அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் சீமானின் நாம் தமிழர் கட்சி பெரிய கட்சிகளுக்கு சவாலாக மாறுமா? அதன் பலம் என்ன? பலவீனம் என்ன? சீமான் சாதிப்பாரா?
திராவிடம்தான் தமிழகத்தில் எடுபடும் என்ற நீண்ட அரசியல் பாரம்பர்யத்தை தள்ளிவைத்து விட்டு தமிழ் தேசியம் அரசியல் பேசுகிறது நாம் தமிழர் கட்சி. தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்கிறது. அதன் தலைவர் சீமானின் பரப்புரைகள் சமூக ஊடகங்களில் பல லட்சம் பார்வைகளுடன் பரபரப்பாக பரவுகின்றன. பெரிய கட்சிகளே தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயங்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி கடந்த இரண்டு சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. (2016ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது)
இரண்டு சட்டப் பேரவைத் தேர்தலிலும் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை என்றாலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் 1.07 சதவீத வாக்குகள், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.93 சதவீத வாக்குகள், 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் 29 லட்சத்து 58 ஆயிரம் வாக்குகள் பெற்றது. திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் 6.85 சதவீத வாக்குகளுடன் நிற்கிறது.
அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் சீமானின் நாம் தமிழர் கட்சி பெரிய கட்சிகளுக்கு சவாலாக மாறுமா? அதன் பலம் என்ன? பலவீனம் என்ன? சீமான் சாதிப்பாரா? அல்லது வாக்குகளைப் பிரிப்பவராக மட்டும் நிலைப்பாரா?
பல கேள்விகள் இருக்கின்றன அதற்கு முன் நாம் தமிழர் கட்சியின் வரலாற்றைப் பார்ப்போம்.
கட்சியின் துவக்கம்
நாம் தமிழர் கட்சிக்கு இரண்டு துவக்கங்கள் இருக்கின்றன.
நாம் தமிழர் கட்சி முதன் முதலில் 1958 ஆம் வருடம் துவக்கப்பட்டது. அதை அந்தக் காலத்தில் துவக்கியவர் தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார். தமிழ் மொழி, தமிழர் உரிமை, தனித் தமிழ்நாடு போன்ற பிரச்சனைகளில் தீவிரமாக செயல்பட்டது இந்த இயக்கம். 1960களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டது.
1967 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது ஆதித்தனார் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அதன் பிறகு நாம் தமிழர் இயக்கம் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது.
மீண்டும் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் உருவாக்கப்பட்டது 2010 மே மாதம் 18 ஆம் நாள். உருவாக்கியவர் சீமான்.
சீமான் யார்?
சீமான், சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் அரணையூர் கிராமத்தை சேர்ந்தவர். எளிய விவசாயக் குடும்ப பின்னணி உடையவர். சிறுவயதிலேயே சினிமாவின் மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. கூடவே அவர் கிராமத்தில் இருந்த சாதிய வேற்றுமைகள் குறித்த கேள்விகளும் இருந்தது.
கல்லூரிப் படிப்பு முடிந்தது சினிமாவில் பணிபுரிவதற்காக சென்னைக்கு வந்தார். பல சினிமா கம்பெனிகளுக்கு சென்று வாய்ப்புகள் தேடினார். திரைப்பட இயக்குனர் ஆவதுதான் அவர் லட்சியமாய் இருந்தது. 1996ல் பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து சில திரைப்படங்களை இயக்கினார்.
திரைத் துறையில் இருக்கும்போதே சமூகப் பிரச்சனைகளிலும் ஆர்வம் காட்டினார். பெரியார் திராவிடர் கழகம் நடத்திய கூட்டங்களில் தமிழர்களின் நிலை குறித்து பேசி வந்தார். முக்கியமாய் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்காக குரல் கொடுப்பவராக இருந்தார். விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மிகத் தீவிரமாய் ஆதரித்தார்.
2008ல் வெளியான சீமான் இயக்கிய வாழ்த்துகள் படம் வெற்றி பெறாத நிலையில் தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்ததாகவும் அந்த சந்திப்பு அவரது வாழ்க்கை பயணத்தின் திசையை மாற்றியதாகவும் பேட்டிகளில் குறிப்பிடுகிறார் சீமான்.
இலங்கையில் போர் வந்த சூழல்
இந்தக் காலகட்டத்தில் தமிழகத்திலும் இலங்கையிலும் இருந்த அரசியல் சூழல் குறித்து புரிந்துக் கொள்ள வேண்டும்.
