1.5 கோடி ரூபாய் ரூபாயைக் கொடுத்து ‘சுட்டிக் குழந்தை’ ராஜ்வர்த்தன் ஹங்கர்கேகரை வாங்கியுள்ளது தோனியின் மஞ்சள் படை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இப்போதைய ‘சுட்டிக் குழந்தை’ ராஜ்வர்த்தன் ஹங்கர்கேகர். ‘சீனியர் சூப்பர் கிங்ஸ்’ என்று கிண்டலடிக்கப்படும் மூத்த வீரர்களைக் கொண்ட சென்னை அணியின் இளம் வீரரான இவரது வயது 19. ஐபிஎல் ஏலத்தில் 1.5 கோடி ரூபாய் கொடுத்து இவரை வாங்கியுள்ளது தோனியின் மஞ்சள் படை.
சில வாரங்களுக்கு முன்பு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போதே எல்லோராலும் கவனிக்கப்படும் வீரராக மாறியிருந்தார் ஹங்கர்கேகர். இதற்கு 2 காரணங்கள். முதல் காரணம், இவரது சிக்சர் அடிக்கும் திறமை. தோனிக்கு நிகராக மைதானத்துக்கு வெளியே அனாயாசமாக சிக்சர்களை பறக்கவிடும் ஆற்றல் வாய்ந்தவர் ஹங்கர்கேகர். மற்றொரு காரணம் வேகப்பந்து வீச்சு. புதுப்பந்தில் வீசும் தொடக்க பந்துவீச்சாளராக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் முக்கிய இடம் வகித்திருந்தார் ஹங்கர்கேகர்.
இந்த 2 காரணங்களுக்காக மட்டுமே அவரை வாங்க ஐபிஎல் ஏலத்தில் அணிகள் போட்டியிட்டன. இந்நிலையில் 1.50 கோடி ரூபாயைக் கொடுத்து அவரை தங்கள் படையில் சேர்த்துள்ளது சிஎஸ்கே. மகாராஷ்டிராவின் துல்ஜாபூரில் பிறந்த ஹங்கர்கேகர், சென்னை அணிக்காக தான் வாங்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறும் ஹங்கர்கேகர், “பணத்தைவிட சென்னை அணிக்காக ஆடுவதை மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன். ஐபிஎல் அணிகளிலேயே என் அப்பாவுக்கு மிகவும் பிடித்தது சிஎஸ்கேதான். கரோனாவால் கடந்த 2020-ம் ஆண்டில் அவர் உயிரிழந்தார். இன்றைய தினம் அவருக்குப் பிடித்த சிஎஸ்கே அணியில் இடம்பிடித்தது மிகவும் பெருமை அளிப்பதாக உள்ளது. அதேநேரத்தில் இதைப் பார்க்க அப்பா இல்லையே என்பதை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது” என்கிறார்
அப்பாவின் கனவு அணியில் இடம்பிடித்துள்ள ஹங்கர்கேகர், அந்த அணியை இன்னும் வலுப்படுத்தட்டும்.