குறைந்த கட்டணத்தில் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து, உலகின் எந்த மூலைக்கும் சென்று மருத்துவம் பார்க்கலாம் என்ற நிலை உள்ளது.
‘தென்னை மரத்தில தேள் கொட்டினா, பனை மரத்துல நெறி கட்டுச்சாம்’ என்பது புகழ்பெற்ற சொலவடை. உக்ரைன் பிரச்சினைக்கு இந்த சொலவடை மிகவும் பொருந்திப் போகிறது.
உக்ரைன் மீது படையெடுப்பதற்கான முயற்சிகளில் ரஷ்யா ஈடுபட்டிருப்பதும், அதை சகல வழிகளிலும் அமெரிக்கா எதிர்த்து வருவதும்தான் இப்போதைய உலகப் பிரச்சினை. தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் இதைப்பற்றிய செய்திகளை தினசரி வெளியிட்டு வருகின்றன. ஆரம்பத்தில் இந்தப் பிரச்சினையை இந்தியா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், பங்குச் சந்தை சரிவு, தங்கம் விலை உயர்வு என உக்ரைன் பிரச்சினையால் பல்வேறு பாதிப்புகள் வரத் தொடங்கியதும்தான் இதன் மீது இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளது.
உக்ரைன் பிரச்சினையால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது மாணவர்கள் பிரச்சினை. பார்ப்பதற்கு சிறிய நாடாக இருந்தாலும், பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கு பட்டப்படிப்பை வழங்கும் நாடாக உக்ரைன் உள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 18 ஆயிரம் என்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்கள்.
உக்ரைன் நாட்டில் உள்ள கல்லூரிகளில், குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் குறைவாக உள்ளது. உதாரணமாக இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டால், உக்ரைனில் உள்ள தனியார் கல்லூரிகளில் அதிகபட்சமாகவே 3.75 லட்சம் ரூபாய்தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் அங்கு நடைமுறையில் உள்ள மருத்துவ கல்வி சர்வதேச அரங்கில் பல நாடுகளால் அங்கீகரிக்கப்படுகிறது.
உக்ரைனில் உள்ள பல மருத்துவக் கல்லூரிகளும் 200 முதல் 250 ஆண்டுகள் வரை பழமையானதாக உள்ளன. அதனால் குறைந்த கட்டணத்தில் அங்கு மருத்துவம் படித்து, உலகின் எந்த மூலைக்கும் சென்று மருத்துவம் பார்க்கலாம் என்ற நிலை உள்ளது. அதனாலேயே இந்தியாவில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் பலர் உக்ரைனுக்கு செல்கின்றனர்.
மருத்துவக் கல்வியைப் போலவே விவசாயம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் அங்கு பல கல்லூரிகள் உள்ளன. இவற்றிலும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இக்கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற நிலை ஏற்பட, அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. இது அந்நாட்டு மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
“உக்ரைனில் இப்போதைக்கு பெரிய அளவில் ஆபத்து ஏதும் இல்லை. உலகச் செய்திகளில் உள்ள பரபரப்பும், அச்சமும் இங்குள்ள மக்களிடையே இல்லை. அவர்கள் இயல்பாகத்தான் இருக்கிறார்கள். காதலர் தினம்கூட உக்ரைனில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது” என்பது அங்குள்ள மாணவர்கள் சிலரின் கருத்தாக உள்ளது.
அதேநேரத்தில், “உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு இப்போது மத்திய அரசு கூறியுள்ள ஆலோசனையை முன்பே வெளியிட்டிருக்க வேண்டும். கடைசி நேரத்தில் சொல்லியிருப்பதால் படிப்பை பாதியில் விட்டுவிட்டு எப்படி வெளியேறுவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒரே நேரத்தில் பலர் வெளியேற முயற்சிப்பதால் விமான கட்டணம் அதிகமாகி விட்டது. சாதாரண நாட்களில் சில ஆயிரம் ரூபாய்களாக இருந்த விமானக் கட்டணம், தற்போது ஒரே நேரத்தில் பலரும் ஊர் திரும்ப விரும்புவதால் ஒரு லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதுவும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது” என்கிறார்கள் சில மாணவர்கள்.
அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர், போர்ச்சூழலில் தங்கள் குழந்தைகள் இருப்பதை விரும்பவில்லை. அவர்களை உடனடியாக அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதும், இங்கு படிப்பைத் தொடர தங்கள் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்பதும் அவர்களின் கருத்து. அரசு என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்.