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சா பொறுப்பேற்றார். அவர் பதவிக்கு வந்தப் பிறகு 2006ஆம் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக போராடி வந்த விடுதலப்புலிகளை ஒடுக்க கடுமையான போரைத் துவக்கினார்.
இலங்கை ராணுவத்தினரின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் இந்திய, தமிழக அரசியலிலும் எதிரொலித்தன. அந்த சமயத்தில் மத்தியில் காங்கிரசின் கூட்டணி ஆட்சியும் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியும் நடந்துக் கொண்டிருந்தது.
2008ஆம் ஆண்டுக்குப் பின் ஈழப் போர் உக்கிரமடைந்தது. தமிழக அரசும் இந்திய அரசும் போர் நிறுத்த முயற்சிகளை செய்ய வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுந்தன. மத்திய, மாநில அரசுகளும் தாங்கள் முயற்சிகள் செய்துவருவதாக கூறிக் கொண்டிருந்தன. ஆனால் போர் நிற்கவில்லை.
2009ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.1983லிருந்து நடந்துக் கொண்டிருந்த ஈழ விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். பலவித கொடூர போர்க் குற்றங்களை ராஜபக்சா அரசின் ராணுவம் செய்திருந்தது.
தமிழகத்தில் பெரிய கட்சிகளான திராவிட முன்னேற்ற கழகத்தையும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் விட சிறிய கட்சிகளும் இயக்கங்களும்தான் இலங்கை தமிழர் பிரச்சனையை தமிழகத்தில் தீவிரமாய் பேசி வந்தன. இலங்கை அரசின் ராணுவத் தாக்குதல்களுக்கு எதிராக பலமாக குரல் கொடுத்தன.
இந்தச் சூழலில் இலங்கை ராணுவத்துக்கு எதிராகவும் விடுதலைப் புலிகளை ஆதரித்தும் இந்திய அரசை கண்டித்தும் மேடைகளில் முழங்கி வந்தார் சீமான். சீற்றத்துடன் இருந்த அவரது பேச்சுக்கள் பலரைக் கவர்ந்தது.
இதுதான் சீமான் அரசியலுக்கு வருவதற்கான முதற்படி.
நாம் தமிழர் இயக்கம் துவக்கம்
ஈழத் தமிழர் ஆதரவு மேடைகளில் பேசி வந்த சீமான் தனி இயக்கம் கண்டது 2009 ஆம் வருடம் ஜூலை 18 ஆம் தேதி. அன்றுதான் மதுரையில் நாம் தமிழர் இயக்கம் தொடங்கப்பட்டது. அதாவது ஈழப் போர் முடிவுக்கு வந்து இரண்டு மாதங்கள் கழித்து. இயக்கம் அரசியல் கட்சியானது அதற்கடுத்த வருடம்.
அந்த சமயத்தில் இலங்கை ராணுவத்தினர் பிடியில் இருந்த தமிழர்களை விடுவிக்க கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் பேரணிகளும் கூட்டங்களும் நாம் தமிழர் இயக்கத்தினரால் நடத்தப்பட்டன. நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கிய சில மாதங்களிலேயே அதை அரசியல் இயக்கமாக மாற்ற இருப்பதாக சீமான் அறிவித்தார்.
ஆனால் தனி இயக்கம் காண்பதற்கு முன்பே தமிழகத்தின் தேர்தல் அரசியலில் பங்கெடுக்க துவங்கியிருந்தார் சீமான். இலங்கையில் ஈழப் போர் உச்சத்தில் இருந்த 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாய் இருந்தது. அந்தத் தேர்தலில் திமுகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்திருந்தன. போரில் இலங்கை அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என்று சீமான் குற்றஞ்சாட்டி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அந்தத் தொகுதிகளில் காங்கிரசுக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி மக்களை கேட்டுக் கொண்டார். அவர் பிரச்சாரம் செய்த பல தொகுதிகளில் காங்கிரஸ் தோற்றது.
நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியானது
நாம் தமிழர் அரசியல் கட்சியின் துவக்க விழா 2010 ஆண்டு மே 18 ஆம் தேதி மதுரையில் நடந்தது. மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமியும் காந்திய அரசியல் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனும் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தனர்.
