No menu items!

இக்கட்டில் இலங்கை. என்ன காரணம்?

இக்கட்டில் இலங்கை. என்ன காரணம்?

உச்சத்துக்கு சென்றுள்ளது இலங்கையின் பொருளாதார நெருக்கடி. எரிவாயு – எரிபொருள் தட்டுப்பாடு, உணவுப் பொருள் தட்டுப்பாடு, உரத் தட்டுப்பாடு, பால்மா தட்டுப்பாடு, மின் வெட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு என இலங்கையில் அன்றாட வாழ்க்கையே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. காகிதங்கள் இல்லாததால் தேர்வுகளே தள்ளி வைக்கப்படும் நிலைக்கு அந்த நாடு வந்துள்ளது.

இலங்கையின் இந்த நெருக்கடிக்கு என்ன காரணம்?

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு

இன்றைய (21-03-2022) நிலவரப்படி, இலங்கையில் ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு 276.93 ரூபாயாக உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. இன்று ஒரு லிட்டர் ‘95 ஒக்டேன்’ ரக பெட்ரோல் 283 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ‘என்ஸ்ட்ரா ஒயில்’ டீசல் ஒரு லிட்டர் 145 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை உள்ளது. 14.2 கிகி கேஸ் சிலிண்டர் விலை 972 ரூபாய். இது முன்பு 300 ரூபாயாக இருந்தது.

கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் எங்கள் வீட்டில் 3 மாதங்களாகவே மண்ணெண்ணெய்யில்தான் சமைக்கிறோம்.

“விலை உயர்வு ஒரு பக்கம் இருக்க அந்த விலையைக் கொடுக்க தயாராக இருப்பவர்களுக்கும் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் கிடைக்காத நிலையே உள்ளது. டாலர் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ‘பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கிறார்கள். சில நேரங்களில் முதல் நாள் சென்றவருக்கு இரண்டாம் நாள்தான் வாங்க முடியும் என்னும் நிலை. கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் எங்கள் வீட்டில் 3 மாதங்களாகவே மண்ணெண்ணெய்யில்தான் சமைக்கிறோம். கொழும்பு தொடங்கி யாழ்ப்பாணம் வரை இலங்கை முழுவதும் இதுதான் நிலை” என்கிறார், நம்முடன் பேசிய, பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பு தமிழர் ஒருவர்.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கட்டுப்பாட்டை இழந்து கடுமையாக அதிகரித்துள்ளன. இன்றைய (21-03-2022) நிலவரப்படி,

பால் (1 லிட்டர்) – 264.27 ரூ.

ரொட்டி (500 கிராம்) – 81.32 ரூ.

வெள்ளை அரிசி (1 கிகி) – 142.67 ரூ.

ஒரு முட்டை  – 28 ரூ.

உள்ளூர் சீஸ் (1 கிகி) – 2,170.00 ரூ.

சிக்கன் ஃபில்லட்டுகள் (1 கிகி) 709.86 ரூ.

மாட்டிறைச்சி  (1 கிகி) 1,176.82 ரூ.

ஆப்பிள் (1 கிகி) 636.44 ரூ.

வாழைப்பழம் (1 கிகி) 172.57 ரூ.

ஆரஞ்சு (1 கிகி) 503.64 ரூ.

தக்காளி (1 கிகி) 196.62 ரூபாய்

உருளைக்கிழங்கு (1கிகி) 216.95 ரூபாய்

வெங்காயம் (1கிகி) 182.35 ரூபாய்

கீரை (1 தலை) 166.39 ரூபாய்

இதன் அடிப்படையில், இலங்கையில் இன்று ஒருவருக்கு ஒரு மாதத்துக்கான ‘காஸ்ட் ஆஃப் லிவ்விங்’ 36489.29 ரூபாய் ஆகும் என்கிறது ‘NUMBEO’ தளம்.

“இது சரியான கணக்கீடுதான்” என்கிறார், நம்முடன் பேசிய இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஹசீன். மேலும், “பாலை விட பால் மாவு பாவிப்பவதுதான் இங்கே வழக்கம். ஒரு மாவு பாக்கெட் 300 ரூபாயாக உள்ளது. இதனால், தேநீர் கடையில் ஒரு டீ 100 முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனாலும், லாபம் இல்லை என பல தேநீர் கடைகள் மூடப்பட்டுள்ளன. 90 சதவிகிதம் அளவுக்கு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன” என்கிறார்.

