணும்னு தெரில… அதான் எம்மா பாத்துட்டிருந்தேன்.”
“நீங்க இங்கயே இருக்கிங்களா தாத்தா? நாங்க பில்டர்ட்ட பேசறோம். எங்க வீட்லயே தங்கிக்கங்க. சாப்ட்டுக்கங்க. செலவுக்கு பணம் தர்றோம்.”
உணர்ச்சிவசப்பட்டு வந்தனாவின் கைகளைப் பிடித்துக்கொண்டார்.
“அம்மாடி! நீதாம்மா அந்த மகமாயி! யாருக்கும்மா இப்படி ஒரு மனசு வரும்? இருக்கேன் தாயி. சாகறவரைக்கும் உன் வீட்லயே ஒரு ஓரமா இருந்துக்கறேன்மா.”
“தாரளமா இருங்க! எனக்கும் உங்களுக்கு எதாச்சும் செய்யணும்னு எப்பவும் தோணிட்டே இருக்கும்! ரத்த சொந்தமா இருந்தாதான் பாசம் வரணுமா? என்னை உங்க பொண்ணு மாதிரி நினைச்சிக்கங்க தாத்தா.”
“இதாம்மா மகமாயியோட கணக்கு! உன் மனசுக்குள்ள பூந்து எனக்கு ஒரு ஏற்பாடு செஞ்சிட்டா பாத்தியா? எங்கப்பன் எனக்கு சொத்தும் வெச்சிட்டுதான் போயிருக்கான் பாத்தியாம்மா?”
“என்ன சொல்றிங்க தாத்தா?”
“நம்ம பில்டரோட அப்பாகிட்டதான் எங்கப்பா நிலத்தை அடமானம் வெச்சி கடன் வாங்கிட்டு செத்துப்போனாரு. நீ வீடு கட்டிருக்கியே… இந்த நிலம்தான் அது!” என்றார் தாடி தாத்தா.
அருமை.மிக அருமை.ஆனந்தக் கண்ணீருடன்.
மேலை பழ நாகப்பன்,
மடிப்பாக்கம்
செய்யும் வேலையில் ஈடுபாடும் நம்பியவர்களுக்கு விசுவாசமாய் இருந்தால் எந்த வகையிலாவது நன்மையும் மரியாதையும் கிடைக்கும் என்ற நீதியோடு முடிந்ததாக இருந்தது சிறுகதை . ஆனால் PKP கதை போல தோணவில்லை.
Super ?
கலங்கடிச்சிருச்சு முடிவு! அருமை PKP சார்
அருமையான உரை சிறப்பாக இருந்தது முடிவு எதிர்பாராதது
Very nice
இந்த வியாபார உலகின் பாதிப்புகளை மிக எளிதாக சொல்லிவிட்டார். இந்த முடிவில் வந்தனாவுக்கு தெளிவு பிறக்கும்.