துவக்க விழாவில், ‘என்னை தலைவராக பார்க்காதீர்கள். அண்ணன் பிரபாகரனுக்கு நான் தம்பி. இங்கே கூடியிருக்கும் அன்பு தம்பிகளுக்கு நான் அண்ணன். அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் மூக்கை பிடித்துக்கொண்டு போனால் யார்தான் உள்ளே இறங்கி சுத்தம் செய்வது. ஒரு விஷயத்தை செயல்படுத்த அரசியல் தேவைப்படுகிறது. அப்போதுதான் புரட்சி செய்ய முடிகிறது. இந்த அரசியல்தானே என் இன மக்களை கொன்று குவித்தது. அதே அரசியலால் தமிழீழம் அமைக்கனும். அதற்காக போராடுவோம். இது ஆரம்பம்’ என்று பேசினார் சீமான்.
”எதிர்ப்பு என்பது தனி நபரிடம் இருந்து வருகிறபோது அது எழும் இடத்திலேயே அடக்கப்படுகிறது. அதை ஒரு கூட்டு நடவடிக்கையாக, இயக்கமாகச் செய்கிறபோது, எதிர்ப்பின் அடர்த்தி இன்னும் கூடுகிறது. அதனால்தான் பறிக்கப்பட்ட தமிழர் நலன்களை மீட்டெடுக்கத் தமிழ் இளைஞர்களின் எழுச்சி இயக்கமாக நாம் தமிழர் இயக்கம் உருவாக்கப்படுகிறது” என்று அரசியல் இயக்கமாக நாம் தமிழர் உருவாக்கப்படுவதைப் பற்றி கூறியிருக்கிறார் சீமான்.
ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழீழத் தனியரசு அமைப்பதே என்று மதுரையில் நடந்த துவக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழை எங்கும் வாழ வைப்போம், உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் பாடுபடுவோம், மகளிருக்கு சம உரிமை, ஊடகம் மூலம் பரவும் பண்பாட்டுச் சீரழிவுகளைத் தடுப்போம், காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கைப் பெற்றுத் தருவது உள்ளிட்ட 26 முதன்மைக் கொள்கைகள் மற்றும் துணைக் கொள்கைகள் அறிவிக்கப்பட்டது.
சீமானின் சிறை அனுபவங்கள்
ஆக்ரோஷமான பேச்சுக்களுக்காக சீமான் பல முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 2008 அக்டோபரில் தமிழ்த் திரையுலகத்தினர் ராமேஸ்வரத்தில் இலங்கை தமிழர்களுக்காக கண்டனப் பேரணியும் பொதுக் கூட்டத்தையும் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காகவும் ராஜீவ் காந்தியை தாக்கிப் பேசியதற்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சீமானும் இயக்குநர் அமீரும் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள்.
மீண்டும் ஈரோட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் ராஜீவ் காந்தியை தாக்கியும் விடுதலைப் புலிகளை ஆதரித்தும் சீமான் பேசினார். மீண்டும் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவிக்க மீண்டும் சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
2009 பிப்ரவரியில் திருநெல்வேலியில் இந்தியாவுக்கு எதிராக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டார். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி விடுவிக்கப்பட்டார்
2010 ஜூலையில் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார் சீமான்.
நாம் தமிழர் கட்சியும் தேர்தல்களும்
நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக உருவானப் பிறகு சந்தித்த முதல் பொதுத் தேர்தல், 2011 மே மாதம் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல். இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை. திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் பிரச்சாரங்களை மேற்கொண்டது.
2014 மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை. ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது. ’எம்.ஜி.ஆர். வழியில் ஈழத்தமிழர்கள் வாழ்வுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் கட்சி அ.தி.மு.க. தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸையும், தி.மு.கவை வீழ்த்த வலிமையான கட்சி அ.தி.மு.கதான். எனவே தான் அ.தி.மு.கவை ஆதரிக்கிறோம்.’ என்று அதற்கான விளக்கத்தை தந்தார் சீமான்.
ஈழப் போரில் விடுதலைப் புலிகளுக்கு உதவவில்லை, தமிழனுக்கு எதிரான சக்திகள் என்று காரணங்களைக் கூறி இந்த இரண்டுத் தேர்தல்களிலும் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் எதிரான நிலையை எடுத்தது நாம் தமிழர் கட்சி.