சாதாரண மக்கள் பாலுக்கும் பாணுக்கும் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கும் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் கஜமுகனுடன் பேசினோம். அவரும் இதனை ஒப்புக்கொள்கிறார். ‘‘இதுதான் இலங்கை முழுவதும் உள்ள நிலை. சாதாரண மக்கள் பாலுக்கும் பாணுக்கும் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கும் வரிசையில் காத்திருக்கிறார்கள். தமது அன்றாட வாழ்க்கையை தக்கவைக்கவே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எரிபொருள் நெருக்கடியால் மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்ல முடியாத நிலை, விவசாயிகள் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலை, மின்சாரம் இன்மையால் தமது தோட்டங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமை –  இதனால் பயிர்கள் அழிவடையும் நிலை என பல அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் மக்கள்.

இதுதவிர பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கள், அதுவும் குறிப்பாக பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் பொதுப் போக்குவரத்தை நம்பி தமது வாழ்வாதாரத்தை நகர்த்தும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இது மிகப் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது” என்கிறார்.

“இலங்கை ரூபாய்க்கு நிகரான டாலரின் பெறுமதி எதிர்வரும் நாட்களில் மேலும் வீழ்ச்சி அடையும் சாத்தியம் உள்ளதால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே, மக்களின் வாழ்க்கை இன்னும் கடுமையானதாக மாறும் வாய்ப்புள்ளது” என்கிறார் ஹசீன்.

இலங்கையின் இன்றைய நெருக்கடிக்கு என்ன காரணம்?

 தேயிலை உற்பத்தி, ஆடை உற்பத்தி, சுற்றுலாப் பயணிகள் வருகை ஆகிய முன்றும்தான் இலங்கைக்கு பெருமளவு  வருமானம் அளித்து வந்தவை. கொரோனாவால் 2020க்குப் பின்னர் இந்த மூன்று வழிகளும் மூடப்பட்டன. சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டதால் தேயிலை, ஆடை உற்பத்தி, சுற்றுலா மூன்றும் முற்றிலும் முடங்கியது. வருமானத்துக்கான வேறு வழிகளும் இல்லாத நிலையில் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.

ஆனால், “கொரோனாவுக்கு முன்பே இலங்கை பொருளாதார நெருக்கடியில்தான் இருந்தது. ஆட்சியாளர்களின் ஊழல் இலங்கையின் இன்றைய பிரச்சினைக்கு முதன்மையான காரணம். ஊழல் காரணமாக நாட்டின் பொருளாதார நிலை ஏற்கெனவே மோசமாகத்தான் இருந்தது. ஆனாலும், சமாளித்து கொண்டு வந்தார்கள். கொரோனா காரணமாக சமாளிக்க முடியாத அளவுக்கு வெடித்துவிட்டது” என்கிறார் ஹசீன்.

பணத்தின் வீழ்ச்சி போன்ற காரணிகளால் உருவான  அந்நியச் செலாவணியின் வீழ்ச்சியும் இலங்கையின் பொருளாதாரத்தை  மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

கஜமுகனும் இதனை ஒப்புக்கொள்கிறார். “இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கூட இவ்வாறான நெருக்கடி இலங்கைக்கு ஏற்பட்டதில்லை. ஏற்கனவே இருந்த பொருளாதார நெருக்கடி, கோவிட்  காரணமாக சுற்றுலாத் துறையில் உருவான வீழ்ச்சி, மத்திய கிழக்கு மற்றும் பிற இடங்களில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து வரும் வெளிநாட்டுப் பணத்தின் வீழ்ச்சி போன்ற காரணிகளால் உருவான  அந்நியச் செலாவணியின் வீழ்ச்சியும் இலங்கையின் பொருளாதாரத்தை  மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

ஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும் தமது தனிப்பட்ட நலன்களை மையமாக வைத்து மேற்கொண்ட திட்டங்களும் இதற்கு காரணம். விமானங்களே ஓடாத விமான நிலையம், இலாபம் ஈட்டாத துறைமுகங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், கோபுரங்கள், மைதானங்கள்  என பல கட்டுமானங்கள் மூலம் கோத்தாவின் குடும்பங்கள் தனிப்பட்ட ரீதியில் சுபிட்சத்தின் நிலைமையை அடைந்திருக்கிறார்கள்.  இத்திட்டங்களின் மூலம் ஆளும் கட்சி மட்டுமல்லாது எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் நல்ல லாபம் பார்த்துள்ளார்கள்.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் முறையற்ற உரக் கொள்கையினை அமல்படுத்தி  நாட்டை இன்னும் பின்னுக்குத் தள்ளினார் கோத்தபய. மாற்றுத் திட்டம் எதுவுமில்லாமல் இரசாயன உரங்களைத் தடை செய்தமை, பின்னர் விவசாயிகளின் போராட்டத்தினால் அதன் நெருக்கடியிலிருந்து மீள தரமில்லாத உரங்களை இறக்குமதி செய்தமை போன்றவற்றின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தை இன்னும் இன்னும் நலிவடையச் செய்தார். உர இறக்குமதியின் போது நடைபெற்ற ஊழலிலும் கோத்தாவின் அமைச்சர்கள் ஈடுபட்டார்கள் என்று கூறப்படுகின்றது. ஆக நாடுதான் நலிவடைகிறதே தவிர கோத்தாவும் அவரது அமைச்சர்களும் சுபிட்சமாகத்தான் உள்ளார்கள்.

கோத்தபயவின் இராணுவ மனநிலையும் நாட்டின் இன்றைய பின்னடைவுக்கு முக்கிய காரணம். பசுமை விவசாயத்திற்குத் தலைமை தாங்குவதற்காக இராணுவத் தளபதி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவ் இராணுவத் தளபதி ஏற்கனவே  கோவிட் நோயைத் தடுக்கும் தேசிய மையத்தின் தலைவராக இருந்தபோது,  கோவிட் பெருந்தொற்றை தவறாகக் கையாண்டிருந்தார் எனப் பரவலாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஒரு சுகாதாரப் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒரு இராணுவத் தளபதியை நியமித்தமைக்காக கோத்தபய கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார். சுகாதாரப் பிரச்சனைகளையோ அல்லது விவசாயப் பிரச்சினைகளையோ கையாள அது சார்ந்த அறிவு உள்ள நபர்களை நியமிக்காமல் அனைத்துக்கும் இராணுவ தளபதிகளை நியமிப்பதும் இராணுவத்தை நம்பி இருப்பதும் கோத்தபயவின் இராணுவ மனநிலையை எடுத்துக் காட்டுகின்றது. ஒரு பிரச்சினை எழும்போது அது சார்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்காமல் தன்னிச்சையாக அல்லது இராணுவத்தின் உதவியுடன் முடிவுகளை எடுக்கும் – நாட்டை மேலும் இராணுவமயப்படுத்தும் நடவடிக்கை தொடர்கிறது.

முறையான பொருளாதாரக் கொள்கைகளினை அமல்படுத்துவதற்குப் பதிலாக பணத்தை அச்சடித்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு விடலாம் என நம்புகிறார் கோத்தபய. கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டும் மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் அச்சிடப்பட்டுள்ளது. எனினும் அந்நியச் செலாவணி பற்றாக் குறையால் அத்தியாவசிய உணவு மற்றும் எரிபொருட்களைக் கொள்வனவு செய்யமுடியாத நிலையிலேயே காணப்படுகிறது இலங்கையின் பொருளாதாரம்.

இதனால், எதிர்க்கட்சிகளும் மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். அதிபரின் மாளிகை முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ‘‘பிளீஸ் எங்களை விட்டுறுங்கோ, நீங்கள் ஆட்சி செய்தது போதும், தயவு செய்து பதவி விலகிவிடுங்கள்” என பொதுமக்கள் வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது ஜனாதிபதி கோத்தபாயவின் நிலைமை. கோத்தபாயாவுக்கும் அவரது கட்சிக்கும் வாக்களித்தோம் என மனப்பூர்வமாக ஒப்புக்கொள்பவர்களைக் காண்பது இலங்கையில் இப்போது அரிதாகி வருகிறது” என்கிறார் கஜமுகன்.

அன்று தமிழ் பகுதிகளில் இது போன்ற கொடுமையான சூழலை உருவாக்கிய இலங்கை அரசு இப்போது அதே சிரமங்களை நாடு முழுவதிலும் உருவாக்கி வைத்துள்ளது. 

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...