கட்சியில் பிளவு
2015 ஜனவரியில் நாம் தமிழர் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது. சீமானின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியடைந்த நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க் கொடி எழுப்பினார்கள். சீமான் தலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வெளிப்படையாகவே அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றிய அய்யநாதன் தெரிவித்தார்.
2020 செப்டம்பர் மாதம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ராஜீவ் காந்தி, கல்யாணசுந்தரம் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினர். பின்னர் ராஜீவ் காந்தி திமுகவிலும் கல்யாணசுந்தரம் அதிமுகவிலும் இணைந்தனர்.
சீமான் சர்ச்சைகள்
இலங்கைத் தமிழர் பிரச்சனை, ஈழப் போராட்டம், தனித் தமிழ், தமிழ் தேசியம் போன்றவற்றை குறித்து பேசி வந்த சீமான் முருகன் தமிழ்க் கடவுள், பச்சை ஆடை என்று திசை மாறியது சர்ச்சைகளை கிளப்பியது.
சீமானுக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் மோதல் ஏற்பட்டது. சீமானைக் குறித்து வைகோ கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
சீமான சொல்லும் பல சம்பவங்கள் நிஜத்தில் நடந்ததாக தெரியவில்லை என்ற விமர்சனங்களும் எழத் தொடங்கியது. ஆமைக் கறி சாப்பிட்டது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் எடுத்த படங்கள், துப்பாக்கிச் சுடுவதற்குபெற்ற பயிற்சி என சீமான் குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. அதற்கு நாம் தமிழர் மேடைகளில் பதில் தந்தார் சீமான்.
சந்தித்த இரண்டு சட்டப் பேரவைத் தேர்தல்கள்
2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து கடலூர் கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார் சீமான். அவர் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார்.
தமிழகத்துக்கு ஐந்து தலைநகரங்கள், தமிழருக்கு தனி கொடி, தேசிய கீதம், புதிய அரசு முத்திரை என பலவற்றை நாம் தமிழர் தேர்தல் அறிக்கை சொல்லியது. ’நாங்கள் வெற்றிபெற்றால் தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சியை கொண்டுவருவோம்’ என்று சீமான் தங்களது ஆட்சி எப்படி இருக்கும் என்பதை சொல்லுகிறார்.
இந்தத் தேர்தலில் நாம் தமிழர் இயக்கம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற இயலவில்லை. கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் 12497 வாக்குகள் பெற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தமாக 458,104 வாக்குகளைப் பெற்றது. இது மொத்த வாக்குப் பதிவில் 1.07 சதவீதம்.
2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2017 டிசம்பரில் நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் போட்டியிட்டது. இந்த இடைத் தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் 3802 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 16 லட்சத்து 45 ஆயிரம் வாக்குகள் பெற்றது. வாக்கு சதவீதம் 3.93.
2021 சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி. 2016 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு நீண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் வாக்குறுதிகள் அறிக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீமானின் 2021 தேர்தல் பரப்புரையில் திராவிடக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, தமிழ் தேசிய பேச்சு, விவசாயம் சார்ந்த பொருளாதாரம் , இலவச கல்வி, இலவச மருத்துவம், தண்ணீர், மணல் கொள்ளை, அதிமுக,திமுக அரசுகள் தரும் இலவசங்களை நம்பாதீர்கள், ஊழல் எதிர்ப்பு போன்ற கருத்துக்கள் முன்னிலையில் இருந்தன.
சீமான் அரசியல் குறித்த சர்ச்சைகளும் எழுந்தன. மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறியிருந்த சீமான் அதிலிருந்து பின்வாங்கினார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு நான்காண்டு சிறை தண்டனைப் பெற்று வெளிவந்த சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்.
ஆடு,மாடு மேய்ப்பது அரசு வேலையாக இருக்கும் என்று அவர் பரப்புரையில் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. அதிமுகவைவிட திமுக மீது அதிக விமர்சனம் வைத்தார். அவர் பாஜக, அதிமுகவின் பி டீம் ஆக இருப்பதால்தான் அவர் திமுகவை தீவிரமாக எதிர்க்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது.
இந்த விமர்சனங்களை சர்ச்சைகளைத் தாண்டி நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்து வருவது அதன் செல்வாக்கை காட்டுகிறது. அது ஆட்சியைப் பிடிக்கும் அளவு வளருமா? அல்லது வாக்குகளைப் பிரிக்கும் அளவிலேயே உறைந்து நிற்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.